மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

எழுவர் விடுதலை: குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கடிதம்!

எழுவர் விடுதலை: குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கடிதம்!

தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (மே 20) கடிதம் எழுதியிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்கிற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் எஸ்.நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் விரைவில் விடுவிக்க வேண்டும்.

நளினிக்கு வழங்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை அரசியல் சாசனத்தின் 161ஆவது பிரிவின்படி ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதுபோன்று மேலும் 3 பேருக்கான தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

ஏழு பேரை விடுவிக்க 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. ஆனால், இந்த வழக்கை சிபிஐயின் பல்நோக்கு புலனாய்வுக் குழு விசாரித்தது என்பதால், ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது எனக் கூறப்பட்டது. இவ்விவகாரத்தில் முடிவெடுக்க உங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது எனக் கூறி இந்த பரிந்துரையை ஆளுநர் உங்களுக்கு அனுப்பினார்.

மேற்கண்ட ஏழு பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடுகிறார்கள். உச்ச நீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியது. எனவே, ஏழு பேரையும் விடுதலை செய்ய 9.9.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த கடிதத்தை டி.ஆர்.பாலு எம்.பி. குடியரசுத் தலைவரிடம் நேரில் அளித்தார்.

முன்னதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஏழு பேர் விடுதலை குறித்து ஆலோசனை செய்து விரைந்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 21 மே 2021