மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

நிலோபர் கபில் நீக்கம் பின்னணி!

நிலோபர் கபில் நீக்கம் பின்னணி!

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியின் தலைவராக இருந்த டாக்டர் நிலோபர் கபில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்த தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.

இதுகுறித்து அவர், "திருப்பத்தூர் அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய அமைச்சர் கே.சி.வீரமணி திட்டமிட்டே எனக்கு சீட் தரக்கூடாது என கட்சி தலைமைக்குத் தெரிவித்துள்ளார்” என்று கூறியிருந்தார்.

மேலும், தற்போதைய நீர் வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது” என்று குற்றம்சாட்டியிருந்தார். அப்போதிலிருந்து கட்சித் தலைமை அவர் மீது அதிருப்தியிலிருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிலோபர் கபில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் நீக்கப்பட்டதற்கான பின்னணி தெரியவந்திருக்கிறது. அவர் மீது டிஜிபியிடம் பணமோசடி புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

சொர்னாம்பேட்டை பகுதி நகர்மன்ற உறுப்பினராக இருந்து வந்த அம்பூர்பேட்டை கே.பிரகாசம் (47) என்பவர் முன்னாள் அமைச்சர் மீது புகார் அளித்திருக்கிறார். இவர், நிலோபர் கபிலின் தனி உதவியாளராகவும் இருந்துள்ளார்.

அந்த புகாரில், “நான் கடந்த 23 வருடங்களாக அதிமுகவில் உறுப்பினராக இருந்து கட்சியின் மூலம் சமூகசேவை செய்து வந்தேன். 2011 முதல் 2016ம் ஆண்டு வரை வாணியம்பாடி நகரமன்ற தலைவராக நிலோபர் கபில் பதவி வகித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலில் நிலோபர் கபில் அதிமுக சார்பில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்ட போது செலவுக்கு அவரிடம் போதுமான பணம் இல்லை.

எனவே என்னை அணுகி ஒரு கோடி ரூபாய் பணம் தேர்தல் செலவிற்குத் தேவைப்படுகிறது என்று கேட்டார். மேலும் உங்களுக்குத் தெரிந்த வேறு நபர்களிடம் கடனாக வாங்கி கொடுங்கள் என்றும் கேட்டார். எனக்குத் தெரிந்தவர்களிடமும் கடனாகப் பெற்று நீலோபர் கபில் தேர்தல் செலவிற்காக ரூ.80 லட்சம் கொடுத்தேன்.

இதையடுத்து அவரது வெற்றிக்குப் பிரகாசம் தான் காரணம் என சொல்லி வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த என்னை, அவருக்கு அரசியல் உதவியாளராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கிறேன். எனக்கு அரசியல் உதவியாளர் வேலை வேண்டாம் என்று மறுத்தேன். அதற்கு அவர் வேறு யாரையும் என்னால் நம்ப முடியாது. நீங்கள் உங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டு, எனக்கு அரசியல் உதவியாளராக இருந்து அரசு தரும் மாத ஊதியம் பெற்றுக் கொண்டு எனக்கு உதவியாக இருங்கள் என்றார்.

எனவே அவரிடம் உதவியாளராக சேர்ந்து பணி செய்து வந்தேன். இந்நிலையில், அமைச்சர் துறை சார்ந்த, தொழிலாளர் நலத்துறையில் வேலைக்காகவும், தமிழ்நாடு வக்பு வாரியம் துறை சார்ந்த வேலைகளுக்காகவும் மற்றும் இதர துறை சார்ந்த வேலைக்காகவும் பணத்தை அமைச்சர் என்னிடம் கொடுக்கச் சொன்னதாகக் காசோலை மூலமாகவும், பண பரிவர்த்தனை மூலமாகவும் சிலர் என்னிடம் பணம் கொடுத்தனர்.

என் வங்கி கணக்கிற்குப் பண பரிமாற்றம் நடைபெற்ற பின்பு அமைச்சர் யாருடைய வங்கி கணக்கிற்கு என்னுடைய வங்கி கணக்கிலிருந்து பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவாரோ, அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்வேன்.

சில நபர்கள் என்னிடம் நேரடியாகவும், காசோலை மூலமாகவும் கொடுத்த பணத்தை அமைச்சரின் உத்தரவுப் படியும், வேண்டுகோள் படியும், அவரிடமும் மற்றும் அவருடைய குடும்ப நபர்களிடமும், அவருடைய நெருங்கிய உறவினர்களிடமும், மற்றும் அவர் சொல்லும் நபர்களிடம் அவருடைய முன்னிலையில் கொடுத்து வந்தேன்.

இந்நிலையில் என்னிடம் பணம் கொடுத்தவர்கள், ஒன்று வேலை வாங்கி தாருங்கள் அல்லது கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுங்கள் என பலமுறை நேரில் கேட்டார்கள். அப்போது நிலோபர் கபிலும் உடன் இருப்பார். ஆனால் கொரோனா தொற்று நோய் அதிகமாக இருப்பதால் அரசாங்கத்தால் எந்த வேலையும் வேகமாகச் செய்ய முடியவில்லை என்று நிலோபர் கபில் கூறி வந்தார். துறை சார்ந்த வேலைவாய்ப்பும் இல்லை என்றும் கூறினார்.

எனவே பணம் கொடுத்தவர்கள் எங்களுக்கு வேலை வேண்டாம், பணத்தை வட்டியுடன் திருப்பி தாருங்கள் என்று கோபமாக கேட்கின்றனர். அதற்கு அமைச்சரும் தேர்தல் நெருங்கி வருவதால் சீட்டு கிடைக்கும், மீண்டும் நான் தான் அமைச்சர் ஆவேன், அப்போது உங்களுக்கு அனைத்து வேலைகளையும் பெற்றுத் தருகிறேன். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் கொடுத்த பணத்திற்குப் பிரகாசத்திடம் இருந்து வங்கி காசோலையைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதுவரை அமைதியாக இருங்கள் என்று சொன்னார். தேர்தலில் அவருக்கு சீட்டு கிடைக்காத காரணத்தால் பணம் கொடுத்தவர்கள் பணம் வேண்டும் என்று அடிக்கடி தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்கள்.

இதில் வெள்ளகுட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயசுதா, செல்வமணி இருவரும், ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக அமைச்சர் மற்றும் உதவியாளரான என் மீது புகார் மனுவை வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் கொடுக்க வந்தனர்.

இந்த விவரத்தை அமைச்சருக்கு வேண்டிய நபர்கள் மூலம் தெரிந்து கொண்ட நிலோபர் கபில், கோவை ஜபார் மூலம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த லிங்கநாதனை கோவைக்கு அழைத்து 8 லட்சத்துக்கு நான்கு லட்சத்தைக் கொடுத்து அனுப்பினார். அதை அமைச்சர், வெள்ளகுட்டை சார்ந்தவர்களுக்குப் பணத்தைப் பகுதியளவு திரும்ப கொடுத்து விட்டு மீதி பணத்தை ஒரு மாதத்திற்குப் பின் தருகிறேன் என்று அப்போதைக்குச் சொல்லி அனுப்பி விட்டார்.

இந்நிலையில் அம்பூர்பேட்டையை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் ஏப்ரல் 19ஆம் தேதி ஆன்லைன் மூலம் அமைச்சர் மீதும் என் மீதும் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். இதைத் தெரிந்து கொண்ட நான் நிலோபர் கபில் அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம், நாம் அனைவரும் வாங்கிய பணத்தைக் கொடுத்து விடலாம் என்று சொன்னேன். அதற்கு அவர்கள், நாம் மக்களிடம் குறைந்தபட்சம் பணம் ஆறு கோடி தான் வாங்கியுள்ளோம்.

அந்த பணத்தில் அமைச்சரின் மகள் தனது மூத்த மகனுக்கு இங்கிலாந்தில் சொத்து வாங்கியுள்ளார். அதில் ஏதாவது ஒரு சொத்தை விற்று, ஆறு கோடி பணத்தைத் திருப்பி தந்து விடலாம் என்று எனக்கு ஆறுதல் சொன்னார்கள். நான் அதற்கு, அதெல்லாம் முடியாது. நானும், எனது மனைவியும் அமைச்சர் சொல்லியதின் பேரில் தான் காசோலையெல்லாம் கொடுத்திருக்கிறோம். அவர்கள் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக என்னையும், எனது மனைவியையும் மிரட்டுகிறார்கள். இதனால் உங்களுக்கும், அமைச்சருக்கும் எந்தவித பாதிப்பும் கிடையாது. எனக்கு தான் தொல்லையும் தொந்தரவும் இருந்து வருகிறது. மன உளைச்சலாக உள்ளது. எனவே வெள்ளகுட்டையை சேர்ந்தவர்களுக்குக் கொடுத்ததை போல ஆறு கோடி ரூபாய் பணத்தை வாங்கியவர்களிடம் திருப்பி கொடுத்து விடுங்கள் என்று வாதிட்டேன். அதற்கு அவர்கள் உன்னால் என்ன செய்யமுடியுமோ செய்துகொள் என்று கடுமையான வார்த்தைகளால் கூறினார்கள். எங்களால் பணத்தைத் தர முடியாது என்று சொன்னார்கள்.

எனவே அமைச்சரிடம் கொடுத்த பணத்தை வாங்கி பணம் கொடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும், என் குடும்பத்தாருக்கும் உரியச் சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தான் நிலோபர் கபில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

சனி 22 மே 2021