மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

பிரதமரிடம் தமிழக உரிமைகளை கேட்டு பெறுவேன்: ஸ்டாலின்

பிரதமரிடம் தமிழக உரிமைகளை கேட்டு பெறுவேன்: ஸ்டாலின்

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று (மே 21) மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சியில் ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “ரெம்டெசிவிர் மருந்து அனைத்து பகுதிகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பத்திரிக்கையாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்தேன். 1,200 செவிலியர்களைப் பணி நிரந்திரம் செய்ய உத்தரவு பிறப்பித்தேன். தனியார் மருத்துவமனைகள் கட்டண சலுகைகளை முடிந்த வரை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன், கொரோனா வார் ரூம் அமைக்க உத்தரவிட்டேன், தமிழகத்துக்குக் கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினேன், கொரோனா தடுப்பூசிக்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது, கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது” என அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்துப் பட்டியலிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் தொகை குறைவாக இருக்கும் மாநிலங்களில் நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா பரவிய சூழல் ஏற்பட்டது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மூலமாக கொரோனா பரவல் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருக்கிறோம். நோய்த் தொற்று விரைவில் உச்ச நிலையை எட்டும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மேலும், “ஆட்சி அமைத்த இரண்டு வாரங்களில், 16,938 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 7800 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகள் கொண்டவை. இயற்கை சிகிச்சை மையங்கள் 30 அமைக்கப்பட்டுள்ளன. 239 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூடுதலாக நாளொன்றுக்குத் தமிழகத்துக்குப் பெறப்பட்டுள்ளது. 2100 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்த அவர்,

“தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லை என சொல்லப்படுகிற நாள் தான் மகிழ்ச்சியான நாள். இந்த நேரத்தில் தங்களுடைய உயிரைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கிற முன்களப் பணியாளர்களுக்கு அரசின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்துக்கு 24 மணி நேரமும் ஊரடங்கு போடுங்கள் என்று சொல்கிறார்கள். இதுகுறித்து நாளை ஆலோசனை நடைபெற இருக்கிறது என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், “கொரோனா நிவாரண நிதியான மீதமுள்ள ரூ.2000 ஜூன் 3ஆம் தேதிக்குள் கொடுக்கப்படும். தமிழகம் கேட்ட அளவிற்கு மத்திய அரசு இன்னும் தடுப்பூசிகளை வழங்கவில்லை. கிராமப்புறங்களிலும் கொரோனா விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவலை முற்றிலும் ஒழிப்பதே முதல் வேலை. மூன்றாம் அலை வரும் என்று சொல்கிறார்கள். அதற்கு முன்னதாக நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தற்போது டெல்லிக்குப் போக முடியாத சூழ்நிலை இருக்கிறது. சூழ்நிலை ஏற்படும் போது பிரதமரை நேரில் சந்தித்து நமது உரிமைகளைக் கேட்டுப் பெறுவேன் என்றும் குறிப்பிட்டார் ஸ்டாலின்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 21 மே 2021