மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

ஒரு பிள்ளை வருவான்: கிராவின் கனவு நிறைவேறுமா!

ஒரு பிள்ளை வருவான்: கிராவின் கனவு நிறைவேறுமா!

99 வயதுவரை இருந்து அண்டரெண்டப் பட்சி என்ற தனது கடைசிப் படைப்பை கையெழுத்துப் பிரதியாகவே வெளியிட்ட எழுத்தாளர் கிரா 2021 மே 17ஆம் தேதி காலமாகிவிட்டார். காலமான எழுத்தாளர் கி.ராஜநாராயணன் என்கிற கிரா வாழ்வு கொண்டாட்டங்களால் நிரம்பியது. வாழ்வின் துன்பத்தில் இருக்கும் இன்பத்தைத் தேடியவர் அவர்.

எழுத்தாளர் அஜயன்பாலா தனது ஃபேஸ்புக் பதிவில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

“ இரண்டு வருடங்களுக்கு முன் தங்கர்பச்சான் சார் அழைத்து கி.ரா மனைவி கணவதி அம்மா இறந்துட்டாங்க பாலா என்றார் . இருவரும் பாண்டிச்சேரி சென்றோம் . நேரமாகிவிட்டதால் நேரே இடுகாட்டிற்கு சென்றோம். ஐயாவுக்கு வயதாகிவிட்டது. இவ்வளவுதூரம் வரமாட்டார் என நினைத்துப் போனாம் . அங்கு இடுகாட்டில் ஒரு கும்பல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. ஒரே சிரிப்பு மயம். இடுகாட்டில் வந்து யார் இப்படி செய்வது என எட்டிப் பார்த்தால், நடுவே சிமெண்ட் பெஞ்சில் ஐயா நடுநாயகமாக கையில் ஊன்றுகோலுடன் வாய் நிறைய சிரிப்பு. அப்பவே வயது 96 இருக்கும் . ஆனாலும் அவரது சிரிப்பை பார்த்தால் யாராவது சொல்ல முடியுமா? துக்கத்தோடு போன நாங்களும் கும்பலில் ஐக்கியமாகிவிட்டோம் . ‘எனக்கு முன்னாடி போயிட்டா... எனக்கு அதுவே சந்தோஷம். இல்லாட்டி நான் போயிருந்து அவ தனியா இருந்தா தான் கஷ்டம்’என்று தன் மனைவி தன்னை முந்திக் கொண்டது பற்றி சொல்லிக் கொண்டார். எனக்கு தெரிந்து வாழ்க்கையை பல கோணங்களிலும் முழுமையாக ரசித்து ருசித்து ஆண்டு அனுபவித்து கடந்தது அவர் வாழ்வு”என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீப ஆண்டுகளாகவே அவரது ஒவ்வொரு பிறந்தநாளும் இலக்கிய வாழ்வியல் ரசனைக் கொண்டாட்டமாக நகர்ந்தன.

2017 ஆண்டும் செப்டம்பர் 16... கிராவின் 95 ஆவது பிறந்த நாள். புதுச்சேரி பல்கலைக்கழக அரங்கம் நிரம்பியிருந்தது. 95 வயது குழந்தையாய் கி.ரா. தனது மனைவி கணவதி அம்மாளுடன் வீற்றிருந்தார். ஆவணப்படங்கள் திரையிடல், பாடல்கள், நாடகம், கி.ராவோடு பழகியவர்களின் அனுபவப் பகிர்வுகள் என கி.ரா.95 நிகழ்வு அருமையாக திட்டமிடப்பட்டு நேர்த்தியாய் நடத்தப்பட்டது. பா.செயப்பிரகாசம் உள்ளிட்ட கி.ராவின் அடர்த்தியான அன்பில் சிக்குண்டவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். நல்லக்கண்ணு, பழ நெடுமாறன், சிவக்குமார், தமிழச்சி, நாஞ்சில் நாடன் உள்ளிட்ட பல பிரபலங்கள் மேடையில் வீற்றிருந்தனர்.

அந்த விழாவில் கிரா பேசியதோடு, வாசகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதை 2017ஆம் ஆண்டில் மின்னம்பலத்தில் சிறப்புக்கட்டுரை: கி.ரா - சாதி ஒழிய திருமணத்தைத் தடைசெய்யுங்கள் என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தோம். அந்த விழாவில் கிராவின் முத்துக்களை மட்டும் இப்போது கோத்துத் தருகிறோம்.

"நான் பேசவேண்டியதை எல்லாம் என் எழுத்தின் மூலம் பேசிவிட்டேன். இருந்தாலும் ஏதாவது பேசனும் இல்லையா" என்று ஆரம்பித்தார் கிரா.

"நல்லக்கண்ணு ஊருக்கு உழைச்சே ஓட்டாண்டி ஆனவர். நான் எப்படியோ தப்பிச்சுட்டேன். நெடுமாறன் இந்திரா காந்தி மீது விழவேண்டிய அடியையெல்லாம் தன் மீது வாங்கிக்கொண்டவர். ஆனால் அந்த குடும்பத்துக்கு மட்டுமல்ல காங்கிரஸ்காரங்களுக்கே அந்த நன்றி இல்லை. இவர்கள் பெரியார் மாதிரி தேர்தல் அரசியல்ல ஈடுபடாம இருந்துருக்கலாம். இனிமேல் ஒன்னும் செய்யமுடியாது. இருக்குறவரை சந்தோஷமா இருந்துட்டு போயிடனும். இந்த தியாகிகள் தியாகிகளாகவே தான் இருப்பாங்க. அந்த வாழ்க்கையில தான் இவங்களுக்கு பெருமை. நாளைக்கே இவங்க கையில ஆட்சி அதிகாரத்தை கொடுத்து முதல்மந்திரியா ஆக்குனாலும் இவங்களால ஒன்னும் செய்யமுடியாது. ஏன்னா அதுக்கு சூது தெரிஞ்சுருக்கனும். ஓமந்துர் ரெட்டியாராலயே ஒன்றரை வருசத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியல. இவங்களால சும்மாவும் இருக்க முடியாது. சாமி ஆடுறவன் கொட்டு அடிக்குற சத்தத்தை கேட்ட உடனே ஆட ஆரம்பிச்சுடுற மாதிரி தான் இவங்களுக்கு அரசியலும்" என்ற கிராவின் பேச்சில் நடப்பு அரசியலின் மீதான கோபம் தெறித்தது.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து முழுநேரமாக பணியாற்றிய கி.ரா., அது சந்தித்துள்ள தோல்வியையும் அவருக்கே உரிய பாணியில் கூறினார்.

"நான் கம்யூனிஸ்ட் கட்சியில சேரும்போது தோழர் சீனிவாசராவ் தான் எனக்கு கட்சியோட அட்டையை கொடுத்தார். அதுல கம்யூனிஸ்ட் கட்சியை யாராலும் உடைக்க முடியாதுங்குற மாதிரி லெனின் சொன்ன வாக்கியம் ஒன்னு எழுதியிருந்தது. ஆனால் ஒன்னு ரெண்டா இல்ல ஆயிரக்கணக்கா உடைச்சுட்டான். இவன் எந்த காலத்துலயும் சேரமாட்டான்” என்றபோது சிந்தனைச் சிரிப்பு அரங்கத்தில்.

கிராவின் ஸ்பெஷல்களில் பாலியல் கதைகளும் உண்டு. அதுகுறித்தும் அப்போதைய 95 வயது இளைஞர் விளக்கமளித்தார்.

"மக்களிடம் இருந்து சேகரிக்கும் கதைகள் விரசமாக இருந்தால் கூட அதை பதிவு பண்ணனும். மொழியில் எல்லாமே இருக்கவேண்டும். பசங்கள பள்ளிக்கூடத்துல சேர்த்தா முதல்ல பழகுறது கெட்ட வார்த்தையாத்தான் இருக்கும். மொழி படிக்குறவன் முதல்ல இதுக்கு என்ன வார்த்தைன்னு தான் தேடுவான். நானும் அதை தான் செஞ்சுருக்கேன். அது இயல்பு.

கம்பன் புகழ் பரிசு தேர்வு கமிட்டியில் இருக்கும் போது மாலதி மைத்ரியை தேர்வு செஞ்சேன். அதற்கு லெனின் தங்கப்பா மறுப்பு தெரிவிச்சாரு. காரணம் அவரது படைப்பு மிகவும் செக்ஸாக இருக்குனு சொல்றாரு. அதற்கு நான், `இருந்தா என்ன'னு கேட்டேன். மருத்துவப் படிப்பு படிக்குறவங்க அம்மணமாக்கி தான் அறுவை சிகிச்சை பண்றாங்க. அதை ஆபாசம் என்று ஒதுக்க முடியுமா?. பக்தி இலக்கியங்கள், கோவில்களிலுள்ள சிலைகள் என எல்லாவற்றிலும் இது உள்ளது" என்ற கிரா மேடையில் இருக்கும் சிவகுமார் பற்றியும் பேசினார்.

சென்னையில் எந்த எழுத்தாளருக்கு உடம்பு சரியில்லைன்னாலும் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றுபவர் சிவக்குமாராகத்தான் இருக்கிறார். சினிமாவில் எல்லாரும்தான் சம்பாதிக்குறான். செய்யனுமே. அவருக்கு சொல் பேச்சு கேட்குற பிள்ளைகள் அமைஞ்சுருக்கு. இருந்தாலும் அவர்ட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. அதை இந்த சபையில சொன்னாத்தான் சரியா வரும். கம்ப ராமாயணம், மகாபாரதம் உரையெல்லாம் மேடையில பேசுறாரு. அது எல்லாமே பாடல்கள். பாடலை ராகத்தோடு தான் பாட வேண்டும். அப்படியே மூச்சுப் பிடிக்க முழங்க கூடாது. அதனால அவருக்கும் அதை கேக்குறவங்களுக்கும் ஒரு அற்ப சந்தோஷம் கிடைக்குது. இப்ப நான் கதை சொல்றன்னா ஆர அமர உட்கார்ந்து சொன்னா தான் கேப்பாங்க. அப்படித்தான் சொல்லனும். அது மாதிரி இராமாயணம், மகாபாரதத்தை விட சிலப்பதிகாரத்தை பேசனும். அது தான் நம்ம கதை" என்ற கிராவின் அறிவுரை மேடைப் பேச்சாளர்கள் பலருக்கும் பொருந்தும்.

அடுத்து வாசகர்கள் கேள்விக்கு பதிலளித்தார் கிரா.

”சாதி ஒழிய என்ன செய்ய வேண்டும்?” என்பது ஒரு வாசகரின் கேள்வி.

"அதற்கு முதலில் கல்யாணத்தை நிறுத்தனும். பிரான்ஸ்ல மாதிரி கல்யாணம் பண்ணிக்காம சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஊரில மற்ற சாதிக்காரங்க கூட நட்பா பழகுவாங்க சேர்ந்து சாப்பிடுவாங்க. ஆனால் பெண்ணை மட்டும் கட்டி வைக்கமாட்டாங்க. இந்த அமைப்பை மாத்தணும்னா கல்யாணத்தை நிறுத்தியாகனும். என்னோட பேத்தி ஒரு முஸ்லீம் பையனை கல்யாணம் பண்ணப் போறேன்னு சொன்னதும் சரின்னுட்டோம். அது அவங்க இஷ்டம் தான். இந்த மேடையிலயே அது நடந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது" என்று சிரித்தார் கிரா.

இன்னொரு வாசகர், “கி.ரா சமகாலப் பிரச்சனைகளை குறித்து கருத்து தெரிவிப்பதில்லையே?” என்று கேட்டிருந்தார்.

"நான் விமர்சிச்சா எல்லாம் சரியாகிடுமா, சரியாகிடுமுன்னு சொல்லுங்க. நானும் விமர்சிச்சுகிட்டே இருக்கேன். அரசை எதிர்த்து பத்து லட்சம் பேர் மெரீனாவுல திரளுதாங்க. பத்து நாளும் அங்கேயே நிக்குறாங்க. அடுத்து என்ன செய்யனும்ன்னு தெரியல. கட்சிக்காரங்க யாரையும் உள்ள விடல. அத்தனை பேரும் சென்னைக்குள்ள இறங்கிருந்தாங்கன்னா அரசு பயந்துருக்கும். அவங்களை வழிநடத்த மெய்யான தலைவன் வரணும். ஒரு பிள்ளை வருவான்" என நம்பிக்கையோடு கூறினார் கிரா.

அந்த கரிசல் மன்னனின் கனவுப் பிள்ளை யாரோ?

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 19 மே 2021