மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

ஓ, நிர்வாண அரசனே!

ஓ, நிர்வாண அரசனே!

எஸ்.வி.ராஜதுரை

ஒரு காலத்தில் குஜராத்திலுள்ள ஆர்.எஸ்.எஸ். ஏடான ’சாதனா’வின் ஆசிரியர் விஷ்ணு பாண்ட்யாவால், ‘குஜராத்தி கவிதையின் அடுத்த பெரும் பிம்பம்’ என்று போற்றப்பட்டு வந்த பெண் கவிஞர் பருல் கக்கர் (Parul Khakkar) எழுதி, தன் முக நூலில் 2021 மே 11இல் பதிவிட்ட ‘சப்வாஹினி கங்கா’ என்ற கவிதை மிக வேகமாக இந்திய மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

’ராம் ராஜ்யத்தை’ ஆளும் ‘நிர்வாண அரசன்’ என்று மோடியை அழைக்கும் இக்கவிதை, கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுவரும் துயரங்களையும், மோடி அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையையும் கடுமையாக சாடி, கோடிக்கணக்கான இந்திய மக்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்துகிறது என்றும், சவ வண்டியாக புனித கங்கை மாற்றப்பட்டுவிட்ட அவலத்தை எடுத்துரைக்கிறது என்றும் ‘தி வயர்’ கூறுகிறது. ( thewire.in/the-arts/parul-khakkar-gujarati-poem-ganga-bodies-covid ). அந்த ஏடு தரும் கூடுதல் தகவல்கள் பின்வருமாறு:

பருல் கக்கர் ஒருபோதும் பாஜகவின் எதிரியாக இருந்ததில்லை. அவர் இந்து கடவுள்கள் பற்றிய பல கவிதைகளை இயற்றியுள்ளார். அவற்றில் பல பக்திப் பாடல்களாகவும் பாடப்பட்டு வருகின்றன. ஆனால், கோவிட் 19 தொற்றும் மோடி அரசாங்கத்தின் மெத்தனப்போக்கும் அவரது உள்ளத்தை வருத்தியுள்ளன. எனவே தன் மனசாட்சியின் குரலாக அவர் இக்கவிதையை எழுதியுள்ளார்.

பாஜகவும் சங் பரிவாரமும் தங்கள் கையில் வைத்துள்ள அசுரத்தனமான ஆயிரக்கணக்கான சமூக வலைதளங்கள் பருல் கக்கர் மீது அவதூறு பொழிந்து வருகின்றன. வழக்கம் போலவே அவர்களது இந்த எதிர்வினைகளிலும் வசைச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு மூத்த பாஜக தலைவரே, இத்தகைய வசைப்பொழிவுகள் கண்ணியமற்றவை என்று கூறுகிறார்.

இந்தக் கவிதைக்கு இதுவரை இரு ஆங்கில மொழியாக்கங்கள் உள்ளன. கவிஞர் சலில் திருபாதியின் ஆங்கில மொழியாக்கத்தை ‘தி வயர்’ பரிந்துரைக்கிறது. அந்த ஆங்கில மொழியாக்கத்தின் வழியே பின்வரும் தமிழாக்கம்:

கவலைப்படாதே, பிணங்கள் ஒரே குரலில் சொல்கின்றன

ஓ அரசனே, உன் ராம ராஜ்யத்தில்

கங்கையில் உடல்கள் மிதப்பதைப் பார்க்கிறோம்

ஓ அரசனே, மரங்கள் சாம்பல்கள்தான்

சுடுகாடுகளில் எந்த இடங்களும் காலி இல்லை

ஓ அரசனே, அவற்றைப் பாதுகாப்பவர்கள் யாரும் இல்லை

பாடை தூக்குபவர்கள் யாரும் அங்கு இல்லை

மன அழுத்தத்தின் சொற்களில்லா ஒப்பாரிகளுடன்

தனிமைச் சோகத்தில் விடப்பட்டுள்ளோம்

மரண தேவதை ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து

நடனமாடியபடியே தாவிச் தாவிச் செல்கிறாள்

ஓ அரசனே, உருகிக்கொண்டிருக்கும்

புகைக்கூண்டுகள் நடுங்குகின்றன

வைரஸ் எங்களை அசைத்தாட்டுகிறது

ஓ அரசனே, எங்கள் வளையல்கள் உடைந்து சிதறுகின்றன

விம்மும் எங்கள் நெஞ்சம் உடைந்து கிடக்கிறது

அவன் பிடில் வாசிக்கும்போது நகரம் எரிகிறது

பில்லாவும் ரங்காவும் தங்கள் ஈட்டிகளைப்

பாய்ச்சுகின்றனர்.

ஓ அரசனே, உன் ராம ராஜ்யத்தில்

கங்கையில் உடல்கள் மிதப்பதைப் பார்க்கிறேன்

ஓ அரசனே உன் ஆடைகள் பிரகாசித்து,

ஒளிர்ந்து, கொளுந்துவிட்டெரிகையில் பளபளக்கின்றன

ஓ அரசனே, இந்த நகரம் முழுவதும் கடைசியில்

உன் உண்மை முகத்தைப் பார்த்துவிட்டது

உன் துணிச்சலைக் காட்டு, தயக்கமில்லாமல்

வெளியே வந்து கூச்சலிடு, உரத்துச் சொல்

‘நிர்வாண அரசன் முடமாகிவிட்டவன் பலகீனமானவன் ‘

என்று

நீ இனியும் கோழைத்தனமானவனல்ல என்பதை எனக்குக் காட்டு

தீக்கொழுந்துகள் உயிர்த்தெழுந்து வானத்தை முட்டுகின்றன

சீற்றங்கொண்ட நகரம் கட்டுக்கடங்கா கோபத்தில் ஆர்ப்பரிக்கிறது

ஓ அரசனே, உன் ராம ராஜ்யத்தில்

கங்கையில் உடல்கள் மிதப்பதை நீ காண்கிறாயா?

கட்டுரையாளர் குறிப்பு

.

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

வெள்ளி 21 மே 2021