மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

முதல்வருக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனி கோரிக்கை!

முதல்வருக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனி கோரிக்கை!

முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ஈபிஎஸ், முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்குச் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் கொரோனா தடுப்பு பணியின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

அதுபோன்று இந்த முறையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், "தினக் கூலிகள், ஆட்டோ டாக்சி ஓட்டுநர்கள், முடி திருத்துவோர், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏழை, எளிய தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் வழங்கவில்லை.

எனவே, எனது தலைமையிலான தமிழக அரசு மேற்குறிப்பிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித்தொகை மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை வழங்கியதுபோல், உடனடியாக 2,000 ரூபாய் மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை கொரோனா நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று வலியுறுத்தியுள்ளார்.

அதுபோன்று முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ், ஆம்புலன்ஸ் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர், “சென்னை மீனம்பாக்கம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு 15 கிலோமீட்டருக்கான சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு 6,500 ரூபாயும், ஆக்சிஜன் வசதியுடைய ஆம்புலன்ஸ்களுக்கு ரூ.9,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட மூன்று மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது.

இதுகுறித்து விசாரணை நடத்தி ஏழை மக்களின் சூழ்நிலையை சாதகமாகக் கொண்டு கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிர்ணயத்த கட்டணமே தமிழகம் முழுக்க உறுதிசெய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு இருவரும் முதல்வருக்கு தனித்தனியே கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 20 மே 2021