மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

கி.ரா.வுக்கு அரசு மரியாதை! தமிழக முதல்வர் அறிவிப்பு!

கி.ரா.வுக்கு அரசு மரியாதை! தமிழக முதல்வர் அறிவிப்பு!

கரிசல் இலக்கியத்தின் தந்தை, வட்டார வழக்குக் கதைகளின் நாயகன் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நேற்று (மே 17) இரவு தனது 99 ஆவது வயதில் காலமானார். பள்ளிப் படிப்பைத் தாண்டாவிட்டாலும் தன் படைப்புகள் மூலம் இலக்கிய சிகரங்களில் உலவிய கி.ரா, புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் கௌரவப் பேராசிரியராக திகழ்ந்தவர். எனவே அவர் புதுச்சேரியிலேயே வசித்து வந்தார்.

கி.ராவின் மறைவை அடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

“கி.ரா என்று எழுத்துலகில் அன்போடு அழைக்கப்பெறும் திரு. கி.இராஜநாராயணன் அவர்களது மறைவு கரிசல் மண்ணின் கதைகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி. தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லியான அவரை இழந்து நிற்கிறோம். தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள். யார் ஆறுதல் சொல்வார்? இந்த மண் உள்ளவரை; அதில் கரிசல் இலக்கியம் உள்ளவரை; ஏன், தமிழ் உள்ளவரை நமது உள்ளங்களில் அவரது புகழ் வாழும்!

அந்தோ! அந்தக் கரிசல் குயில் கூவுவதை நிறுத்திக் கொண்டதே!

அவர் மறையவில்லை; எழுத்துகளாய் உயிர் வாழ்கிறார். நம் உயிரில் கலந்து வாழ்கிறார். வாழ்க அவரது புகழ்! அவரது குடும்பத்தினருக்கும், சக படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும், தமிழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சாகித்ய அகாடமி விருதுபெற்று தமிழ் இலக்கியத்தின் பேராளுமையாய்ப் பெருவாழ்வு வாழ்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா. அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஏற்கனவே புதுச்சேரியில் வசித்து மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு அப்போதைய புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி அரசு மரியாதை அளித்து இறுதி நிகழ்வுகளை நடத்தச் செய்தார். முதன் முதலில் தமிழ் எழுத்தாளரின் மரணத்துக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது அதுதான். இந்நிலையில் தமிழ்நாட்டில் முதன் முதலில் ஓர் எழுத்தாளருக்கு அரசு மரியாதை அளிக்கப்படுவது இப்போது கி.ராவுக்கு அளிக்கப்படும் மரியாதைதான்.

-வேந்தன்

.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 18 மே 2021