மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்!

ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வரும் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்களது படிப்புக்கு ஏற்ற வேலை கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று , தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் வாரிசுதாரர்கள் 17 பேருக்குப் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் மதுரையில் வழங்கினார். இதில் 16 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் ஆகவும் ஒருவருக்கு ஜீப் ஓட்டுநராகவும் நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்த நடவடிக்கையாக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தச் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 14.05.2021 அன்று தமிழக அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளைத் திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞரின் கருத்தும், காவல்துறைத் தலைவரின் அறிக்கையும் பெறப்பட்டு அரசால் பரிசீலிக்கப்பட்டது. மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் கருத்துரைகளின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்வரும் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்கள்.

1. இந்த சம்பவம் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

2. 22.05.2018 அன்று நடந்த சம்பவத்திற்கு முன்னர் இந்த போராட்டம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

3. காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்குக் காயங்களும், பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர, ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டதால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

4. ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இப்போராட்டத்தின் போது தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர்களின் உயர்கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வெள்ளி 21 மே 2021