மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

இன்னும் மூன்று மாதம்: சசிகலா- தினகரன் போடும் கணக்கு!

இன்னும் மூன்று மாதம்:  சசிகலா- தினகரன் போடும் கணக்கு!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ‘அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைப்போம்’ என்று சொல்லி களமிறங்கிய தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்தபோதும் 66 சட்டமன்ற உறுப்பினர்களோடு பிரதான எதிர்க்கட்சியாக உட்கார்ந்துவிட்டது. இனிமேல் தினகரனின் ரோல் அதிமுகவுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ என்ன என்ற மிகப்பெரிய கேள்விக்குறியும் தேர்தல் முடிவுகள் மூலம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் அமமுகவின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் திமுக போன்ற மாற்றுக் கட்சிகளுக்கு செல்வதற்குத் தயாராகிவிட்டனர். அதேபோல சசிகலாவும் தேர்தல் முடிவுக்குப் பின் அமைதியாகவே இருக்கிறார்.

ஏற்கனவே தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் சசிகலாவின் ரியாக்‌ஷன் என்ன என்பது குறித்து ஸ்டாலின் -மோடி சந்திப்பு: காத்திருக்கும் சசிகலா என்று தலைப்பிட்டு மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சந்தித்து பேசிய பிறகு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகள் சூடுபிடிக்கும் என்று சசிகலா எதிர்பார்ப்பதாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில் தனது டெல்லி பயணம் குறித்து நேற்று (மே 21) திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தற்போது டெல்லிக்குப் போக முடியாத சூழ்நிலை இருக்கிறது. சூழ்நிலை ஏற்படும் போது பிரதமரை நேரில் சந்தித்து நமது உரிமைகளைக் கேட்டுப் பெறுவேன்” என்று கூறியுள்ளார். ஆக முதல்வர் ஸ்டாலின் கொரோனா பாதிப்புகள் எல்லாம் முற்றிலும் நீங்கிய பிறகே டெல்லி பயணத்தைத் திட்டமிட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

இதற்கிடையில் அமமுக நிர்வாகிகள் பலரும் மாற்றுக்கட்சிக்குத் தாவத்துடிக்கும் தகவல்கள் சில மண்டல பொறுப்பாளர்கள் மூலமாகத் தினகரன் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது, உடனே தினகரனின் உதவியாளர் ஜனா கட்சி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, “இவ்வளவு நாட்கள் கஷ்டபட்டீர்கள். இன்னும் மூன்று மாதங்கள் அமைதியாக இருங்கள். நல்லது நடக்கும், மீறி போனீர்கள் என்றால் பிறகு வருத்தப்படுவீரர்கள்’ என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

அது என்ன மூன்று மாதம் என்று அமமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“கொரோனா தடுப்புப் பணியில் தற்போது தீவிரமாக இருக்கும் திமுக அரசு இன்னும் மூன்று மாதங்களில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல்களைத் அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்போகிறது. மேலும் அதிமுகவினர் பலரை திமுக தங்கள் பக்கம் வருமாறு வலை வீசி வருகிறது. ஒரு காலத்தில் போட்டி தேமுதிக என்று எதிர்க்கட்சியான தேமுதிகவை அதிமுக உடைத்தது மாதிரி, இப்போது சட்டமன்றத்தில் அதிருப்தி அதிமுக என்ற குழுவை உருவாக்க திமுக கடுமையாக வேலைபார்த்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் வலிமையான தலைமை இருந்தாலொழிய அதிமுகவை காப்பாற்ற முடியாது.

இதையெல்லாம் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ.க்களிடமும், நிர்வாகிகளிடமும் எடுத்துச் சொல்லி, அதன் அடிப்படையில் அமமுக அதிமுக இணைக்கும் பேச்சுவார்த்தை சத்தமில்லாமல் நடந்துவருகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை என்றால், அதிமுக நிர்வாகிகள் ஆதரவோடு சட்ட ரீதியாக அதிமுகவை கைப்பற்றுவார் சசிகலா அதற்கான வேலைகள் நடைபெற்றுவருகிறது.

இன்னொரு பக்கம்... சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உட்படப் பல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ,க்கள் சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்கள். சந்திக்க நேரம் கேட்பவர்களின் பெயர் ஊர், மாவட்டம், கட்சி பொறுப்பு என அனைத்துத் தகவல்களையும் குறிப்பு எடுத்துக்கொண்டு சசிகலாவிடம் ஒரு ஃபைலையே கொடுத்திருக்கிறார் உதவியாளர் கார்த்தி. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் கண்டிப்பாக உங்களை சந்திப்பார் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நிர்வாகிகளுக்கு சசிகலாவே தொடர்புகொண்டு இதைச் சொல்லியுள்ளார்.

சசிகலா, அதிமுக நிர்வாகிகளைச் சந்திக்க வெயிட் பண்ண வைப்பதையும், தினகரன், அமமுக நிர்வாகிகளை மூன்று மாதம் அமைதியாக இருக்கச் சொல்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி சசிகலாவின் 67வது பிறந்தநாளில் நல்ல சேதி வரக் கூடும்” என்கிறார்கள் அமமுக நிர்வாகிகள்.

-வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

சனி 22 மே 2021