மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

கொரோனா தடுப்பு: விஜயபாஸ்கர் சொன்ன ஆலோசனைகள்!

கொரோனா தடுப்பு: விஜயபாஸ்கர் சொன்ன ஆலோசனைகள்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (மே 22) சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழு ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு ஊரடங்கு, கொரோனா தடுப்பு தொடர்பான தனது கருத்துகளை எடுத்து வைத்தார். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் கூட்டத்தில் தான் பேசிய விஷயங்கள் குறித்து விளக்கினார்.

“இந்தக் கூட்டத்தில் முதல் நோக்கமாக ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி கருத்து கேட்டார்கள். எங்களுடைய ஆட்சியில் ஏற்படுத்தியதுபோல கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த வைரஸின் பரவல் சங்கிலியை உடைக்க முடியும். அப்படி முழுமையான ஊரடங்கை அமல்படுத்தும்போது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

அப்போது நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் விவசாயத்துறையினரோடு சேர்ந்து காய்கறிகள், மளிகைப் பொருட்கள், பால் ஆகியவற்றை மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கே சென்று குறைந்த விலையில் கொடுத்தோம். அதுபோல இப்போதும் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

இன்று ஆக்ஸிஜன் தேவை என்கிற நிலையோடு, 40 - 50 சதம் நுரையீரல் பாதிப்போடு வருகிற நிலை இருக்கிறது. அதனால் இப்போதைய அவசியத் தேவை, ஆரம்ப நிலையிலேயே நோய்த் தொற்றைக் கண்டறிய வேண்டும். நோய்த் தொற்று ஏற்பட்ட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு அது பரவக் கூடாது. அதற்கு ஏற்கனவே அம்மா ஆட்சியில் நடத்தியது போல நிறைய இடங்களில் காய்ச்சல் கண்காணிப்பு முகாம்கள் தொடங்க வேண்டும்.

ஏற்கனவே நாம் மேற்கொண்ட கொரோனா பரிசோதனைகளை ஒப்பிடும்போது இப்போது நாம் அதிக சோதனைகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகமாக இருப்பது கவலைக்குரிய விஷயம். அரசு போர்க்கால வேகத்தில் பன்முக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறது” என்று கூறிய விஜயபாஸ்கர் தொடர்ந்து,

“அதிக கோவிட் சென்டர்கள், எல்லா வசதிகளுடன் கூடிய கோவிட் ஸ்பெஷாலிட்டி மருத்துவனைகளை உருவாக்க வேண்டும். அம்மா ஆட்சியில் கிங்ஸ் மருத்துவமனையை 750 படுக்கைகளோடு உருவாக்கினோம். இன்றைக்கு அதுதான் சிறப்பாக செயல்பட்டு அரசாங்கத்துக்கு பெயர் எடுத்துக்கொண்டிருக்கிறது, ஓமந்தூரார் மருத்துவமனையை கோவிட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உருவாக்கினோம். இதுபோல இப்போது எல்லா வசதிகளுடன் கூடிய கோவிட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும் என்பதை முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன்.

இன்னொரு முக்கியமான விஷயம் பாசிட்டிவ் என்றதுமே எல்லாரும் ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி மருத்துவமனை என்று வருகிறார்கள். இதைத் தவிர்க்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கோவிட் ஸ்க்ரீனிங் சென்டர்களை உருவாக்க வேண்டும். அங்கே கோவிட் பாசிடிவ் ஆனவர்களை மைல்டு, மாடரேட், சிவியர் என்று பிரித்து யாருக்கு எந்த மருத்துவமனை என்பதை நாம் ஒதுக்கீடு செய்தால்தான்... பதற்ற நிலையை நாம் தணிக்க முடியும். இப்போது 90% ஆக்ஸிஜன் சக்தி இருக்கக் கூடியவர் ஒரு மருத்துவமனை படுக்கையை ஆக்கிரமித்துவிட்டார் என்றால், உள்ளபடியே அவரைவிட குறைவான ஆக்ஸிஜன் சக்தி உள்ளவருக்கு அந்த படுக்கையைக் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே இந்த நிலையைத் தவிர்க்க ஸ்க்ரீனிங் சென்டரில் உள்ள மருத்துவர்கள்தான் முக்கியப் பங்காற்ற முடியும். தாக்கத்தின் அளவைப் பொறுத்து அவர்களுக்கு மருத்துவமனைகளை ஒதுக்க வேண்டும்” என்று முக்கிய கருத்தை கூறினார்.

மேலும், “வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் அரசு கண்காணிப்போடு இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை மேலும் கண்காணிக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பாசிட்டிவ் ஆனவர்கள் வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம், சிடி ஸ்கேன் நிறைய தனியார் மருத்துவமனைகள் கோவிட் சென்டர் நடத்துகிறார்கள். அவர்களுக்கு புரோட்டாகால் எனப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மருத்துவர் குழு அளிக்க வேண்டும். தினமும் சூம் மீட்டிங் நடத்தி தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்க வேண்டும். இதையெல்லாம் நான் முதல்வரிடம் வலியுறுத்தினேன்” என்று கூறினார் விஜயபாஸ்கர்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

ஞாயிறு 23 மே 2021