மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

எடப்பாடி கோட்டைக்குள் செந்தில் பாலாஜி எதற்காக?

எடப்பாடி கோட்டைக்குள் செந்தில் பாலாஜி  எதற்காக?

முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற தினத்தில் இருந்து கொரோனா தொற்றை சமாளிக்கவே பெரும்பாடு பட்டு வருகிறார்கள் முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும்.

பத்து வருடங்களுக்குப் பின் ஆட்சியைப் பிடித்தோம் என்ற இயல்பான கொண்டாட்டத்தைக் கூட கொண்டாட முடியாமல் கொரோனா ஒழிப்புப் பணியில் தலைமைச் செயலகம் முதல் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் வரை பரபரப்பாக இருக்கின்றன.

ஆனாலும், “read between the lines" என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப இத்தகைய அரசுப் பணிகளுக்கு இடையில் அரசியல் பணிகளும் நடக்காமல் இல்லை.

கடந்த மே 9 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அன்று மாலையே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அமைச்சரை கொரோனா தடுப்புப் பணி பொறுப்பாளராக நியமித்தார்.

கொரோனா பரவல் அதிகமுள்ள 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

சென்னை மாவட்டத்துக்கு மா.சுப்பிரமணியம், சேகர்பாபு, திருச்சி மாவட்டத்துக்கு கே.என்.நேரு, அன்பில் மகேஷ், செங்கல்பட்டு தா.மோ.அன்பரசன், திருவள்ளூர் நாசர், மதுரை மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல்ராஜன், தூத்துக்குடி கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் இப்படியாக அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் அந்தந்த மாவட்ட கொரோனா தடுப்புப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். நெல்லை மாவட்டத்துக்கு அமைச்சர்கள் இல்லாததால் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல கோவை மாவட்டத்துக்கு அமைச்சர் ராமச்சந்திரனும், ஏற்கனவே கோவை விவகாரங்களை கவனித்து வந்த சக்கரபாணியும் நியமிக்கப்பட்டனர்.

இதில் குறிப்பிடத் தக்கதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்துக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கொரோனா தடுப்புப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில்தான் விசேஷமே இருக்கிறது என்கிறார்கள் கொங்கு உடன் பிறப்புகள்.

“மே 9 ஆம் தேதி முதல்வரிடம் இருந்து இந்த அறிவிப்பு வந்த சில நாட்களில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு ஆகிய நிகழ்வுகள், கரூரில் ஆய்வுப் பணிகள் ஆகியவற்றை முடித்துவிட்டு 13 ஆம் தேதியில் இருந்து சேலத்தில் செயல்பட ஆரம்பித்துவிட்டார் செந்தில்பாலாஜி.

13 ஆம் தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ்தொற்று தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், செந்தில் பாலாஜி தலைமையில், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு ஊசிகளின் கையிருப்பு, ஆக்சிஜன் - படுக்கை வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார் செந்தில்பாலாஜி. அப்போதில் இருந்து தனது மாவட்டமான கரூரிலும் சேலம் மாவட்டத்திலும் மாறி மாறி விசிட் அடுத்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார் செந்தில்பாலாஜி.

எடப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர் அரசு மருத்துவமனைகள் ஆய்வு, சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனை அதிபர்களோடு ஆலோசனைக் கூட்டம் என்று தொடர்ந்து கூட்டம் போட்டு வருகிறார்.

செந்தில்பாலாஜி விரைவில் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களோடும் ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களோடும் ஆலோசனை நடத்த இருக்கிறார். சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மட்டுமே திமுக சட்டமன்ற உறுப்பினர். மற்ற பத்து பேரும் அதிமுகவினர்தான். இவர்களின் ஆலோசனை இல்லாமல் கொரோனா தடுப்புப் பணிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாது. அந்த அடிப்படையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருக்கும் செந்தில்பாலாஜி விரைவில் அவர்களைக் கூட்டி விவாதிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

அவர்களில் பலர் செந்தில்பாலாஜிக்கு அறிமுகமானவர்கள். சிலர் பழகியவர்கள், பரிச்சயமானவர்கள். எனவே இது கொரோனா தடுப்புப் பணியாக மட்டும் இல்லாமல் எதிர்காலத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை திமுகவுக்குக் கொண்டு செல்லும் அச்சாரமாகவும் அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆட்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலோடு நடந்து முடிந்த பிறகு... கொத்தாக சில எம்.எல்.ஏ.க்களை திமுக பக்கம் கொண்டு வர தலைமையிடம் அனுமதி கேட்டார் செந்தில்பாலாஜி என்றொரு தகவல் பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது அதை திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் கூறினார்கள்.

இப்போது மீண்டும் அதே அசைன்மென்ட் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்வதற்காகத்தான் சேலம் மாவட்ட கொரோனா தடுப்புப் பொறுப்பாளராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டிருக்கிறார். கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட பிறகு அடுத்த பணி சேலம் மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களில் சிலரை திமுகவுக்குக் கொண்டுவருவது அல்லது எடப்பாடிக்கு எதிராக கொண்டு செல்வது என்பதுதான் செந்தில்பாலாஜியின் திட்டம். இது போகப் போகத் தெரியும்” என்று முடித்தார்கள்.

இதுகுறித்து நாம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடம் பேசினோம்.

“செந்தில்பாலாஜியை சேலம் பொறுப்பாளராக நியமித்தபோதே இது கொரோனா தடுப்புக்கான பணி மட்டுமல்ல என்பது எங்களுக்கும் தெரியும். அதனால்தான் அவருக்கு மின்சாரத்தையும், மதுவிலக்கு ஆயத்தீர்வையையும் கொடுத்திருக்கிறார்கள். அவர் எவ்வளவு வேண்டுமானாலும் இறைக்கலாம். எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தை தன் கைக்குள் வைத்திருக்கிறார். சென்னையில் இருந்து சேலம் வந்தால் தலைவாசல்தான் சேலம் மாவட்டத்தின் எல்லை. தலைவாசல் வரை செந்தில்பாலாஜி பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால் தலைவாசல் தாண்டிவிட்டால் இது எடப்பாடி கோட்டை. இங்கே செந்தில்பாலாஜி எதுவும் செய்ய முடியாது” என்கிறார்கள்.

ஏற்கனவே அதிமுகவைக் கழற்றி வேலை பார்க்க நயினார் நாகேந்திரனுக்கு பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி கொடுத்து பாஜக தயாராகிறது. இந்நிலையில் சேலத்துக்குள் நுழைந்திருக்கும் செந்தில்பாலாஜியால் அரசியல் ரீதியான அதிரடிகள் இருக்குமா என்பது இன்னும் சில மாதங்கள் கழித்து தெரியும். ஆனால் நெருப்பில்லாமல் புகையாது.

-ராகவேந்திரா ஆரா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

செவ்வாய் 18 மே 2021