மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

ஸ்டாலின் வழியில் செல்வாரா பினராயி?

ஸ்டாலின் வழியில் செல்வாரா பினராயி?

டி.எஸ்.எஸ்.மணி

கேரள இடது ஜனநாயக முன்னணியின் முதல்வர் மற்றும் அமைச்சரவை - மே மாதம் 20ஆம் நாள் பதவியேற்பை - தேர்தல் முடிவு வந்த பிறகு 18 நாட்கள் கழித்து நடத்த இருக்கிறது.

மே 18இல் அதற்கான இடது ஜனநாயக முன்னணி ஆலோசனைக் கூட்டம், பையனூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் சிறப்பாக நடத்திய ‘கந்த சஷ்டி’ என்ற நல்ல நாளன்று நடந்து முடிந்தது.

கந்த சஷ்டிக்குப் பிறகு வரும் நல்ல நாளான மே 20இல் ஆளுநரால் 500 பேர் அமரும் அரங்கில் பதவியேற்பு நடைபெற உள்ளது. ஏன் 500 பேரை கொரோனா தீவிரமாக இருக்கும்போது கூட்ட வேண்டுமெனக் கேட்ட ஊடகவியலாளர்களுக்கு, “சிலர் விழா எடுப்பதை விரும்பாமல் பேசுகிறார்கள்” என்று தனது உள்ளக்கிடக்கையை சாட்டையடியாக, பினராயி விஜயன் கொடுத்துள்ளார்.

நமக்கு கொரோனாவை மனதில் கொண்டு தமிழ்நாட்டில் விழா எடுக்காமல், ஆளுநர் மாளிகையிலேயே, மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட பதவியேற்பு நினைவுக்கு வருகிறது.

கேரளாவின் தொடர் முதல்வர் பினராயி விஜயன், தனது வருங்கால அமைச்சரவைக்குத் தோழர்களைத் தேர்வு செய்வதற்காக, தேர்தலுக்கு முன்பிருந்தே கண்ணும்கருத்துமாக இருந்தார்.

அமைச்சரவை, அனுபவமுள்ளவர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதைவிட, அமைச்சரவை, ஜனநாயகக் கூட்டுச் சிந்தனைக்குத் தளமாக அமைய வேண்டும் என்பதைவிட, அமைச்சரவையில் தனது கருத்துகளுக்கு மாற்றுக்கருத்து எழ முடியாத சூழலை உருவாக்க வேண்டும் என்பதில், தனது விருப்பங்களை, கருத்துகளை, செயல்களை ஒப்புதல் கொடுக்கும் நிலையில் மட்டுமே அமைச்சரவை இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தன்னை அமைச்சரவைக்குள் ‘சுப்ரீம் லீட’ராக ‘ஸ்ட்ராங் மேனா’க ஆக்கக் கூடாது என்ற, சி.பி.எம் கட்சியின் பொலிட் பீரோ (Peoples Democracy - Editorial May 9) அபிப்பிராயத்தை நொறுக்கும் பாணியில், தன்னைத் தவிர மற்ற அனைவரையும் புதிய அமைச்சர்களாக அனுபவமற்ற நிலையில் உள்ளவர்களாகத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறதே...

தேர்தலுக்கு முன்பு, வேட்பாளர் தேர்வு நேரத்திலேயே அனுபவமுள்ள அமைச்சர் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.சுதாகரனும் தாமஸ் ஐசக்கும் கண்ணனூர் மாவட்ட ஈ.பி.ஜெயராஜும் ‘இரண்டு முறைக்கு மேல் எம்.எல்.ஏ. ஆக இருப்பவர் தேர்தலில் நிற்கக் கூடாது’ என்ற கட்சி விதியைப் பயன்படுத்தி, வேட்பாளர் பட்டியலிலேயே அவர்களை இல்லாமல் ஆக்க முடிந்தது.

இப்போதும், கண்ணனூர் மாடத்தில் சைலஜா டீச்சரை ‘கிளீன் போல்டு’ செய்ய முடியவில்லை. சைலஜா டீச்சர், மாநிலத்திலேயே, அதிக வித்தியாசத்தில் எம்.எல்.ஏ. ஆக வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு, சைலஜாவை காலி செய்ய, அமைச்சரவைத் தேர்வு என்ற வாய்ப்பு மீதம் இருந்தது.

அதற்குள், பொலிட் பீரோ தனது அதிருப்தியைத் தெரிவித்தது. ஆனாலும் கேரள கட்சிக் கிளைதான் தேர்தல் வெற்றியை இந்தியாவிலேயே சாதித்தது. மேற்கு வங்க கட்சிக் கிளைகூட, சுத்தமாக தேர்தல் போரில் தோற்றுவிட்டது என்பதைக்கூறி, பொலிட் பீரோவை, வாயடைக்க வைக்க பினராயி விஜயனின் ஆதரவாளர்களால் முடிந்தது.

இதே சைலஜா டீச்சரை முதன்முறையாகச் சென்ற அமைச்சரவையில் சேர்த்தபோது, அவரது சுகாதார இலாகா செயல்பாட்டைப் பாராட்டி, விளம்பர ஏற்பாடுகளைத் தட்டிவிட்டு, ‘வாஷிங்டன் போஸ்ட்’ வரை அவரது புகழைப் பரப்பியவர் பினராயிதான்.

ஐரோப்பாவில், சைலஜா டீச்சருக்கு நிஃபா புயலைக் கட்டுக்குள் கொண்டு வந்தார் என்று விருது வாங்க, உடன் சென்றவரும் பினராயிதான். பிறகு அவரது எதிர்பார்ப்புக்கு மீறி, மாற்றுக்கருத்துக் கூறும் அளவுக்கு, சைலஜா வளர்ந்து விட்டாரா என்று முகச்சுளிப்புக்கு உள்ளானவரும் அதே பினராயிதான்.

அதேநேரம், சைலஜா டீச்சருக்குக் கட்சியின் மத்திய கமிட்டியிலும், பொலிட் பீரோவிலும் ஆதரவு பெருகுவதைக் கண்டு ரசிக்காதவரும் பினராயிதான். ‘துணை முதல்வராக சைலஜாவை ஆக்கு’ என்று ஆலோசனை வந்து விடும் என்பதாகச் செய்தி பரவியது.

அதனால்தான், அவரை அமைச்சராகவும் ஆக்கவில்லை. அதிகாரம் இல்லாமல் பள்ளிக்கூட வகுப்பு மானிட்டர் போல, ‘கொறடா’ எனப் புள்ளி வைத்து விட்டார்கள். பள்ளிக்கூட வகுப்பு மானிட்டர், வகுப்பு ஆசிரியர் சொல்வதை செய்பவர்தானே... இதற்குப் பெயர் ஜனநாயகமா?

“ஆமாம். ஒரு மூத்தவர், சீனியர் பினராயி விஜயன் போதும். மற்றபடி, இளம் புதியவர்களை உற்சாகப்படுத்தி, வளர்க்க வேண்டாமா...” என்று அவரது ஆதரவாளர்கள் பாட்டுபாடிக் கொண்டாடுகிறார்கள். ஆனால், கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும், பிருந்தா கரத்தும், சைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் இடமில்லை என்பதை எதிர்த்து, கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

உள்ளபடியே, ஆயுதம் ஏந்திய மோதல் போர்க்களத்தில், கட்டளைத் தலைவர் தனக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கூற, அனுபவம் உள்ள மூத்தவர்களை, ஒத்த வயது அனுபவம் கொண்டவர்களை, ஏதாவது ஒரு வகையில் விலக்கி விடுவது என்பது நடக்க வாய்ப்புள்ளது.

ஆயுதப்போராட்ட வரலாறுகளில், பாலஸ்தீனமானாலும், ஈழமானாலும் அப்படி நடந்துள்ளது என்று கூறுவார்கள். அதை எதிர்த்தரப்பினர் அல்லது மாற்றுத்தரப்பினர் ‘பாசிஸ்ட் அணுகுமுறை’ என விமர்சித்துள்ளனர். அதை செயல்படுத்திய தரப்பினர், ‘போர்க்களத்தில் ஒற்றைக் கட்டளைக்குக் கீழ்ப்படிதல் முக்கியம்தானே’ என நியாயப்படுத்தி விவாதிப்பார்கள்.

அப்போதும்கூட மாவோ கூறுவார், ‘துப்பாக்கி, கட்சியைக் கட்டளையிட அனுமதிக்கக் கூடாது. கட்சிதான், துப்பாக்கிக்குக் கட்டளையிட வேண்டும் (Gun should not be allowed to Command the Party. Party should Command the Gun - Mao)’ என்று. அது ஆயுதம் ஏந்திய போர்க்களச் சர்ச்சை.

ஆனால், இது அரசியல் ஜனநாயகக் களம்; ஆயுதப் போராட்டக் களமல்ல. இங்கே, ஜனநாயகத்துக்குத்தான், கூட்டு ஆலோசனைக்குத்தான், கூட்டு விவாதங்களுக்குத்தான், கூட்டு முடிவுகளுக்குத்தான் அமைச்சரவை என்ற முறை இருக்கிறது.

அதற்கு பல்வேறு அனுபவங்களையும் விவாதித்து, இணைத்துக்கொண்டு முடிவுகள் எடுக்க வேண்டும். அதற்கு அப்படி விவாதிக்கக்கூடிய அனுபவசாலிகளை விட்டுவிடக் கூடாது. அமைச்சரவைக்குள், அவர்களைக் கொண்டுவர வேண்டும்.

இங்கே ஒரு சுப்ரீம் லீடரைக்கொண்டு வரக்கூடிய, சூழலை உருவாக்கினால், ‘ஒன் மேன் ஆர்மி’யைக் கட்ட முயன்றால், அனுபவங்களையும், அனுபவசாலிகளையும் விலக்கிவைத்தால், கூட்டு ஆலோசனைகளும், கூட்டுத் திட்டமிடலும், கலந்துரையாடி உண்மையைத் தேடும் பாங்கும் பழுதாகி விடும். அதுவே அமைச்சரவையை, பலவீனப்படுத்தி, ‘ஒரு கடவுளை’ உருவாக்க வழி வகுத்து விடும் .

பினராயினுடைய ‘சீரிய முயற்சி’ அப்படி ஒரு சூழலை உருவாக்க வாய்ப்பைத் தேடுகிறது. அதை உணர்ந்துதான், சிபிஎம் தலைமையிலிருந்து, சீதாராம் யெச்சூரியும், பிருந்தா கரத்தும், சைலஜா டீச்சரை அமைச்சரவையில் இணைப்பது பற்றி, மறு பரிசீலனை செய்யச் சொல்லி, பகிரங்கமாகவே கேட்டுள்ளனர்.

மா சே துங் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவது பற்றிக் கூறும்போதே, ‘மூத்த அனுபவம் உள்ளவர்களையும், புதிய, இளம் துடிப்பானவர்களையும் இணைத்து, மேலிருந்து கீழ் வரை கட்சியைக் கட்டமைக்க வேண்டும்’ என்ற கூறுவார்.

கட்சி கட்டுவதற்கே அப்படி இரு தரப்பினரும் தேவை எனும்போது, அன்றாட முடிவுகளை எடுக்க வேண்டிய ஓர் அமைச்சரவையில், இரண்டு தலைமுறையினரும் தேவை என்பதுதானே, ஜனநாயக ரீதியான மக்கள் நலனை முன்வைக்கும் ஒரு ஆட்சிக்குத் தேவை?

இதே நேரத்தில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் தலைமை ஏற்கும் திமுக தலைமை, தனித்து ஆட்சி செய்வதற்கான எண்ணிக்கையைப் பெற்றுள்ளபோதிலும், கட்சிக்குள் உள்ள மூத்தவர்களையும், புதிய இளையவர்களையும் இணைத்து அமைச்சரவையை அமைத்துள்ளது.

துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு உட்பட அனுபவமுள்ள மூத்தவர்களையும், மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், கணேசன் உட்பட புதியவர்களையும் இணைத்து அமைச்சரவையை திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.

இதை பினராயி விஜயன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாதா... நாம் அமைச்சரவையை அமைக்கும் அணுகுமுறையைப் பற்றித்தான் பேசுகிறோம். அதன் செயல்பாடு, அது பற்றிய பலம், பலவீனம் அடுத்து வரக்கூடியது.

தனிநபர் பினராயி விஜயன் தனி வரலாற்றையும் வல்லமையையும் பெற்ற ஓர் அனுபவமிக்க முதல்வராக வீற்றிருப்பது பெருமைதான். ஆனாலும், தப்பித்தவறியும்கூட, தனிநபர் ஆளுமைக்குக் கீழ் அனுபவங்களும் படிப்பினைகளும், ஜனநாயகமும் பலியாகிவிடக்கூடாதே என்ற அச்சத்தில்தானே கேட்கிறோம்?

அதனால்தானே, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலிருந்தும், தங்களது நல் ஆலோசனையைப் பகிரங்கமாக முன்வைக்கிறார்கள்?

கட்டுரையாளர் குறிப்பு

டி. எஸ்.எஸ்.மணி

டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர்.

தொடர்புக்கு: [email protected]

.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 19 மே 2021