மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

பன்னீர் வீட்டுக்கு படையெடுத்த மாஜி அமைச்சர்கள்- காரணம் என்ன?

பன்னீர் வீட்டுக்கு படையெடுத்த மாஜி அமைச்சர்கள்- காரணம் என்ன?

தமிழக சட்டமன்ற அதிமுக கட்சித் தலைவராக அதாவது எதிர்க்கட்சித் தலைவராக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மே 10 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடந்த காரசாரமான விவாதத்துக்குப் பிறகு எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் ஓ.பன்னீர் செல்வம் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

இந்த நிலையில் இன்று (மே 21) தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கைலாசப்பட்டியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டுக்கு மதியம் 1 மணியளவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலர் திரண்டு வந்தனர். வேலுமணி, தங்கமணி, ஆர்.பி. உதயகுமார், கேபி.அன்பழகன் மற்றும் சில எம்.எல்.ஏ.கள் என பலரும் சொல்லிவைத்தாற்போல் ஒன்றாகவே கைலாசப்பட்டியை சென்று அடைந்தனர்

சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ் சின் தம்பி பாலமுருகன் காலமாகிவிட்டார். அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டுதான் முன்னாள் அமைச்சர்கள் வந்தனர் என்றும், சுமார் ஒருமணி நேரம் அவர்கள் பண்ணை வீட்டில் இருந்துவிட்டு புறப்பட்டிருக்கிறார்கள் என்றும் இந்த சந்திப்புக்கான காரணமாக அதிமுக வட்டாரத்தில் வெளிப்படையாக பேசப்படுகிறது.

ஆனால், ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசும்போது வேறு சில தகவல்களைச் சொல்லுகிறார்கள்.

“மே 10 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ்சை நோக்கி பலரும் கடுமையாக குற்றம் சாட்டினார்கள். எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடிக்கே பலரும் ஆதரவளித்தார்கள். எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் சை இருக்கும்படி எடப்பாடி கேட்டார்.ஆனால் அதை மறுத்துவிட்டு ஓபிஎஸ் வெளியேறிவிட்டார்.

இந்நிலையில் அன்று மாலையே எடப்பாடியும் ஓபிஎஸ்சை நேரில் சந்தித்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வற்புறுத்தினார். தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் ஓபிஎஸ் மறுத்தாலும் நாம் அவரை விட்டுவிட முடியாது. அது கட்சிக்கும் வெளியேயும் தவறான செய்தியை நாம் சொல்லுவதாக ஆகிவிடும், அவர் மறுத்தாலும் அவரே எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில்தான் இன்று எடப்பாடிக்கு நெருக்கமான மாஜி அமைச்சர்கள் பலரும் ஓபிஎஸ் சை பண்ணை வீட்டில் சந்தித்தனர். அவரது தம்பி பாலமுருகனின் மறைவுக்கு துக்கம் விசாரிக்க என்பது ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும்... எடப்பாடி சார்பில் சமாதான தூதுவர்களாகவே அவர்கள் ஓபிஎஸ்சை சந்தித்தனர். கடந்த சில தினங்களாக ஓபிஎஸ்- எடப்பாடி இடையே சுமுகமான பேச்சுவார்த்தை கூட இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் இத்தனை முன்னாள் அமைச்சர்கள் திரண்டு சென்று ஓபிஎஸ் சை சந்தித்தனர். அவர்களிடம் ஓபிஎஸ் ஏதும் பிடி கொடுக்கவில்லை. நான் என்றைக்கும் கட்சிக்காகத்தான் இருக்கிறேன். இது உங்களுக்கும் தெரியும், எல்லாருக்கும் தெரியும் என்று சொல்லியனுப்பியிருக்கிறார்” என்கிறார்கள்.

வேந்தன்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

வெள்ளி 21 மே 2021