கி.ராவுக்கு இரு மாநில அரசு மரியாதை: ஸ்டாலின் முடிவெடுத்த பின்னணி!

politics

மறைந்த எழுத்தாளர் கி.ரா தமிழக அரசின் இறுதி மரியாதையோடு வழியனுப்பி வைக்கப்படுவார் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 18) காலை அறிவித்தார்.

முன்னதாக புதுச்சேரி லாஸ்பேட்டையில் மறைந்த கி.ரா அங்கேயே தகனம் செய்யப்படுவார் என்று செய்திகள் பரவின. இந்நிலையில் தமிழக முதல்வரின் கி.ராவுக்கு அரசு மரியாதை அளிக்கும் என்ற அறிவிப்புக்குப் பின்னால்… “கி.ரா.வின் இறுதி நிகழ்வுகள் புதுச்சேரியில் நடக்கும் பட்சத்தில் அங்கே தமிழக அரசின் மரியாதை தரப்படுவது எவ்வாறு?” என்று சில கேள்விகள் எழுந்தன.

ஆனால் தமிழக முதல்வர் இதுகுறித்து முழுமையாக விசாரித்த பிறகே அறிவித்திருக்கிறார்.

தமிழக அரசின் சார்பில் கி.ரா. குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு இறுதி நிகழ்வுகள் புதுச்சேரியிலா அல்லது தமிழகத்தில் கிராவின் சொந்த ஊரான இடைச்செவல் கிராமத்திலா என்று கேட்டிருக்கிறார்கள். கிராவின் ஆசை என்பது தன் கரிசல் மண்ணோடு மண்ணாக தான் கலக்க வேண்டும் என்பதே. எனவே சொந்த ஊரிலேயே அவரது இறுதி நிகழ்வுகளை செய்ய உத்தேசித்திருப்பதாக குடும்பத்தினர் கூறினர்.

இதையடுத்து தமிழக அரசின் அதிகாரிகள் புதுச்சேரி அரசின் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விவாதித்தனர். இந்நிலையில்தான் புதுச்சேரி அரசின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், மறைந்த கி.ராவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி அரசின் மரியாதையும் கிராவுக்கு அளிக்கப்பட்டது.

அங்கே செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, “ இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்..கி. ராஜ நாராயணன் அவர்களின் மறைவிற்கு புதுச்சேரி அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுச்சேரி அரசு மரியாதையுடன் தமிழகத்திற்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்படும்”என்று தெரிவித்தார்.

அதன்படி இன்று பகல் 2 மணிவரை புதுச்சேரியில் அஞ்சலிக்காக வைக்கப்படும் கிராவின் உடல், அதன் பின் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. கரிசல் மண்ணின் நாயகன் கரிசல் மண்ணுக்கே திரும்புகிறார்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *