முறைகேடு : கிறிஸ்டி நிறுவனத்துடனான டெண்டர் ரத்து!

politics

ரேஷன் டெண்டரில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதால் அரசுக்கு 100 கோடி ரூபாய் வரை இழப்பு தடுக்கப்பட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைத் துறை ஊழல், உள்ளாட்சித் துறை ஊழல் என தமிழக அரசு மீது அடுத்தடுத்து புகார்களை அடுக்கி வந்த அறப்போர் இயக்கம், கடந்த ஆண்டு ரேஷன் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியது.

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலம் ரேஷன் பொருட்களான சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு கொள்முதலில் கிட்டத்தட்ட ரூ.1480 கோடி ஊழல் நடந்ததாகக் குற்றம்சாட்டியது. அதாவது சர்க்கரை வாங்கியதில் 111 கோடி ரூபாய் இழப்பு, பருப்பு டெண்டரில் ரூ.870 கோடி இழப்பு, பாமாயில் டெண்டரில் ரூ.499 கோடி இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தது.

கடந்த 5 ஆண்டுகளில் நாமக்கல்லைச் சேர்ந்த நிறுவனமான கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெறும் வகையிலும், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வந்த நிறுவனங்கள் பங்கெடுக்க முடியாத வண்ணமும், டெண்டரில் பங்கெடுப்பதற்கான தகுதி விதிகள், சர்க்கரையில் 2019 லும் பாமாயிலில் 2017 லும், பருப்பில் 2015லும் மாற்றப்பட்டதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்தது.

தமிழகத்தில் புதிய அரசாங்கம் பதவி ஏற்பதற்கு 2 நாட்கள் முன்னதாக ரேஷன் கடைகளுக்குத் துவரம் பருப்பு வாங்குவதில் 80கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகத் தெரிவித்த அறப்போர் இயக்கம், இந்த டெண்டரில் பங்கேற்ற மூன்று நிறுவனங்களும் கிறிஸ்டி நிறுவனங்களுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்பு வைத்துள்ளவர்கள். டெண்டரில் பங்கேற்ற மூவரும் சந்தை விலையை விட மிக அதிகமாக டெண்டர் கோரியுள்ளனர்.

அதாவது வெளிச்சந்தையில் ரூ.100க்கு விற்கும் துவரம் பருப்பை, 143.5 ரூபாய்க்கு கொடுக்கும் கிறிஸ்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதனை உடனே திமுக அரசு ரத்து செய்ய வேண்டும், இல்லை என்றால் அரசுக்கு 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று தெரிவித்திருந்தது அறப்போர் இயக்கம்.

இவ்வியக்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்து வந்த சுதாதேவி ஐ.ஏ.எஸ் கடந்த வாரம் மாற்றப்பட்டார்.

இந்நிலையில், நேற்று, கிறிஸ்டி நிறுவனத்துக்குக் கிலோ 143.5 ரூபாய்க்கு 20,000 டன் துவரம்பருப்பு என்று ஒதுக்கப்படவிருந்த டெண்டரை ரத்து செய்து புதிய டெண்டரை கோரியிருக்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு 100கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

அறப்போர் இயக்கம் முகநூல் பக்கத்தில், “கடந்த அதிமுக ஆட்சியில் சுதா தேவி ஐஏஎஸ் துணையுடன் கிலோ 100 ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் துவரம் பருப்பை ரேஷன் கடைகளுக்குக் கிலோ 143 ரூபாய்க்கு கிறிஸ்டி நிறுவனங்களிடமிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வாங்க செட்டிங் செய்யப்பட்ட டெண்டரை தமிழக அரசு ரத்து செய்து புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது.

இந்த டெண்டர் செட்டிங் வேலையில் ஈடுபட்ட சுதா தேவி ஐஏஎஸ் தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற பல செட்டிங் டெண்டர்கள் மூலம் தமிழக அரசுக்குக் கடந்த 4 வருடங்களாகப் பல கோடி இழப்பு ஏற்படுத்தி வரும் கிறிஸ்டி நிறுவனங்கள் இனி அரசுப் பணிகளில் டெண்டர் கோருவதிலிருந்து பிளாக்லிஸ்ட் செய்யப்பட வேண்டும். இந்த செட்டிங் டெண்டர்கள் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுவதைத் தெரிந்தும் தடுக்காமல் வேடிக்கை பார்த்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விசாரிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி நிறுவனம் அமைந்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் மீது சத்துணவுத் திட்ட முட்டை கொள்முதல் முறைகேடு என பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *