மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

அடுத்த தாக்குதலுக்கு எதிராக ஆயத்தமாவோம் : வைகோ

அடுத்த தாக்குதலுக்கு எதிராக ஆயத்தமாவோம் : வைகோ

தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை எனும் நோய் பரவ ஆரம்பித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் பரவி, மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தீவிர கொரோனா தொற்று, ஆக்சிஜன் குறைபாடு, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளை இந்நோய் எளிதில் தாக்குகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மதுரையில் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

”கருப்பு பூஞ்சை நோயை பார்த்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படவேண்டும். கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள்” என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

’கருப்பு பூஞ்சை நோயை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது’ என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில், ஏற்கனவே கொரோனா தாக்கி, மருத்துவம் செய்து நலம் பெற்று மீண்டு வந்தவர்களை, கருப்பு பூஞ்சை (மியூகோர் மைகோசிஸ்) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வருகின்றன. மராட்டிய மாநிலத்தில் 64 பேர் இறந்து விட்டார்கள்; தில்லி மற்றும் கர்நாடகாவிலும் தாக்கி இருக்கின்றது. இதன் அறிகுறிகள் தமிழ்நாட்டிலும் தெரியத் தொடங்கி இருக்கின்றது.

நேற்று கோவில்பட்டியில் இரண்டு பேர், கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தகவல் வந்தது. ஏற்கனவே இனிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, கருப்பு பூஞ்சை உடனடியாகத் தொற்றுகின்றது. இது கண்கள், பற்கள் வழியாக குருதியில் கலந்து, உயிரைப் பறிக்கும் தன்மை உடையது. இந்த நோய்க்கு, Lipsomal Amphotericin B Injection மருந்தை, இந்தியா முழுமையும் பரிந்துரைக்கின்றார்கள்.

கொரோனா மருந்துகள், உயிர்க்காற்று உருளைகளுக்குக் கடுமையான தேவை ஏற்பட்டு இருப்பதுபோல, அடுத்து இந்த மருந்தும் தேவைப்படுகின்றது. எங்கே கிடைக்கும் என மக்கள் தேடுகின்றார்கள்.

எனவே, தமிழக அரசு, இதுகுறித்துக் கவனம் செலுத்தி, ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்; இந்த மருந்து கிடைக்கும் இடங்கள், இருப்பு குறித்த தகவல்களை, தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை இணையத்தில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

பொதுமக்கள், சமூக விலகலைக் கடைப்பிடித்து, வாய் மூக்கு மூடிகளை அணிந்து, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இல்லை என அறிவித்து விட்டார்கள். அதுபோல, அனைவரும் தடுப்பு ஊசி குத்திக் கொள்ளுங்கள்; அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரோனாவை ஒழிப்போம்!” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வியாழன் 20 மே 2021