பள்ளிக் கல்வித் துறையில் குழப்பம்: அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!

politics

தமிழகத்தில் புதிய திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டு வந்த நிலையில்… மே 14 ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையின் புதிய ஆணையராக நந்தகுமார் பொறுப்பேற்றார்.

மேலும் பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனர் கண்ணப்பன் கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது. இதனால் பள்ளிக் கல்வித் துறைக்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (மே 18) சென்னையில் துறையின் முக்கிய அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.

பள்ளிக் கல்வித் துறைக்குள் என்ன நடக்கிறது என்று ஆசிரியர்கள், அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பதவி என்பது பிரிட்டிஷ் காரர்கள் காலத்தில் இருந்து இருக்கிறது. மருத்துவத் துறை இயக்குனராக எப்படி மருத்துவம் படித்தவர்களை நியமிக்கிறார்களோ அதுபோல கல்வித் துறை இயக்குனராக கல்வியியல் படிப்பு படித்தவர்களைத்தான் நியமித்து வந்திருக்கிறார்கள். மாணவர்களுடைய உளவியல், கல்விச் சிக்கல்கள், ஆசிரிய-மாணவ உறவு ஆகியவை பற்றி அறிந்த கல்வியியல் படிப்பு படித்தவர்கள்தான் பள்ளிக் கல்வித் துறைக்கு இயக்குனராக இருந்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2019 நவம்பர் 14 ஆம் தேதி அப்போதைய அதிமுக வெளியிட்ட அரசாணைப்படி பள்ளிக் கல்வித் துறை ஆணையர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. அதற்கு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார்.

பள்ளிக் கல்வித் துறையின் முதல் ஆணையராக அதிமுக ஆட்சியில் சிகி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார். இவர் பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனகரம், அரசுத் தேர்வு இயக்குனரம் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணித்து மேற்பார்வையிடுவார் என்று அதிகார வரம்பு அறிவிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் ஆய்வு நடத்துவது, கல்வித் திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது போன்ற பணிகளை செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதாவது பள்ளிக் கல்வித் துறை இயக்குனருக்கு மேல் பதவியாகவும், பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு கீழ் பதவியாகவும் இந்த ஆணையர் பதவி இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அப்போதே இதற்கு கல்வித் துறைக்குள் எதிர்ப்பு கிளம்பியது. கல்வியியல் படித்தவர்களால் செய்யப்படும் கல்வித் துறை இயக்குனர் பதவியை டம்மியாக்குவதற்காக இப்படி ஒரு புதுப் பதவி உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆசிரியர் சங்கத்தினர் மத்தியில் சலசலப்பும் எதிர்ப்பும் உருவானது. மேலும் இதனால் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பதவியே விரைவில் ரத்து செய்யப்படும் என்ற எச்சரிக்கை உணர்வும் கல்வித் துறைக்குள் உண்டானது.

இந்நிலையில் இப்போது பள்ளிக் கல்வித் துறை ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.நியமிக்கப்பட்ட அதேநேரம் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் காத்திருப்பில் வைக்கப்பட்டதால், அதிமுக அரசின் வழியில் திமுக அரசும் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பதவியை ஒழிக்க முயல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை கமிஷனர் என்ற பதவி கூட இருக்கட்டும். ஆனால் கல்வியியல் படித்தவர்களால் நிர்வாகிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனர் பதவியை நீக்கும் அபாயத்துக்குள் கல்வித் துறை சென்றுவிட வேண்டாம்” என்கிறார்கள்.

திருச்சியில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தை திமுக அலுவலகத்தில் கூட்டியதாக அமைச்சர் அன்பில் மகேஷை சுற்றி ஒரு சர்ச்சை எழுந்தது. இப்போது, அதிமுக அரசு பள்ளிக் கல்வித் துறைக்குள் கொண்டு வந்த நிர்வாக மாற்றத்தை திமுக அரசு மெதுவாக தீவிரப்படுத்துகிறதோ என்கிற சர்ச்சையும் இணைந்து எழுந்துள்ளது என்கிறார்கள் கல்வித் துறை பணியாளர்கள்.

**-வேந்தன்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *