மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

கருப்புப் பூஞ்சை மருந்து: மேலும் ஐந்து நிறுவனங்களுக்கு அனுமதி!

கருப்புப் பூஞ்சை மருந்து: மேலும் ஐந்து நிறுவனங்களுக்கு அனுமதி!

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ‘ஆம்போடெரிசின்-பி’ மருந்து : விநியோகத்தை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணம் பெற்று வருபவர்களை மியூகார்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவது தற்போது இந்தியாவில் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து திமுக மக்களவை குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்,  மத்திய வேதியியல் துறை அமைச்சர் சதானந்த கவுடா,  மத்திய வேதியியல் அமைச்சகத்துக்கு உட்பட்ட மருந்துத் துறையின் செயலாளர் திருமதி அபர்ணா ஆகியோருக்கு நேற்று தனித்தனியாக கடிதங்களை எழுதினார்.

அக் கடிதங்களில்,  “கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க  பயன்படுத்தப்படும்  லிபோசோமல்  ஆம்போடெரிசின் பி அல்லது ஆம்போடெரிசின் பி ஆகிய மருந்துகளின் விநியோகம் மெல்லக் குறைந்து வருகிறது.

இம்மருந்துகளுக்கான தேவை நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த மருந்து தமிழகத்திலும் பற்றாக்குறையாக இருக்கிறது.  எனவே  கருப்புப் பூஞ்சைக்கு எதிராக தேவைப்படும் இந்த மருந்து விநியோகத்தை விரைவுபடுத்திட அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் இந்த மருந்துகளின் உற்பத்திக்குத் தேவையான  முக்கியமான மூலக்கூறு மருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும் உரிய அனுமதிகளை அளித்து, எந்த இடையூறும் இல்லாமல் மருந்துகளின் தயாரிப்புக்கு  அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”என்று அந்த கடிதத்தில் தமிழக ஆளுங்கட்சியான திமுக சார்பில் வலியுறுத்தியிருந்தார் கனிமொழி. மேலும் பல தலைவர்களும் இதுகுறித்து மத்திய அரசுக்கு அழுத்தங்களை முன் வைத்தனர்.

இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் சார்பில் இன்று வெளியிட்ப்பட்டுள்ள அறிவிப்பில்,

“கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மியூகோமிகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிகரித்துள்ளதாக பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான ‘ஆம்போடெரிசின்-பி’ மருந்துக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்போடெரிசின்-பி மருந்தின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மருந்துகள் துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

தற்போது நம் நாட்டில் பாரத் சீரம்ஸ் மற்றும் தடுப்பூசி நிறுவனம், பிடிஆர் பார்மாடிக்கல்ஸ் நிறுவனம், சன் பார்மா நிறுவனம், சிப்லா, லைப் கேர் இன்னோவேஷன் ஆகிய 5 நிறுவனங்கள் ஆம்போடெரிசின்-பி மருந்தை தயாரிக்கின்றன. மிலன் லேப்ஸ் என்ற ஒரு நிறுவனம் அதை இறக்குமதி செய்து வருகிறது.

இது தவிர, இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் 3,63,000 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி இறக்குமதி செய்யப்படும். இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியோடு சேர்த்து 5,26,752 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி கிடைக்கும்.அடுத்த மாதம் 3,15,000 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி இறக்குமதி செய்யப்படும். ஆகையால் உள்நாட்டு உற்பத்தியோடு சேர்த்து அடுத்த மாதம் 5,70,114 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி கிடைக்கும்”என்று தெரிவித்துள்ள சுகாதார அமைச்ச்கம் மேலும்,

“ மத்திய அரசின் முயற்சிகள் காரணமாக, நாட்கோ பார்மாடிக்கல்ஸ் ஐதராபாத், அலம்பிக் பார்மாடிக்கல்ஸ் வதோதரா, குஃபிக் பயோசயின்ஸ் லிமிடெட் குஜராத், எம்கியூர் பார்மாடிக்கல்ஸ், புனே லைகா, குஜராத் ஆகிய மேலும் 5 தயாரிப்பு நிறுவனங்களுக்கு, இந்த மருந்தை தயாரிக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் இந்த நிறுவனங்கள், 2021 ஜூலை மாதம் முதல் ஆம்போடெரிசின்-பி மருந்தை மாதம் ஒன்றுக்கு 1,11,000 குப்பிகள் என்ற அளவில் உற்பத்தி செய்ய தொடங்கும். இந்த நிறுவனங்கள் முன்கூட்டியே உற்பத்தி தொடங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மற்றும் மருந்துகள் துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கூடுதல் விநியோகம் ஜூன் மாதம் தொடங்கும்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம்போடெரிசின் பி மருந்தை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐந்து நிறுவனங்களில் மூன்று குஜராத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது.

-வேந்தன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

வெள்ளி 21 மே 2021