மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

கரிசல் பெருங்கிழவனுக்குக் கண்ணீர் விழா - சிலிர்க்க வைத்த சாத்தூர் நிமிடங்கள்!

கரிசல் பெருங்கிழவனுக்குக் கண்ணீர் விழா - சிலிர்க்க வைத்த சாத்தூர் நிமிடங்கள்!

தமிழகத்தின் அறிவிக்கப்படாத ஞானபீடம், வட்டார வழக்குகளின் சிம்மாசனம், கதை சொல்லிகளின் உச்சாணிச் சிகரம் எழுத்தாளர் கி.ரா தன் வாழ்நாளில் சில பலமுறை புதுச்சேரியில் இருந்து தனது சொந்த ஊரான இடைச்செவலுக்குச் சென்றிருக்கிறார்.

‘இன்னிக்கு கிரா வர்றாரு...’ என்றொரு எழுத்தாளக் கூட்டமும், தோழர்கள் கூட்டமும் அவரை ஊரில் சென்று மொய்த்துக்கொள்ளும் அல்லது அவர் தெற்கே ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்தால் அங்கே போய் சந்தித்துக்கொள்ளும்.

ஆனால் நேற்று (மே 18) இரவு ஒரு கூட்டம் கி.ராவை வரவேற்க கண்ணீருடன் காத்திருந்தது. இனி இதுபோல் அவரை வரவேற்க முடியாது, வழியனுப்பவும் முடியாது.

மே 17ஆம் தேதி புதுச்சேரியில் காலமாகிவிட்ட அந்த கரிசல் சகாப்தம் தன் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் இடைச்செவலுக்கு வெறும் உடலாக நேற்று மதியம் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டது.

”கி.ரா எப்ப வர்றார்... கி.ரா எப்ப வர்றார்?” என்றே இப்போதும் பழக்கதோஷத்தில் கேட்டுவிட்ட தோழர்கள் பின் சட்டெனெ கண்களைக் கசக்கிக்கொண்டனர். ஆனபோதும் இந்த கடைசி கண்ணீர்ப்பூக்கள் வரவேற்பை அளிக்க அவர்கள் தவறவில்லை.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக் குழு, சாத்தூர் கிளை சார்பில் கிராவின் உடல் சாத்தூர் மாவட்டத்தில் நுழையும் இடத்தில் நேற்று ஒரு கண்ணீர் வரவேற்பை அளித்தனர்

நேற்று இரவு 6 மணி முதல் 7மணிக்குள் கிரா சாத்தூரை கிராஸ் செய்வார் என்று தகவல்கள் வர, அப்போதே சாத்தூர் புற வழிச்சாலை படந்தால் முக்கு ரோட்டில் கலைஞர்களும், விருதுநகர் மாவட்ட அரசியல் புள்ளிகளும் சமூக இடைவெளியோடு கூடத் தொடங்கினார்கள்.

கொஞ்ச நேர இடைவெளியில் கிரா ஆம்புலன்ஸில் சாத்தூரை அடைந்தார். தமுஎகசவின் தோழர் லட்சுமணப் பெருமாள், டாக்டர் அறம், திமுகவின் பா.அசோக், அதிமுகவின் சண்முகக்கனி, மதிமுக தங்கவேலு, காங்கிரஸ் ரவிச்சந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஜெயந்தி, காயத்ரி, மார்க்சிஸ்ட் கட்சியின் சுந்தரபாண்டியன், மூத்த தோழர்கள் சத்திரப்பட்டி சேது, கருணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கூடியிருந்தனர். கிராவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய அவர்கள் கண்ணீரோடு அவரை கரிசல் மண்ணுக்கு வரவேற்றனர்.

ஓர் எழுத்தாளருக்கு தமிழகம் இப்படி அஞ்சலியைப் பார்த்ததில்லை. பதிவு செய்ததில்லை. 99 வயதில் காலமான கி.ரா நேற்று இரவு தனது சொந்த ஊருக்குப் போய் சேர்ந்தார். இன்று (மே 19) தமிழக அரசின் அரசு மரியாதையோடு நிறைவாழ்வு வாழ்ந்த கரிசல் பெருங்கிழவனுக்கு கண்ணீர் விழா எடுக்கப்படுகிறது.

-ராகவேந்திரா ஆரா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

புதன் 19 மே 2021