மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

திமுகவின் ராஜ்ய சபா ரேஸ்: முதல் ரவுண்டில் யார் யார்?

திமுகவின் ராஜ்ய சபா ரேஸ்: முதல் ரவுண்டில் யார் யார்?

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று ராஜ்யசபா உறுப்பினர்கள் இடம் காலியானதால் விரைவில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் இருந்து தற்போது 15 பேர் ராஜ்யசபாவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதிமுக சார்பில் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சேலம் சந்திரசேகரன், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், எம்.சண்முகம், பி.வில்சன், ஆர்.எஸ்.பாரதி. டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

மேலும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ஆகியோர் அதிமுக ஆதரவிலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக ஆதரவிலும் ராஜ்யசபா உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதுதான் இப்போதைய ராஜ்யசபாவில் தமிழகத்தின் நிலவரம்.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் முகமது ஜான் உடல் நலக் குறைவு காரணமாக காலமாகிவிட்டார். ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அதிமுகவின் வைத்திலிங்கம், கே.பிமுனுசாமி ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றுவிட்டதால் மே 10 ஆம் தேதி தங்களது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.

அதனால் தற்போது மூன்று ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவி எதிர்பாராதவிதமாக காலியாகியிருக்கிறது. மேலும் அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரது ராஜ்யசபா உறுப்பினர் பதவி 2022 ஜூன் மாதம் முடிகிறது.

இந்நிலையில் தற்போது காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால், தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் திமுகவுக்கே மூன்று இடங்களும் செல்ல வாய்ப்பிருக்கிறது. எனவே திமுகவில் யாருக்கு ராஜ்யசபா பதவி என்ற எதிர்பார்ப்பு மட்டுமல்ல போட்டியும் ஏற்பட்டிருக்கிறது.

அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது தன் பலத்தை வைத்து வாசன், அன்புமணி ஆகியோரை எம்பியாக்கியது. அதுபோல திமுக தன் பலத்தை வைத்து ஏற்கனவே வைகோவை ராஜ்யசபாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த பின்னணியில் காங்கிரஸ் கட்சி தற்போதைய ராஜ்யசபா காலியிடங்களில் ஒன்றை தனக்கு திமுக கொடுக்கும் என்று எதிர்பார்த்து வருகிறது.

“2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணியில் காங்கிரஸுக்கு வெறும் 25 சீட்டுகள்தான் கொடுத்தது திமுக தலைமை. அப்போது ராஜ்யசபாவில் காங்கிரசுக்கு ஒரு இடம் தருவதாகவும் அதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ், அழகிரிக்கு தருவதாகவும் திமுக வாய்மொழியாக உத்தரவாதம் அளித்திருக்கிறது. எனவே அந்த வகையில் கே.எஸ். அழகிரிக்கு வாய்ப்பு இருக்கிறது” என்று கூறுகிறார்கள் காங்கிரஸார்.

ஏற்கனவே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபாவுக்கு செல்வதற்காக தமிழகத்தில் இருந்து ஒரு இடத்தை ஒதுக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மூலமாக கோரிக்கை வைத்தார். அப்போதே ஸ்டாலின் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இப்போது அந்த வாய்ப்பை கே.எஸ். அழகிரிக்குக் கொடுப்பாரா என்பதும் விவாதத்துக்குரிய கேள்வியாகவே நீடிக்கிறது.

இந்த நிலையில் திமுக சார்பிலும் ராஜ்யசபா ரேஸுக்கு கடுமையான போட்டி நடக்கிறது.

“சேலம், கோவை மாவட்டங்களில் திமுகவுக்கு என ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர்தான் இருக்கிறார். எனவே இங்கே நடக்கும் அரசு விழாக்களில் கூட திமுகவினர் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் குமரி மாவட்டத்தில் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலையில், அரசு விழாக்களில் அதிமுக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது குமரியைச் சேர்ந்த விஜயகுமாரை ராஜ்யசபா எம்பியாக்கி அரசு நிகழ்வுகளில் அதிமுக சார்பில் பங்கேற்கச் செய்தார் ஜெயலலிதா. இப்போது ஸ்டாலினும் அதே பாணியை பின்பற்ற வேண்டும். விரைவில் சேலம், கோவை மாவட்டங்களில் இருந்து ஒருவரை ராஜ்யசபாவுக்கு அனுப்ப வேண்டும் என்று தலைமைக்கு கோரி வருகிறோம். குறிப்பாக சேலத்தில் இருந்து செல்வகணபதி, முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி உள்ளிட்டோரில் ஒருவருக்குக் கொடுக்கலாம்”என்கிறார்கள் கொங்கு உடன் பிறப்புகள்.

திமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரத்தில் ராஜ்ய சபா ரேஸ் பற்றி விசாரித்தபோது,

“தமிழகத்தில் இருந்து தற்போது காலியான ராஜ்யசபாவின் மூன்று இடங்களுக்கு உடனே தேர்தல் நடத்துவார்களா அல்லது நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரது ராஜ்யசபா உறுப்பினர் பதவி 2022 ஜூன் மாதத்தோடு முடிவதால் சேர்த்து நடத்துகிறார்களா என்று தெரியவில்லை.

ஆனால் உடனடியாக தேர்தல் அறிவித்தால் மூன்றும் திமுகவுக்கே. இம்மூன்று இடங்களுக்கும் முதல் கட்ட நிலவரத்தில் முக்கியமான மூவர் பெயர் பேசப்படுகிறது.

முதலில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஐபேக்கோடு ஒருங்கிணைந்து திமுகவின் மூளையாக செயல்பட்டவர் சபரீசன். மேலும், பற்பல தடைகளைத் தாண்டி திமுகவின் தேர்தல் செலவு விவகாரங்களை வெற்றிகரமாக கையாண்டவர் சபரீசன் என்பதால் அவரை டெல்லிக்கு அனுப்பி தனது நிழலாக வைத்துக் கொள்ளலாமா என்று நினைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஏற்கனவே கலைஞர் மறைவுக்குப் பின் ஸ்டாலின் டெல்லி சென்றபோது அவருடன் சென்றவர் சபரீசன். சோனியா, ராகுலை ஸ்டாலின் சந்தித்தபோது கூடவே இருந்தார் சபரீசன். அந்த புகைப்படமும் வெளியாகி சில செய்திகளைச் சொன்னது. அதன் நீட்சியாக இப்போது ராஜ்யசபா பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் சபரீசன்.

அடுத்து கொங்குவுக்கு ராஜ்யசபா வேண்டும் என்ற உடன்பிறப்புகளின் கோரிக்கையை உணர்ந்திருக்கிறார் திமுக தலைவர். அந்த வகையில் எஸ்.பி. வேலுமணியை எதிர்த்துப் போட்டியிட்ட கார்த்திகேய சிவசேனாபதியின் தேர்தல் வேலைகள் ஸ்டாலினுக்கு பிடித்துப்போயிருக்கின்றன. அவருடைய கருத்தியல் ரீதியான வேலைகளும், கள ரீதியான வேலைகளும் பிடித்துப் போனதால் கொங்கு சார்பில் சேனாபதி ராஜ்யசபா செல்ல வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவதாக இம்முறை தென் மாவட்டத்துக்கு ராஜ்யசபா உறுப்பினர் செல்ல வாய்ப்பிருக்கிறது. அண்மையில் அமமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த தங்க தமிழ் செல்வன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் சை எதிர்த்துப் போட்டியிட்டார். தென் மாவட்ட முழுவதும் பணிகள் மேற்கொண்டார். அவருக்கு ஏற்கனவே தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி தர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது அவருக்கு ராஜ்யசபா தரலாமா என்ற ஆலோசனையும் நடக்கிறது.

இப்போதைக்கு இந்த மூன்று பேரும் திமுகவின் ராஜ்யசபா ரேஸின் முதல் ரவுண்டில் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலவரம் தொடரலாம். அல்லது மாற்றங்களும் ஏற்படலாம்” என்கிறார்கள் திமுகவின் தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

-ராகவேந்திரா ஆரா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

சனி 22 மே 2021