மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

புதுச்சேரி: பௌர்ணமியன்று எம்.எல்.ஏ.க்களோடு அமைச்சர்கள் பதவியேற்பு?

புதுச்சேரி:  பௌர்ணமியன்று எம்.எல்.ஏ.க்களோடு  அமைச்சர்கள் பதவியேற்பு?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதியே வெளிவந்தும், வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவே பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில் தற்போது அதற்கு ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வரும் பௌர்ணமி அன்று பதவியேற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி முடிந்து, என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி பெரும்பான்மை பிடித்தது. மே 7ஆம் தேதி, துணை நிலை ஆளுநர் மாளிகையில் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் ரங்கசாமி. ஆனால், அவர் மே 9ஆம் தேதி கொரோனா தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவந்தவர் மே 17 ஆம் தேதிதான் வீடு திரும்பினார்.

தான் சிகிச்சையிலிருந்தாலும் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்ள தற்காலிக சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் பெயரை, துணை நிலை ஆளுநருக்கு முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்திருந்ததாகவும் துணைநிலை ஆளுநர் அதற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் வெளிப்படையாகவே பேசினார்கள்.

இந்த நிலையில் நேற்று மே 21ஆம் தேதி, தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணனை அறிவித்துள்ள துணைநிலை ஆளுநர் மாளிகை தரப்பில், முதல்வர் ரங்கசாமியைத் தொடர்புகொண்டு... ” “உங்கள் உடல்நலம் முடியவில்லை என்றால் காணொலி மூலம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்வில் தாங்கள் கலந்துகொள்ளுங்கள்’ என்று ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். எனினும் தான் நேரடியாக சட்டமன்றத்துக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார் முதல்வர் ரங்கசாமி.

லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ, மே 24ஆம் தேதி, துணை நிலை ஆளுநர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராகப் பதவியேற்றுக்கொள்கிறார். மறுநாள் மே 25ஆம் தேதி சட்டமன்ற செயலாளர் மூலமாக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்ள அழைப்பு அனுப்பி, மே 26ஆம் தேதி, பௌர்ணமி அன்று எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்வு நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

இப்போது வரை முதல்வர் மட்டுமே பதவியேற்றிருக்கிறார். எந்த அமைச்சர்களும் பதவியேற்கவில்லை. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும் நிர்வாகப் பணிகளில் தேக்கம் நிலவியுள்ள நிலையில், பௌர்ணமி அன்றே புதுச்சேரியில் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொள்ள ஆலோசனைகள் செய்துவருகிறார்கள் பாஜகவினர்.

-வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 22 மே 2021