மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

சிலம்புக்குள் அடங்கட்டும் யூதம்!

சிலம்புக்குள் அடங்கட்டும் யூதம்!

ஸ்ரீராம் சர்மா

‘காஸா’ என்னும் பகுதியும் ‘ஹமாஸ்’ என்னும் பதமும் இன்று தமிழக சோஷியல் மீடியாக்களில் தெளிவற்ற பேசுபொருளாகக் காரசாரமாக அல்லாடிக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலும் ஹமாஸும் ஓயாமல் பூனைச் சண்டைப் போட்டுக்கொள்ள... இரு தரப்பிலும் ஆணவ அகங்கார வாணவேடிக்கை ஓயாமல் தொடர… அங்கே, சீறி எழும் கந்தகக் குண்டுகளால் அப்பாவி மனித உடல்கள் சிதறி அழிந்தபடியே இருக்கின்றன.

நமது நாட்டிலிருந்து எளிய பிழைப்புக்குப் போன சகோதரி சௌம்யாவின் உயிரும் அதில் அடக்கம் என்பது பெரும் துக்கமாகிப்போக, எனது இளம் பிராயத்தில் ஊன்றிப்படித்த அந்த சிலப்பதிகாரச் செய்யுள் என் மனதுக்குள் புகுந்து உலுக்கியது.

ஏன் இந்த அவலம்?

ஜெருசலேம். அது, இறை நம்பிக்கையின் பெருங்கொண்ட ஸ்தலம்.

ஏறத்தாழ 31 சதவிகிதத்தோடு உலகின் அதிக சீடர்களைக்கொண்டதாகப் பரந்து நிற்கிறது கிறிஸ்துவம். அடுத்தபடியாக ஏறத்தாழ 24 சதவிகித தொழுகையாளிகளோடு விரிந்து நிற்கிறது இஸ்லாம்.

உலகின் இரண்டு ஆகப் பெரிய மதங்களும் ஜெருசலேத்துக்கு உரிமைகொண்டாடும் நிலையில் நின்றுகொண்டிருக்க…

“எல்லோரும் விலகுங்கள். எங்களுக்குத்தான் அங்கே முன்னுரிமை. அப்படித்தானே ஆதி ஆகமம் சொல்லியிருக்கிறது...” என்றபடி தன்னை முன்னிறுத்திக்கொண்டு நிற்கிறது யூத இனம்.

அதன் உலகளாவிய மக்கள்தொகையோ வெறும் ஒன்றரைக் கோடிகூட இல்லை என்பது குறித்து யாருக்கும் ஆச்சரியம் இல்லை. அதற்கு காரணம் உண்டு. காண்போம்...

சாராள் – ஆகார்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான அக்கப்போர் இன்று நேற்று இல்லை. அது 4500 வருடங்கள் பழைமைகொண்ட பகை என்கிறார்கள்.

ஆதி ஆகமம் தொற்றிவரும் அவலக்கூப்பாடு அது என்கிறார்கள் மதபோதகர்கள். ஆபிரகாமை மணந்த சாராளுக்கும் பணிப்பெண் ஆகாருக்கும் இடையே நடந்த சில்லறையான மனக்கசப்புத்தான் மதமாக உருவெடுத்து நிற்கிறது என காரணம் சொல்லப்பட்டாலும்… இன்றைய அரசியலை அறிவுகொண்டு ஆராயும்போது அது, மதம் என்னும் எல்லையைக் கடந்து, தற்பெருமையோடு மேலாதிக்கம் செய்யத் துணியும் வலியோருக்கும் - அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் எளியோருக்கும் இடையிலானதொரு தன்முனைப்புப் போராட்டம் என்பதாகத்தான் தெரிகிறது.

யார் இந்த யூதர்கள்?

அன்று, ஏசுவைக் கொன்றவர்கள் என்பதால் மட்டுமே செல்லுமிடமெல்லாம் வெறுக்கப்பட்டு விரட்டப்பட்டு ஏறத்தாழ 2000 ஆண்டுக்காலமாக நாடற்றவர்களாகச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தார்கள் யூதர்கள்.

இந்தப் பழியைச் சொல்லியே நம்மை உலகம் உள்ளவரைக்கும் வாழவிட மாட்டார்கள் என்று அஞ்சியவர்கள், வாழும் வழியைத் தேடித் தங்களைப் பலவகையிலும் தகவமைத்துக்கொண்டு ஆங்காங்கே மீண்டும் மீண்டும் எழத் துடித்தார்கள்.

அறிவை மட்டுமே முன்வைத்து மெல்ல மெல்ல முன்னேறியவர்களைக் காலம் மீண்டும் சோதித்து துவட்டி அடித்தது.

ஆம், ஹிட்லர் என்னும் கொடுங்கோலனிடம் அகப்பட்டுக்கொண்ட அந்த யூத இனம், வரலாற்றில் மேலும் சின்னாபின்னமாகி நொந்தழிந்தது.

அன்றந்தக் கொடுங்கோலன் ஹிட்லர் என்பான் ஏறத்தாழ அறுபது லட்சம் யூத மக்களை துள்ளத் துடிக்கக் கொன்றொழித்தான்.

எஞ்சியிருந்த யூதர்கள் கொஞ்சமும் தளர்ந்துவிடாமல் மீண்டும் மீண்டும் விழித்தெழத் துடித்தார்கள். தங்களுக்குள் இறுக்கமான ஒழுக்கக் கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டு அயராத உழைப்பால் இடைவிடாமல் போராடி எழுந்தார்கள்.

ஒருவழியாக 1948இல் தங்களுக்கான தனி நாட்டைக் கண்டு வென்று நின்றார்கள்.

இஸ்ரேல்

இன்றைய நவீன உலகத்தைச் சுழல வைப்பதற்கான கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை யூதர்களின் கண்டுபிடிப்புகளே.

1905இல் ஜெர்மனியைச் சேர்ந்த அடால்ஃப் பேயர் முதற்கொண்டு 2020இல் இலக்கியத்துக்கான நோபலைத் தட்டிச்சென்ற லூயி எலிசபெத் வரை ஏறத்தாழ 180க்கும் மேற்பட்ட நோபல் பரிசாளர்கள் யூத அறிஞர்களே. புகழ்பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் அதில் அடங்கி நிற்கிறார்.

இன்று, உலகப் பணக்காரர்கள் என்றால் அது யூதர்களே. அவர்கள் செல்லாத இடம் இல்லை. கொள்ளாத பொருளில்லை எனும்படியாக எங்கும் அவர்களது ஆட்சியே. மறைமுகமாகவேனும் அவர்களது மாட்சியே.

யூதர்களை வாழ்த்தியும் தூற்றியும் எழுதப் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உட்பட அனைத்தும் அவர்கள் வசமே.

யூதப் பெருமக்களின் இந்த அயராத உழைப்பை, ஆச்சரியமான எழுச்சியை நாம் வாழ்த்தியே ஆக வேண்டும். போற்றியே ஆக வேண்டும்.

அது ஒருபுறமிருக்க, இன்று அவர்களது செயற்பாடுகளும் நோக்கமும் என்னவாக இருக்கிறது என்பதில்தான் அச்சம் அடங்கியிருக்கிறது.

“உலக மாந்தர்கள் எங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு தூற்றி விரட்டினாலும்கூட, இன்று அவர்களை வாழவைக்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம்…” என்னும் பெருந்தன்மையோடு அவர்கள் நின்றிருந்தால் அவர்களின் அறிவுக்கு அழகு கூடியிருக்கும்.

ஆனால், நிலை மீறிவிட்டார்களோ... தங்களது ஆகப்பெரிய அறிவை – வியாபார தந்திர யுக்தியை - அதன் பொல்லாத நீட்சியை இந்த உலகின் மேல் - அடுத்தடுத்த நாட்டு அரசாங்கங்களின் இறையாண்மையின் மேல் வைத்து அழுத்தத் தொடங்கிவிட்டார்களோ... தங்கள் அறிவின் வீக்கத்தை அதிகாரமாக்கிக் காட்டுகிறார்களோ என்னும் கிலியைத் தெரிந்தோ, தெரியாமலோ சக மாந்தர்களுக்கு உண்டாக்கிவிட்டார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம்

உலகமெங்கும் பரந்திருக்கும் அந்த அச்சம், வெகு அண்டை நாடு என்பதால் பாலஸ்தீனத்துக்கு முதன்மையாகிப் போனதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆம், பாலஸ்தீனத்து அரசாங்கத்தில் இஸ்ரேலின் கை மிகப் பெரிதாக இருக்கிறது. இஸ்ரேலின் அனுமதி இல்லாமல் அங்கே, நீர் வழி - நில வழி - ஆகாய வழி வர்த்தகங்கள் எதுவும் நிகழ முடியாது என்னும் அளவுக்கு அதன் ஆளுமை இருக்கிறது.

அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கும் சக்தி வாய்ந்த யூதர்கள், பாலஸ்தீனத்தைக் கிள்ளுக்கீரையாக எண்ணி மேலாண்மை செலுத்த துணிகிறார்கள். அதை அனுமதிக்க முடியாது என்கிறது பாலஸ்தீனம்.

அதை, வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் ‘ஹமாஸின்’ இருப்பை மறைமுகமாக அடித்துக்கொள்வது போல ஆதரித்துக்கொண்டிருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. அல்லவேனில், ஆயிரமாயிரம் ராக்கெட்டுகள் எல்லை தாண்டிப்போயிருக்க முடியாது.

அமைதி இயக்கம்!

உள்ளூரில் இருக்கும் PEACE NOW என்னும் அமைப்போ, இஸ்ரேல் – பாலஸ்தீனம் என இரண்டு அரசாங்கங்கள் இங்கே இருக்கட்டுமே எனக் கெஞ்சிக் கூத்தாடுகிறது. வியப்புக்குரிய வகையில் அதில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் உள்ளடங்கியிருக்கிறார்கள்.

ஆனால், “இல்லை, அரசாங்கம் என்பது இங்கே இஸ்ரேல் மட்டுமே. நீங்கள் வேண்டுமானால் எங்களோடு வந்து இணைந்துகொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டிய வாழ்வாதாரங்களை நாங்களே செய்து தருவோம். இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையும் அப்போதுதான் நடக்கும் என்று பைபிளும்கூட சொல்கிறது அல்லவா...” என மதத்தையும் காரணம் காட்டி உலகளாவிய அப்பாவி கிறிஸ்துவர்களை உள்ளடக்கிக்கொண்டு, தன் அரசியல் வேட்கைகளை மற்றெந்த நாடுகளைப் போல இஸ்ரேலும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

கட்டுரையின் நோக்கம்!

மேற்கண்ட இந்தக் கண்றாவிகளெல்லாம் உலக அரசியல் சார்ந்த காழ்ப்புணர்ச்சிகள், அடாவடிக் கூச்சல்கள்... அது எப்படியோ, போய்த் தொலையட்டும்.

தமிழகத்தில், அதன் எதிரொலி தப்பிதமாகக் கொண்டுவிடக் கூடாதே என்னும் கவலை மட்டுமே இந்தக் கட்டுரைக்கான நோக்கம். ஆம், எனது கவலை எல்லாம் உள்ளூரைப் பற்றியே.

இங்கே சோஷியல் மீடியாக்களில், இஸ்ரேலுக்குப் பரிந்துகொண்டு இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்கள் இழித்துப்பேசுவதும் – பாலஸ்தீனத்துக்குப் பரிந்துகொண்டு கிறிஸ்துவர்களை, இஸ்லாமியர்கள் கீறிப்பேசுவதும் அவசியம்தானா?

இன்று நமது நாடு கொரோனா தொற்றரக்கனுக்கு ஆட்பட்டிருக்கும் இந்த அவலச் சூழலில் நமது சமூகத்தையும் நாட்டையும் குறித்துச் சிந்திப்பது முக்கியமா அல்லது உலக அரசியல் கேவலத்துக்கு ஆட்பட்டு அடித்துக்கொண்டு நிற்பது முக்கியமா?

இந்த நாட்டின் செழுமைக்குக் காரணமான இரண்டு நல்ல மைனாரிட்டிகள் தங்களுக்கிடையே பழி தூற்றி அடித்துக்கொள்வதைக் காணக் கொஞ்சமும் சகிக்கவில்லையே !?

வேண்டுகோள்!

எனதருமைச் சகோதரர்களே... கொஞ்சம் சிந்தியுங்கள்! உலக ஊனரசியலுக்கு இரையாகி நமக்கிடையே பகைமை பாராட்டிக்கொள்வது தேவைதானா?

ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு சமூகத்தை மேலேற்றிக்கொள்ள வேண்டிய இந்த கொரோனா தருணத்தில் அண்டை வீட்டான் கிறிஸ்துவனா, இஸ்லாமியனா எனப் பாழ்மனம் தரம் பிரித்துவிட அது அனுமதித்துவிடாதா..?

ஓர் இந்துவாக இருந்தபோதிலும் மனித உணர்வோடு நானும்தான் காஸா தாக்குதலுக்கான கண்டனக் குரலை எழுப்பக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆனாலும், கொரோனா அரக்கனை எதிர்கொள்ள வேண்டிய இந்தச் சூழலில் எனது கவனமெல்லாம் உங்களை நோக்கியே இருக்கிறதே தவிர, உலக அரசியலை நோக்கிப் போக மறுக்கிறது சகோதரர்களே!

குறித்துக்கொள்ளுங்கள்…

உதிரி மதங்களைக் கடந்து உலகின் மூன்றாம் பெரிய மதமாக நிற்பது இந்து மதம். உலகக் கணக்கெடுப்பில் இந்து மதம் என்பது 15 சதவிகிதம்.

இந்து மத வழிபாட்டாளர்களில் பெரும்பகுதியானவர்கள் இந்தியாவில்தான் வாழ்கிறார்கள். பெரும்பான்மை இந்துகளோடு சகோதரத்தன்மை மிளிர ஒன்றிணைந்து வாழும் மைனாரிட்டி மக்களை இங்கே மொத்த சமூகமும் அள்ளி அரவணைத்துக்கொண்டிருக்கிறது.

உலகப் பாழரசியலுக்காக இரண்டு மைனாரிட்டிகள் இங்கே அடித்துக்கொண்டால், அதை உள்ளூர் அரசியல் எப்படிப் பார்க்கும்? இவர்களின் சொந்த நாட்டின் பிரச்சினையைத் தாண்டி இவர்களுக்கு மதம்தான் முக்கியமாகப்படுகிறதா என்று கேட்காதா அல்லது, அப்படிக் கேட்கத் தூண்டப்படாதா..?

ஏன் கூடாது?

மொழி சார்ந்த உறவில் ஈழத்தமிழர்களுக்காக இங்கே குரலெழுப்பியது போல, மதம் சார்ந்த உணர்வில் நாங்கள் குரல் எழுப்புவதில் என்ன தவறு எனலாம். அதில் லாஜிக் இருந்தாலும், அதைக் காரணமாகக்கொண்டு இங்கே மன பேதம் உண்டாகிவிடுமல்லவா..?

கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிளவு ஒன்று உண்டாக்கப் பாழரசியல் வழி செய்துவிட்டால் உள்ளூர் சமூக வாழ்வில் அது பெரும் சரிவாகப் போய் முடிந்துவிடும் அல்லவா... அதில், எனது சகோதரர்கள் சிக்கிக்கொண்டுவிடக் கூடாது என்பதுதான் சமூக எழுத்தாளனான எனது பேரச்சம்!

பேரன்பிற்கினிய எனது கிறிஸ்துவ - இஸ்லாமிய நண்பர்களே…

உங்களுக்குள் அடித்துக்கொள்வது வீண் என உணருங்கள். இன்றைய இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கிடையேயான பிரச்சினையில் முடிவெடுக்க வேண்டியது நமது அரசாங்கம் மட்டுமே என்பதில் தெளிவாக இருங்கள்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எங்களின் நோக்கத்தையும் – உள்ளார்ந்த வேட்கையும் இணைத்து வெளிப்படுத்த வேண்டும் என உரிமையோடு எடுத்துச்சொல்லப் பழகுவோம். அந்த மட்டோடு நிற்போம்!

உங்களுக்குள் இங்கே அடித்துக்கொள்வதால் மனமாச்சரியம்தான் மிச்சமாகும். உலகளாவிய பாழ் அரசியலில் புதுமை ஒன்றும் புகுந்து விடாது என்பதைத் தெளிந்துகொள்வோம்!

முடிவாக...

“ஹே… யூத இனமே நீ அறிவில் எங்களில் மேம்பட்டு இருந்தாலும்கூட, இறைவன் நம்மிலும் மேம்பட்டவன் என்பதை உணர்ந்து கொள்…” எனப் புன்னகையோடு சொல்லியபடி எல்லாம்வல்ல அந்த இறையோனை நம்பித் தொழுது அமைதியாக அடுத்த கட்டம் நகர்வோம்!

ஐம்பெரும் காப்பியங்களில் தலையாயதான சிலம்பை மொழிந்த இளங்கோவடிகள் தன் வரந்தருங் காதையில் இவ்வாறு சொல்கிறார்…

“தெரிவுறக் கேட்ட திருத்தரு நல்லீர்:

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்

தெய்வம் தெளிமின்; தெளிந்தார்ப் பேணுமின்;

பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;

ஊணூன் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்!

அறவோர் அவைக்களம் அகலா தணுகுமின்;

பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்!

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது

செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்;

மல்லன்மா ஞாலத்து வாழ்வீர்…

மறுமைக்கு வழிநிற்பது அறம் ஒன்றே;

அதனை நாடுங்கள் உலகீரே...!”

சிலம்பச் செய்யுளின் இந்த ஈற்றடிக் கருத்தை எனது சகோதரர்கள் உணர்ந்துகொண்டால் இந்தக் கட்டுரைக்குப் புண்ணியம் சேரும்.

யாரேனும் இதை மொழிபெயர்த்து அந்த யூத தேசத்துக்குச் சொல்லிவிட முடிந்தால் அந்தப் பெரும் புண்ணியம், கொரோனா வந்தாலும் என்னைக் காக்கும்!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 20 மே 2021