மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

ஆவி பிடித்தல்: அமைச்சர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்து!

ஆவி பிடித்தல்: அமைச்சர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்து!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஒரு புதிய அரசு பதவியேற்றதும் செய்யும் ரிலாக்ஸ்கான வழக்கமான செயல்களை கூட செய்ய இயலாத அளவுக்கு முதல்வர் ஸ்டாலினையும், தமிழக அரசையும் டென்ஷனாக்கியிருக்கிறது கொரோனா இரண்டாம் அலை.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 16) ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களை சந்தித்தபோது. கொரோனா தடுப்பு தொடர்பாக அரசின் வாசகங்களை ஊடகங்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதில், 'நித்தம் நீராவி பிடி... கொரோனாவை விரட்டியடி', 'நீராவி பிடிப்போம் கொரோனா வைரஸை தடுப்போம்' என்பது உள்ளிட்ட பல வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இதே போல திமுக அரசின் அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் நீராவி பிடிப்பதை இயக்கமாக நடத்திக் கொண்டிருக்க, மக்கள் நல்வாழ்வு மருத்துவத் துறை அமைச்சரான மா.சுப்பிரமணியனோ, 'பொது இடங்களில் கூட்டாக நீராவி பிடிப்பதால் நுரையீரல் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது'என்று ஆவிபிடித்தலுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்.

ஒரே விஷயத்தில் முதல்வர் வெளியிட்ட வாசகங்களுக்கு எதிராக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரே கருத்து சொல்ல, மற்ற சில அமைச்சர்களோ ஆவி பிடித்தலில் தீவிரமாகியிருக்கிறார்கள்.

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு மே 16 ஆம் தேதி, திருச்சி மாவட்டம் காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா நோய்களுக்கான அரசு சித்த புத்துணர்வு மையத்துக்கு சென்றார். அங்கே 200 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையத்தை திறந்து வைத்து, ஆவிபிடித்தல் சிகிச்சை பிரிவை பார்வையிட்டார்.

இது ஒருபக்கம் என்றால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் பயணிகள் நீராவி பிடிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை ரயில்வே காவல்துறையினர் செய்தனர். தமிழக அரசால் நியமிக்கப்படும் ரயில்வே காவல்துறை எஸ்பி பழனிக்குமாரின் ஏற்பாட்டில்... வேம்பு, துளசி, மஞ்சள், கற்பூரவள்ளி, மிளகு உள்ளிட்ட 12 மூலிகைகள் கொண்டு 10 நீராவி பிடிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம், பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து, எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இதை விட மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ. கதிரவன் மே 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தன் தொகுதியில் நீராவி வாரம் என்ற பெயரில் இயக்கம் நடத்தி வருகிறார். வீட்டிலேயே தினமும் இருமுறை ஆவி பிடிப்பதை நோக்கமாக வைத்து அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இப்படி தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆவி பிடிப்பதில் மும்முரமாகியிருக்க இன்று (மே 17) சென்னை லயோலா கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கொரோனா தொற்றைத் தவிர்க்க ஆவி பிடித்தல் நிகழ்ச்சிகளை பொது இடங்களில் நடத்தக் கூடாது"என்று கூறியுள்ளார்.

அவர் மேலும், " பொது இடங்களில் ஆவி பிடிக்கிறோம் என்கிற அளவில் புகையை பலர் உள்வாங்குகிறார்கள். அப்படி செய்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு வரும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இப்படி பொது இடங்களில் ஆவி பிடிக்கும்போது தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆவி பிடித்தால் அவர் நுகர்ந்து வெளிவரும் காற்றின் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

அவருக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். எனவே நுரையீரலைக் குறிவைத்து தாக்கும் வைரஸைப் பரப்ப நாமே காரணமாக இருந்துவிடக் கூடாது. எனவே பொது இடங்களில் இதுபோன்ற காரியங்களைச் செய்கின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் சிறந்த மருத்துவர் ஆலோசனை பெற்று எதையும் செய்ய வேண்டும்” என்று பேசியிருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ஆவி பிடிப்பது பற்றி தமிழக அரசுக்குள்ளேயே மாறுபட்ட கருத்துகள் உலவிக் கொண்டிருக்கின்றன.

-வேந்தன்

.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 17 மே 2021