மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

எழுவர் விடுதலை: திமுக-காங்கிரஸ் உரசல்!

எழுவர் விடுதலை: திமுக-காங்கிரஸ் உரசல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஏழுபேர் விடுதலை தொடர்பாக திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு பயங்கரவாதியால் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தியின் கொலை இந்திய அரசியலிலும், காங்கிரஸ் கட்சியிலும் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி உள்ளிட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்தடுத்த நீதிமன்ற, கருணை மனு நகர்வுகளால் இவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எனினும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் தொடர்ந்து குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் மே 19 ஆம் தேதி பேரறிவாளனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு மாதம் சிறப்பு பரோல் அளித்தார். மேலும் நேற்று (மே 20) ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்த 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்தக் கடிதத்தில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் உண்டு என்று கூறி தமிழக ஆளுநர் அக்கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் மேற்கண்ட 7 பேரும் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள். உச்ச நீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து,7 பேரையும் விடுதலை செய்ய 9.9.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தைஉடனடியாக ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, நேற்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை நேரில் சந்தித்துக் கொடுத்துள்ளார்.

திமுகவின் இந்த கோரிக்கையும், அந்த கோரிக்கை வைக்கப்பட்ட நேரமும் காங்கிரஸுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. “விடிந்தால் மே 21 எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள். அவர் கொல்லப்பட்ட நாளை நினைத்து நாங்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மே 20 ஆம் தேதியன்று அவசரமாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து இந்த மனுவை கொடுக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு ஏன் வந்தது? “ என்று சமூக தளங்களில் காங்கிரசார் திமுகவுக்கு எதிராக பொங்கி வருகிறார்கள்.

இது தொடர்பாக இன்று (மே 21) ராஜீவ் காந்திக்கு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி,

“ஒருவருக்கு விடுதலை தர வேண்டுமென்றால், அதை நீதிமன்றங்கள்தான் செய்ய வேண்டும். அரசியல் அழுத்தங்கள் மூலமாக கூடாது என்பது காங்கிரஸின் கருத்து. இந்த அரசியல் அழுத்தங்கள் விரும்பத்தகாத நிலையை உருவாக்கும், சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போகும்.

ராஜீவ் காந்தி வழக்கில் முதலில் 26 பேர் குற்றம் சாட்டப்பட்டார்கள். அதில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. நீதிமன்றத்துக்கு தலை வணங்கினோம். அப்போது ஒரு காங்கிரஸ்காரரும் அவர்களின் விடுதலையை எதிர்க்கவில்லை. அதுபோலவேதான் இப்போதும்.

தமிழக சிறைகளில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் 25 ஆண்டுகளாக வாடுகிறார்கள். தமிழர்கள் என்ற காரணத்துக்காக விடுதலை என்று சொன்னால் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அதில் ஏழுபேரை மட்டும் விடுதலை செய்ய வேண்டும் என்று சொன்னால் அது ஏற்புடையதல்ல. இது உணர்ச்சிபூர்வமான விஷயம்” என்று கூறியுள்ளார் கே.எஸ். அழகிரி

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 21 மே 2021