மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

அரசு மரியாதை: கரிசல் காற்றில் கலந்தார் கி.ரா

அரசு மரியாதை:  கரிசல் காற்றில் கலந்தார் கி.ரா

தமிழக வரலாற்றில் முதன் முறையாக அரசு மரியாதையோடு எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் இறுதி நிகழ்வுகள் இன்று (மே 19) நடைபெற்றன.

புதுச்சேரியில் வசித்து வந்த கிரா மே 17ஆம் தேதி காலமானார். அதையடுத்து புதுச்சேரி அரசின் இறுதி மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, கிராவின் உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் இடைச்செவல் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கே இலக்கிய உலகத்தினர், அரசியல் இயக்கத்தினர், பொதுமக்கள் என்று பலதரப்பினரும் கிராவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி நேற்று இரவே இடைச்செவல் கிராமத்துக்கு சென்று கிராவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இதுபற்றி, “கி.ரா அவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு, கோவில்பட்டியில் அவரின் சிலை அமைக்கப்படும், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி நடுநிலைப் பள்ளி, அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும், அவரது படைப்புகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஓர் அரங்கம் அமைக்கப்படும் என்றும், அறிவித்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி”என்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார் கனிமொழி.

இன்று பகல் கிராவின் உடல் அவரது வீட்டில் இருந்து அவருடைய தோட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்கண்டேயன், சதன் திருமலைக்குமார், ரகுராமன் மற்றும் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி உள்ளிட்ட ஏராளமானோர் இறுதி நிகழ்வில் திரண்டனர்.

காவல்துறையினர் முப்பது குண்டுகள் முழங்க கி.ராவுக்கு மரியாதை செலுத்த அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

-வேந்தன்

.

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 19 மே 2021