மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதா?

தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதா?

தமிழ்நாட்டுக்கான இடைக்கால மானியத்தை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் மே 15ஆம் தேதி நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2.07 லட்சமாக இருக்கிற நிலையில், 2021-22 வரவு செலவுத் திட்டத்தில் மத்திய அரசு வாக்குறுதியளித்த தடுப்பூசிக்கான நிதி தமிழகத்துக்கு அளிக்கப்படவில்லை. அதேபோன்று, மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியும் பெறப்படவில்லை. இது கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்கள் மீது மத்திய அரசின் அக்கறையின்மையைக் காட்டுகிறது.

இதுகுறித்து தமிழக அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் தி குயின்ட் இணைய தளத்திடம் பேட்டியளித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக 2020-21 நிதியாண்டில் கோவிட் கேர் பராமரிப்புக்கு வழங்கப்பட்ட நிதி போன்று தற்போதும் வழங்க வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டின் கொரோனா நிவாரணக் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “முந்தைய ஆண்டில், தமிழக அரசுக்கு ரூ.712 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு. இந்த ஆண்டு, மத்திய பட்ஜெட்டில் மாநிலத்துக்கான கொரோனா நிதியை ஒதுக்கவில்லை என்பதால், முதல்வர் உடனடி உதவி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். ஆனால், இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை” என்று கூறினார்.

மேலும், “தற்போது, மாநிலங்கள் தாங்களாகவே தடுப்பூசிகளை வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. அப்படியென்றால் இதற்கான மத்திய அரசின் உதவி எங்கே? உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்குமாறு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டது நரேந்திர மோடி அரசு. அதனால், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் உலகளாவிய டெண்டர்கள் மூலம் தடுப்பூசிகளை வாங்குவதற்கு முயற்சி செய்து வருகின்றன. மேலும், தடுப்பூசிகளின் விலை வெவ்வேறு விதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், எங்களுக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது” என்று கூறினார்.

2020-21ஆம் ஆண்டில், தமிழகத்தில் ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறைந்தது ரூ.3,000 கோடி செலவிடப்பட்டது. மத்திய அரசின் மானியத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஆர்டி - பிசிஆர் சோதனை மற்றும் மருத்துவமனைகளையும் மேம்படுத்தப்பட்டது என்று தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி கூறினார்.

கடந்த நிதியாண்டில் மத்திய அரசு வெளியிட்ட தொகை, மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், முன்பு போல தற்போதும் நிவாரண நிதி வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். எப்படியிருப்பினும், மாநில அரசு விதித்த ஊரடங்கின்போது மத்திய அரசு உதவாது. ஊரடங்கை மத்திய அரசு விதிக்காததால், அந்த காலகட்டத்தில் மத்திய அரசு உதவாது என எங்களுக்கு கூறப்பட்டது எனக் கூறினார்.

இதுகுறித்து மாநில அதிகாரிகள் கூறுகையில், “மத்திய இடைக்கால நிவாரண நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்க வேண்டும். முந்தைய வாரம் தமிழக முதல்வர் இந்தக் கோரிக்கையை வைத்தார். மத்திய அரசு நிதிகளை வெளியிட்டால், மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி கொள்முதல் ஆகியவற்றை மாநில அரசு சிறப்பாக செய்ய முடியும். மேலும், மாநிலங்களில் சுகாதாரத் துறைகளில் கூடுதல் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்களை உருவாக்க அந்த நிதி பயன்படுத்தப்படும்” என கூறினார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற்றது. அதனால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் மாநிலத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேர்தல்கள் வரவிருந்ததாலும், பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்ததாலும், முந்தைய ஆண்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கியது. தற்போது, மத்திய அரசுக்கு எதிரான கட்சி, தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருப்பதால் மத்திய அரசு அதிக அக்கறை காட்டவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதைப் பொய்யாக்கி உரிய நிதியை ஒதுக்குமா மத்திய அரசு?

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 19 மே 2021