மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

அனுபவத்திற்கு எதிரானதா புதுமை?

அனுபவத்திற்கு எதிரானதா புதுமை?

மு இராமனாதன்

நம்ப முடியவில்லை என்று தலைப்பிட்டிருந்தது ஒரு இணைய இதழ். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அறிவிப்பு அதிகாரப்பூர்வமானது.

ஷைலஜா டீச்சருக்குக் கேரளத்தின் புதிய அமைச்சரவையில் இடமில்லை. அவர் நிப்பா வைரஸோடு பொருதியிருக்கலாம். கொரோனா வீராங்கனை என்று அயல் ஊடகங்களாலும் ஐநாவாலும் கொண்டாடப்பட்டிருக்கலாம்.

கேரள வரலாற்றிலேயே அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி ஈட்டியிருக்கலாம், பரவாயில்லை கட்சி முடிவு செய்துவிட்டது. இடமில்லை. கட்சி இப்படி முடிவெடுப்பது இது முதல் முறையன்று. 1987இல் கௌரி அம்மாவால் முதல்வராக முடியவில்லை. 1996இல் ஜோதி பாசுவால் பிரதமராக முடியவில்லை. சகாக்கள் அனுமதிக்கவில்லை. இப்போது நாம் சேர்த்துக் கொள்ளலாம். 2021இல் ஷைலஜா டீச்சரால் அமைச்சராக முடியவில்லை. இந்த முறை காரணம் வித்தியாசமானது.

புதியவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும். நல்லது. கூடவே அனுபவசாலிகளை வைத்துக் கொள்வதில் என்ன பிழை? அனுபவத்தால் முதிர்ந்தவர்கள் மீது சகாக்களுக்கு ஏன் ஒவ்வாமை என்பதும் புரியவில்லை.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பத்தாண்டுகள் இருக்கும். இந்தியாவின் பெரு நகரமொன்றில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை மேற்பார்வையிட ஹாங்காங்கிலிருந்து ஜான் எண்டிகாட் அழைக்கப்பட்டிருந்தார். சுரங்கத் தொழில்நுட்பத்திலும் நிலவியலிலும் அவர் ஒரு சர்வதேச நட்சத்திரம்.

இளம் பொறியாளர்கள் அவரோடு உரையாட, கைகுலுக்க, படம் எடுத்துக் கொள்ள ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருந்தனர். அவரை பணித்தளங்களுக்கு அழைத்துப் போகிற பொறுப்பு எனக்குக் கிடைத்தது.

சுரங்கம் தோண்டும் இயந்திரம் நிறுவப்பட்ட பிறகு அது தன் சுழற்சியைத் தொடங்குகிற இடத்தில் மண்ணைக் கெட்டிப்படுத்துவார்கள். இதற்கு நிலத்தடி மண்ணின் தன்மையைப் பொறுத்து பல விதமான வழிமுறைகள் உண்டு. ஓர் இடத்தில் ஒப்பந்தக்காரர் ஒரு குறிப்பிட்ட விலை குறைவான வழிமுறையை முன்மொழிந்திருந்தார்.

அங்கு பணியாற்றிய ஓர் இளம் பொறியாளர் ஜானிடம் இன்ன முறையில் நிலத்தடி மண் கெட்டிப்படுத்தப்பட இருக்கிறது என்றார். அடுத்து அதை விவரிப்பதற்கான வாசகங்களையும் அவர் ஆங்கிலத்தில் தயாரித்து ஒத்திகை பார்த்து வைத்திருந்தார்.

ஆனால் அந்த இளைஞருக்கு அதை விவரிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜான் ஒற்றை வரியில் 'அந்த முறை இந்த இடத்தில் வேலை செய்யாது' என்று சொல்லிவிட்டு அடுத்த செய்திக்குத் தாவிவிட்டார். அதன் பிறகு குறிப்பிட்ட வழிமுறையை ஒப்பந்தக்காரர் முயற்சித்துப் பார்த்தார். அது வெற்றி பெறவில்லை. பிறகு வேறு வழிமுறை கையாளப்பட்டது.

மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. ஜான் மீண்டும் வந்தார். அதே பணித்தளம். இளைஞர் ஜானிடம் சொன்னார்: 'ஐயா, நீங்கள் கடந்த ஆய்வின்போது குறிப்பிட்ட வழிமுறை வேலை செய்யாது என்று ஒரு நிமிடத்திற்குள் சொன்னீர்கள். அது அப்படியே ஆயிற்று'. ஜான், 'இல்லையே, நான் ஒரு நிமிடத்தில் அப்படிச் சொல்லவில்லையே' என்றார். இளைஞருக்குக் குழப்பமாகிவிட்டது. ஜான் சொன்னார்: 'நான் அப்படிச் சொல்வதற்கு 40 ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன்'.

இளைஞரின் கண்கள் மின்னின. ஜான் ஒரு நிமிடத்தில் தனது கருத்தை, தீர்ப்பைச் சொல்லியிருக்கலாம். ஆனால் 40 ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகே அவரால் அந்த இடத்திற்கு வந்து சேர முடிந்தது. அதைத்தான் எளிய மனிதர்கள் அனுபவம் என்கிறார்கள்.

அந்த அனுபவத்தின் கீற்றுகளை அவ்வப்போது தரிசிக்கிற வாய்ப்பு பல இடங்களிலும் எனக்குக் கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு இடம்தான் ரியாத். அந்த நகரத்தில் சலவைக் கடைகள் பிரபலம். அரேபியர்கள் கழுத்து முதல் கால் வரையிலான வெள்ளை அங்கியை அணிவார்கள். தோப்பு என்று பெயர். வெயிலுக்கு உகந்தது. இதைத் துவைத்து மாளாது.

ஆகவே இந்தத் தோப்பையும் மற்ற உடைகளையும் சலவைக் கடைகளில் கொடுப்பார்கள். அவர்கள் துணி விவரங்களை எழுதிக் கொண்டு ஒரு ரசீது கொடுப்பார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு ரசீதைக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். துவைத்து இஸ்திரி செய்யப்பட்ட உடுப்புகளும் தோப்புகளும் அலுமினியம் ஹாங்கர்களில் தொங்கும். எல்லாவற்றிலும் ஒரு நான்கு இலக்க எண்ணும் எழுதிக் கட்டப்பட்டிருக்கும். ரசீதில் இருக்கும் எண்ணைச் சரிபார்த்து ஹாங்கர்களோடு எடுத்துக் கொடுப்பார்கள்.

பாஹிம் அலி வித்தியாசமானவர். எனது வீட்டிற்கு அருகில் இருந்தது அவரது சலவைக் கடை. அவரது கடையிலும் உடைகள் ஹாங்கர்களில் தொங்கும். அதில் அடையாள எண்ணும் எழுதிக் கட்டப்பட்டிருக்கும். ஆனால் அலி ரசீது வழங்கமாட்டார்.

துணிகளைக் கொண்டு போய்க் கொடுத்தால், வாடிக்கையாளர்களை கண்ணாடியின் கீழ் வட்டத்தின் வழியாகப் பார்த்துக் கொள்வார். துணி மூட்டையை வாங்கிக் கொண்டு அனுப்பிவிடுவார். இரண்டு நாட்களுக்குப் பிறகு போனால், மீண்டும் கீழ் வட்டத்தின் வழியாகப் பார்ப்பார். அரபி மொழியில் நான்கு இலக்க எண் ஒன்றைச் சொல்வார். அவரது வங்கதேச உதவியாளர் அந்த எண் கட்டிவிடப்பட்டிருக்கும் விறைப்பான துணிகளை எடுத்துத் தருவார். நாம் கொடுத்த துணியில் ஒன்றுகூடக் குறையாது. அலி இதை எப்படிச் செய்கிறார் என்பது எவ்வளவு யோசித்தும் எனக்குப் பிடி கிட்டியதே இல்லை.

ரியாத்தில் நான் சந்தித்த இன்னொரு அனுபவசாலி பீதாம்பர ஏட்டன். பத்தா என்கிற இடத்தில் காய்கறிக்கடை வைத்திருந்தார். மலையாளிகளும் தமிழர்களும் அவர் கடையில் குவிந்திருப்பார்கள். நீங்கள் அவரிடத்தில் ஒரு கிலோ வெங்காயம் கேட்கலாம், அரைக் கிலோ தக்காளி, கால் கிலோ வெண்டைக்காய், நூறு கிராம் மிளகாய் எது வேண்டுமானாலும் கேட்கலாம். அவர் எடுத்துத் தருவார். ஆனால் நிறுக்க மாட்டார். கண்ணால் எடைபோடுவார் என்பார் நண்பர். ஒரு முறை பொறுக்க முடியாமல் நண்பர் வாங்கிய அரைக் கிலோ சேனைக் கிழங்கை எடை போடச் சொன்னேன். ஏட்டன் அவர் பயன்படுத்தாத டிஜிடல் தராசின் தட்டில் கிழங்கை வைத்தார். தராசு 501 கிராம் காட்டியது.

பீதாம்பர ஏட்டனைப் போல் இன்னொரு எளிய மனிதர் லாம் சுங் வா. ஹாங்காங்கின் ஒரு ஆயத்த கான்கிரீட் தொழிற்சாலையில் வேலை பார்த்தார். ஹாங்காங்கில் பணித்தளத்தில் கான்கிரீட் தயாரிக்கக் கூடாது. ஆயத்தத் தொழிற்சாலையில் இருந்துதான் வாங்க வேண்டும். தொழிற்சாலைகள் நகருக்கு வெளியே இருக்கும். இரும்பு உருளைகள் சுற்றிக் கொண்டே இருக்கும் லாரிகளில் கான்கிரீட் வந்து சேரும்.

அவை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பணித்தளத்திற்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். லாரியில் கான்கிரீட்டின் கூடவே அதன் இடு பொருள்களின் சரியான அளவுகள் குறிக்கப்பட்ட சீட்டும் வரும். கான்கிரீட் தயாரித்தவுடன் அதில் தண்ணீரும் சிமெண்டும் எந்த விகிதத்தில் கலந்திருக்கின்றன என்று ஒரு சோதனை செய்வார்கள். அதையும் அந்தச் சீட்டில் எழுத வேண்டும். ஆனால் அந்தச் சோதனைக்குக் கால விரயம் ஆகும்.

அங்குதான் லாம் சுங் வாவின் சேவை வருகிறது. உருளையில் சுழலும் கான்கிரீட்டைப் பார்த்துவிட்டு, ஆம் பார்த்துவிட்டு, அவர் நீரும் சிமெண்டும் கலந்திருக்கும் விகிதத்தைச் சொல்வார். அதைச் சீட்டில் குறித்துக் கொள்வார்கள். நான் பீதாம்பர ஏட்டனை ஐயுற்றது போல லாம் சுங் வாவை யாரேனும் ஐயுற்றிருக்கலாம்; சோதனை நிகழ்த்தி மூக்கு உடைபட்டிருக்கலாம். ஒவ்வொரு கான்கிரீட் தொழிற்சாலையிலும் ஒரு லாம் சுங் வா இருப்பார். அவர்களை ஹாங்காங் கான்கிரீட் தரக்கட்டுப்பாட்டு மையம் அங்கீகரித்திருக்கிறது.

இந்த இடத்தில் கண்ணதாசனின் கவிதை ஒன்றைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். மனிதன் இறைவனிடத்தில் போய் 'பிறப்பின் வருவது யாது' என்று கேட்பான். இறைவன் 'பிறந்து பார்' என்பான். 'படிப்பு என்பது யாது' என்று கேட்பான்.

'படித்துப் பார்' என்பான் இறைவன். 'அறிவு எது' என்ற கேள்விக்கு, இறைவன் 'அறிந்து பார்' என்பான். எல்லாக் கேள்விகளுக்கும் இறைவனின் பதில் இப்படியே நீளும். கவிதை இப்படி முடியும்:

'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்/ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!/ ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி/ 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

கண்ணதாசனுக்கு அனுபவம் ஆண்டவனாகத் தெரிகிறது. இந்த அனுபவத்தைத் தத்தமது தொழிலில் தரிசித்தவர்கள் ஜான் எண்டிகாட்டும் பாஹிம் அலியும் பீதாம்பர ஏட்டனும் லாம் சுங் வாவும். இந்த வரிசையில் ஷைலஜா டீச்சரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் இடத்திற்கு வந்து சேர ஆண்டுகள் பல ஆகியிருக்கும். அந்த அனுபவத்தைப் பயன் கொள்ள மறுப்பதால் யாருக்கு இழப்பு? இதை ஏன் சகாக்கள் பார்க்க மறுக்கிறார்கள்? அனுபவத்தை மதிப்பது எப்படி இளமைக்கும் புதுமைக்கும் எதிரானதாக இருக்கும்?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

(மு இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: [email protected])

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 19 மே 2021