மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

வீடு திரும்பிய முதல்வர் : ஆய்வுக்குச் சென்ற ஆளுந‌ர்

வீடு திரும்பிய முதல்வர் : ஆய்வுக்குச் சென்ற ஆளுந‌ர்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து இன்று (மே 17) வீடு திரும்பினார்.

பாஜக, அதிமுக, பாமக, என்.ஆர்.காங்கிரஸ் எனக் கூட்டணி வைத்து 16 தொகுதிகளில் வெற்றிபெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு கடந்த 7ஆம் தேதி, ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 9ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒரு வார சிகிச்சைக்கு பிறகு இன்று (மே 17) புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீடு திரும்பினார்.

இடைப்பட்ட நாட்களில் பாஜக எம்.எல்.ஏ,கள் நமச்சிவாயம் தலைமையில் சென்று தலைமைச் செயலாளரைச் சந்தித்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனைகள் செய்தனர். இதையடுத்து மே 15ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் சிவா தலைமையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனை சந்தித்தனர். "எம்.எல்.ஏக்களாக பதவியேற்கும் முன்பு பாஜக சார்பில் வெற்றிபெற்றவர்கள், தலைமைச் செயலாளரைச் சந்தித்து எப்படி ஆலோசனைக்கூட்டம் நடத்துவார்கள்? அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.

நேற்று(மே 16), உருளையன்பேட்டை தொகுதியில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் நேரு, அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளை சந்தித்தார். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதுமான அளவு மருந்தும் சிகிச்சையும் இல்லை என்று குற்றம் சாட்டினார்.

முதல்வர் கொரோனா சிகிச்சைபெற்று வீடு திரும்புகிற நிலையில்... இன்று(மே 17) புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஒரு டாக்டர் என்ற முறையில் பிபிஇ உடையை அணிந்துகொண்டு கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்று கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளைச் சந்தித்தார். பின்பு நோயாளிகளிடம் குறைகளையும், மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து தேவையானதையும் கேட்டறிந்த பின்பு, ஆளுநர் மாளிகைக்குத் திரும்பினார்.

புதுச்சேரி அரசின் துணை முதல்வர், அமைச்சர்கள் யார் என்ற கேள்விகளுக்கு முதல்வர் ரங்கசாமியின் மருத்துவமனை வாசத்தால் பதில் கிடைக்கவில்லை. இன்று முதல்வர் டிஸ்சார்ஜ் ஆன‌ நிலையில் இந்த சிக்கல்களுக்கு பதில் கிடைக்குமென்று புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

-வணங்காமுடி

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 17 மே 2021