மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

ஆசிரியர்களுக்குச் சம்பளக் குறைப்பு: விரைவில் முடிவு!

ஆசிரியர்களுக்குச் சம்பளக் குறைப்பு: விரைவில் முடிவு!

ஆசிரியர்களின் சம்பளத்தைப் பாதியாகக் குறைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதக் கடைசியில் ஊரடங்கு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இதனால், பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா சற்று குறைய தொடங்கியதை அடுத்து 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வந்தது. சிறிது நாட்களிலேயே மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மறுபடியும் பள்ளிகள் மூடப்பட்டன. பின்பு, 9,10,11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் அளிக்கப்பட்டது

இருப்பினும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்காக ஒரு சில ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று வந்தனர். மாணவர் சேர்க்கை பணி நிமித்தமாகவும் ஆசிரியர்கள் அவ்வப்போது பள்ளிக்குச் சென்று வந்தனர். இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு வழக்கமான பணிச்சுமை எதுவும் இல்லை. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வந்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி தொலைக்காட்சி வழியாக மட்டுமே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடி, முழு சம்பளத்தையும், சலுகையும் பெற்று வந்தனர். இது பலரின் மனதிலும் கேள்வியை எழுப்பியது. குறிப்பாக, முன்களப் பணியாளர்களான காவல்துறையினருக்கு.

"நாள் முழுவதும் சாலையில் நின்று கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு விடுமுறை கிடையாது. ஆனால், இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லாமலே வீட்டிலிருக்கும் ஆசிரியர்களுக்கும், எங்களுக்கும் ஒரே சம்பளம். சம்பளம் மட்டுமில்லாமல், மற்ற அனைத்துச் சலுகைகளும் அவர்களுக்குத் தவறாமல் கிடைக்கிறது. இது என்ன அநியாயம்?” என்று காவல்துறையினர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியது.

தற்போது இந்தப் பிரச்சினைக்கு விரைவில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ரூபாய் 17.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மணப்பாறை அரசு மருத்துவமனை, சத்திரம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இங்கு, 53 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடைகள் வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அரியமங்கலம் குப்பை கிடங்கில் நாளொன்றுக்கு 1,500 டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, உரமாக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் குப்பை கிடங்கை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. அதற்கான இடமும் இல்லை” என்று கூறியவர், “பெரும்பாலான மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாத நிலையால், வாட்ஸ்அப் மூலம் 100 சதவிகிதம் மாணவர்களையும் தொடர்புகொள்வதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இருப்பினும், மாணவர்கள் கல்வியில் இடைவெளி நேரக்கூடாது என்பதற்காக, அலகுத் தேர்வு நடத்தப்பட உள்ளது” எனக் கூறினார்.

மேலும், ”கொரோனா ஊரடங்கால் பணி இல்லாமல் வீட்டில் இருக்கும் ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, முன்களப் பணியாளர்களின் ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று எனக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் வாட்ஸ்அப் மூலம் அறிவுறுத்தல்கள் வருகின்றன. இதுகுறித்து முதல்வர் கவனத்துக்குக்கொண்டு செல்லப்பட்டு, அவருடைய அறிவுரையின்படி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 21 மே 2021