தடுப்பூசி (பற்றாக்குறை) அரசியலும் தமிழகத்தின் முன்னுள்ள தெரிவுகளும்!

politics

பகுதி 1: பெருந்தொற்றும் சந்தை சார்ந்த தீர்வும்!

**எல்லா பிரச்சினைக்கும் சந்தை சார்ந்த தீர்வை முன்வைத்து வருகிறார்கள். உணவு, கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றில் சந்தையை அனுமதித்து அதைத் தீர்மானிக்கச் சொன்னால் என்ன விளைவுகளை ஏற்படுத்தும், அதற்கு நாம் என்ன விலை கொடுக்கிறோம் என்பதைப் பேசுகிறது இந்தப் பகுதி.**

கொரோனா இரண்டாவது அலை சுனாமியாக இந்தியாவைத் தாக்கி மக்களை சரியச் செய்கிறது என்றால், ஒன்றியத்தின் மெத்தனமும் செயலற்ற தன்மையும் மக்களை கொத்துக்கொத்தாக மடியச் செய்கிறது. இதிலிருந்து மக்களைக் காக்க, மாநிலங்கள் வேறுவழியின்றி மக்களை வீடுகளில் முடங்கி இருக்க சொல்லி இருக்கின்றன. இப்படி உயிரைக் காக்க வீட்டுக்குள் முடங்கினால் வாழ வழியின்றி வறுமையில் மக்கள் வீழ்கிறார்கள். இப்படி வாழ்வையும் வாழ்வாதார இழப்பையும் குறைத்து இயல்புநிலைக்குத் திரும்ப, தடுப்பூசிதான் தீர்வு என்ற நிலையில் அதற்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தத் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கும் ஒன்றியத்தின் செயலற்ற தன்மைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

**அரசியலாக்கப்பட்ட பெருந்தொற்று **

சென்ற ஆண்டு ஊகான் நகரத்தில் முள்முடி நச்சுக்கிருமி (Covid Virus) பரவி அந்த நகரமும் மற்ற பகுதிகளும் முடக்கப்பட்டு அதைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு போராடிக்கொண்டிருந்தபோது அது ஆய்வகத்தில் சீன அரசால் தோற்றுவிக்கப்பட்டது, அது சீன நச்சுக்கிருமி (China Virus), அந்த நாடு உண்மையான தொற்று எண்ணிக்கையும் இறப்பையும் மறைக்கிறது, நச்சுக்கிருமி குறித்த தகவல்களை உலகுக்குச் சொல்லாமல் மறைக்கிறது, நச்சுக்கிருமியைக் கட்டுப்படுத்துகிறேன் என்ற பேர்வழியில் தனிமனித உரிமைகளை நசுக்குகிறது எனப் பல குற்றச்சாட்டுகள் நச்சுக்கிருமியைவிட வேகமாக உலக ஊடகங்கள் வழியாகப் பரவியது. இந்த நச்சுக்கிருமியின் தோற்றுவாய் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என அப்போதைய டிரம்ப் நிர்வாகம் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து சீனாவைத் தனிமைப்படுத்த முயற்சி செய்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள் பங்கேற்றன. இந்தத் திரிபுத்தகவல் போரில், இனவெறி – இனவெறுப்பு பிரச்சாரத்தில் இது என்னவென்றே புரியாமல் பெருமளவு இந்திய மக்களும் பங்கேற்றார்கள்.

**பெருந்தொற்று கோருவது ஒற்றுமைக்கான அரசியல் **

இந்த பெருந்தொற்று அந்த நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல; அனைத்துலக மக்களின் பிரச்சினை. உலக அரசியல் தலைவர்கள் உடனடியாக ஒன்றுகூடி உலக மக்களை எப்படி ஒற்றுமையாக நின்று காப்பது என விவாதித்திருக்க வேண்டும். இதற்கு முன்பு உலகப்போரின்போது இதுபோன்ற பெருந்தொற்றைச் சந்தித்து பேரிழப்பை எதிர்கொண்ட உலகம் உடனடியாக தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். சீன மக்களையும் உலக மக்களையும் காக்க எல்லோரும் ஒற்றுமையுடன் போராடி இருந்திருக்க வேண்டும். இதைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த பிறகு சீன அரசு தகவலை மறைத்தது குறித்தும், இந்த நச்சுக்கிருமி இயற்கையாக பரவியதா அல்லது உயிர்க்கொல்லி ஆயுத (Bio Weapon) உருவாக்க முனைப்பில் இருந்த ஆய்வகத்தில் இருந்து உருவானதா அல்லது உலகப்பொது தடுப்பூசி (Universal Vaccine) திட்டத்துக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது ஏற்பட்ட விபத்தா என்பது குறித்து விசாரித்து, யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்தின்போது அந்தப் பிரச்சினையை உலகம் இப்படித்தான் கையாண்டது.

**ஒற்றுமையைத் தடுத்த பொருளாதாரப் போட்டி! **

ஆனால், இதற்குப் பதிலாக அப்போது நடந்துகொண்டிருந்த அமெரிக்க – சீன வர்த்தகப் போரில் யார் முதலில் தோல்வியை ஒப்புக்கொண்டு உடன்பாட்டுக்கு வருவது என மல்லுக்கட்டிக் கொண்டிருந்த சூழலில் வந்த இந்தப் பெருந்தொற்றை அரசியல் ஆயுதமாக்கி சீனாவை வீழ்த்த முற்பட்டதன் விளைவு, உலகம் ஒற்றுமையின்றி சிதறியது. மக்கள் மனிதாபிமானத்தோடு ஒருவருக்கொருவர் உதவி மீள்வதை நோக்கி செல்வதற்குப் பதிலாக, இனவெறியோடு ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வெறுப்பை வளர்த்துக் கொள்வதை நோக்கி இந்த அரசியல் இட்டுச் சென்றது. ஒற்றுமையாகத் தொற்று பரவலைத் தடுக்க நாடுகளுக்கிடையிலான விமான, கப்பல் போக்குவரத்தைக் குறைத்து அல்லது நிறுத்துவதற்குப் பதிலாக அவரவர் பொருளாதார இழப்பை மனதில்கொண்டு போட்டி மனப்பான்மையுடன் தனது பொருளாதாரம் பாதிக்காத வகையில் மற்றவரின் இழப்பில் பலனடையும் நோக்கில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டது. இறுதியில் வலுவான பொதுத்துறை மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட, ஒரு தேசமாக ஒற்றுமையுடனும் மக்களின் ஒத்துழைப்புடனும் கொரோனாவை எதிர்கொண்ட நாடுகள் முள்முடி நச்சுக்கிருமியை வென்றன. மற்ற நாடுகள் அதனிடம் தோற்று வீழ்ந்தன.

**சந்தை… எப்படித் தீர்மானிக்கும்? **

அடுத்து, இந்தப் புதிய முள்முடி நச்சுக்கிருமிக்கான மருந்தைக் கண்டுபிடித்து நோயினால் மரணிக்கும் மனிதர்களை எப்படிக் காப்பது என்பது தலையாய பிரச்சினையாக உருவெடுத்தது. அப்போதைய (இப்போதும்) உடனடி தேவை மரணத்தைத் தடுக்கும் நோய்தீர்க்கும் மருந்துகள். அதற்கு அடுத்து நோய்வராமல் தடுக்கும் தடுப்பூசிகள். விபத்து நடந்து சாலைகளில் துடித்துக்கொண்டிருந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு உலக மருந்து நிறுவனங்கள் அனைத்தும் தடுப்பூசி ஆய்வுகளுக்குப் பல நூறு கோடி டாலர் முதலிட்டு முழுமூச்சுடன் ஆய்வுகளில் ஈடுபட்டன. மருந்து கண்டுபிடிப்புக்கான ஆய்வுகள் நடக்கிறதா எனத் தேடும் அளவுக்குச் சூழல் இருக்கிறது. ஏனென்றால் இந்த மருந்து தேவைப்படுவோர் 10 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள். ஆனால், தடுப்பூசி தேவைப்படுவோர் 100 விழுக்காடு. ஆதலால் அதிக சந்தை வாய்ப்பும் லாபமும் கிடைக்க வாய்ப்புள்ள தடுப்பூசிக்கான ஆய்வை சந்தை தேர்ந்தெடுத்தது. எந்த வரைமுறையுமின்றி எல்லாவற்றிலும் தனியார்த்துறையை அனுமதித்து அரசுகள் தலையிடாமல் சந்தையையே தீர்மானிக்கவிட்டால் அதன் தெரிவும் விளைவும் எப்படி இருக்கும் என்பதற்கான பாடத்தை இப்போது நடைமுறையில் கற்றுக்கொண்டிருக்கிறோம்.

**சந்தை… பிரச்சினையை எப்படி அணுகும்? **

பெருந்தொற்று ஏற்பட்ட சில நாட்களில் முள்முடி நச்சுக்கிருமியின் மரபணு கட்டமைப்பை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்து பொதுவெளியில் வெளியிட்டவுடன் உலகின் எல்லா பகுதிகளிலும் தடுப்பூசி உருவாக்கத்துக்கான ஆய்வுகள் மின்னல் வேகத்தில் தொடங்கின. இந்தப் பெருந்தொற்று என்பது உலகின் பொது பிரச்சினை. இதற்கான தீர்வு என்பது லாபத்துக்கானதாக அல்லாமல் மக்களைக் காக்கும் மனிதநேயம் கொண்டதாக உலக அரசுகள் மாற்றி இருக்க வேண்டும். எல்லோரும் ஒன்றிணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு கிடைக்கும் தீர்வுகளைப் பொதுவாக தேவை, சூழலுக்கேற்ப பயன்படுத்தி மக்களைக் காத்து விரைந்து இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவர முன்வந்திருக்க வேண்டும். ஆய்வு நிறுவனங்களையும் மருந்து நிறுவனங்களையும் அரசுகள் முடுக்கிவிட்டு அந்த ஆய்வுக்கான செலவுகளை அரசுகளே ஏற்றுக்கொண்டு பிரச்சினையை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இந்தத் தடுப்பூசி, மக்களுக்கு பொதுவானது (Public Goods); பணமுள்ள நாடுகளுக்கும் தனிநபர்களுக்குமானது அல்ல (Private Goods) என்ற நிலையை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் அரசுகள், நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக நிறுவனங்கள், அரசுகளைத் தமது கைப்பாவை ஆக்கி தமது நலன்களை முன்னெடுக்க வைத்தன. எல்லோருக்கும் பொதுவாக தடுப்பூசி வழங்க உலக சுகாதார அமைப்பு தொடங்கிய நடவடிக்கைகள் குப்பையில் வீசப்பட்டது. மனிதர்களைக் காக்கும் தடுப்பூசி மக்களின் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டியதை மறுத்து, உலகப்பொது தடுப்பூசி (Universal Vaccine) தீர்வை முன்வைக்கும், இதற்காக பல நூறு கோடி டாலர் முதலிட்டிருக்கும் ‘கொடையாளர்’ பில்கேட்ஸ் ஏழை நாடுகளுக்கு உதவும் ‘கொடை சார்ந்த’ மாற்றுத் திட்டத்தை முன்வைத்தார். இப்படி ஒருமித்த செயல் திட்டமின்றி ஒவ்வொருவரும் அவரவர் நலன் சார்ந்து இயங்குவது இந்தப் பிரச்சினையை முடிவின்றி தொடரத்தானே செய்யும்? இதில் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நிறுவனமும் இழப்பைத்தானே சந்திக்க நேரிடும்? பின்பு ஏன் ஒற்றுமையின்றி செயல்படுகிறார்கள் என்ற கேள்வி எழலாம்.

**சந்தை… பிரச்சினையைத் தீர்க்குமா? வளர்க்குமா? **

இந்த நோய்த்தொற்றின் காரணமாக, பெரும் இழப்பைச் சந்தித்தது சுற்றுலாத்துறையும் போக்குவரத்துத்துறையும்தான். இந்தப் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்பு அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் மேக்ஸ்737 வகை விமானங்கள் விபத்தைச் சந்தித்து உலகம் முழுவதும் இவை பறக்க தடை விதிக்கப்பட்டன. அந்த நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்து ட்ரில்லியன் டாலர் நிறுவனமான இதன் உற்பத்தி, கிட்டத்தட்ட நின்றே போயிருந்தது. எல்லா நாடுகளும் விமானம் வாங்க கொடுத்திருந்த ஆணைகளைத் திரும்ப பெற்றார்கள். இதனிடம் இருந்த மொத்த சந்தையையும் பிரான்ஸ் நிறுவனமான ஏர்பஸ் பிடித்திருந்தது. மின்னணு சாதனங்களின் சந்தை வீழ்ச்சி அடைந்து உலகின் முன்னணி காட்சித்திரைகளை உருவாகும் AUO, Innolux போன்ற நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கின.

பெருந்தொற்று மின்னணு சாதனங்களுக்கான தேவையை அதிகரித்து நட்டத்தில் இயங்கிய இந்தத் துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றது. பொது முடக்கம் மரபான நேரடி பணம் சார்ந்த விற்பனையைப் பெருமளவு குறைத்து அந்த இடத்தை மின்னணு வணிக முறை பிடித்துக்கொண்டு இதில் ஈடுபடும் அமேசான், ஜியோ போன்ற நிறுவனங்கள் பெருலாபமீட்ட வாய்ப்பாக அமைந்தது. திரையரங்குகளின் இடத்தை நெட்ஃபிளிக்ஸ் போன்ற மின்னணு காட்சி ஊடகங்கள் பதிலீடு செய்ய வகை செய்தது. மரபான பெட்ரோலில் இயங்கும் வாகன உற்பத்தி, பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. இதோடு மகிழுந்துகள் உருவாக்க தேவையான சில்லுகளுக்கான தட்டுப்பாடு இதன் உற்பத்தியைக் கடுமையாக பாதித்திருக்கிறது. மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் இவற்றின் இடத்தை பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. உலகமயத்தினால் பின்னிப்பிணைந்து கிடந்த உலகப் பொருளாதாரம் அதை உடைத்துக்கொண்டு அந்தந்த நாடுகளில் உற்பத்தி செய்வது, இனிவரும் பொருளாதாரத்தின் முக்கிய இடம் பிடிக்கப்போகும் சில்லுகளின் உற்பத்தியைத் தத்தமது இடத்தில் மேற்கொள்வது என ஒன்றாக இருந்த உலகின் உற்பத்தி உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. போயிங் நிறுவனம் இந்த இடைவெளியில் மீண்டும் சந்தைக்கு வர தயாராகி இருக்கிறது. மருந்து நிறுவனங்களுக்கான வாய்ப்பைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

**யாருக்கு பிரச்சினை தீர வேண்டும்? **

எனவே நமக்கு வேண்டுமானால் இது இழப்பாக இருக்கலாம். நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனத்தின் இழப்பும் மற்றொரு நிறுவனத்தின் வாய்ப்பு. ஆகவே, அவர்களுக்கு இந்தப் பிரச்சினையை ஒற்றுமையுடன் போராடி உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய எந்த தேவையும் இல்லை. மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பொதுவான அரசுகளை அவர்கள் தேவை சார்ந்து இயங்க வைத்து அதற்கேற்ற அரசியலை முன்னெடுக்க வைத்ததில் வியப்பேதும் இல்லை. இந்தப் பெருந்தொற்றினால் இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கும் மக்களான நாம்தான் ஒற்றுமையாக ஒருமித்த குரலில் இந்த அரசுகளை இந்தத் தொற்றிலிருந்து வெளிவரும் அரசியலை முன்னெடுக்க வைத்திருக்க வேண்டும். மாறாக, சீனர்களைக் குற்றம் சாட்டுவதிலும், முஸ்லிம்களைக் குற்றவாளிகள் ஆக்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டு, இந்தப் பிளவு அரசிலை மேற்கொள்பவர்களின் சதி வலைகளில் வீழ்ந்ததன் விளைவுகளை இன்று அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.

**தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்… **

**பாஸ்கர் செல்வராஜ்**

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு **[naturebas84@gmail.com](mailto:naturebas84@gmail.com)**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *