மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

இ-பதிவு: திருமணத்துக்கு அனுமதி கிடையாது!

இ-பதிவு: திருமணத்துக்கு அனுமதி கிடையாது!

தமிழகத்தில் இ-பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், இ-பதிவு இணையதளப் பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. அதன்படி, அத்தியாவசிய தேவைகளான மருத்துவம், முதியோர் பரமாரிப்பு, திருமணம், இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்டங்களுக்குள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பதிவு கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இன்று காலை 6 மணி முதல் இ-பதிவு நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி வாகனங்களில் செல்வோர் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களிடம் இ-பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சோதனை செய்த பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது. இ-பதிவு செய்யப்படாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

நான்கு காரணங்களை முன்னிறுத்தி மட்டுமே இ-பதிவு முறையை மேற்கொள்ள முடியும். அதாவது, மருத்துவம், முதியோர் பராமரித்தல், திருமணம், இறப்பு ஆகியவற்றிற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருமணத்திற்கான அனுமதி மட்டும் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டதால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதாக கூறும் தமிழக அரசு, திருமணம் என்ற பிரிவில் நிறைய பேர் விண்ணப்பிப்பது போன்ற காரணங்களால் அந்த பிரிவு நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

இ-பதிவில் உள்ள சிக்கல்

இ-பதிவு முறை நடைமுறைக்கு வந்த முதல் நாளில், அதை பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இ-பதிவு முறையில் மொத்தமே நான்கு காரணங்களுக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆனால், அதற்காக சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திருமணத்துக்காக செல்ல வேண்டுமென்றால், பத்திரிகையை ஆவணமாக காண்பிக்கலாம்… தற்போது திருமணம் என்ற பிரிவும் நீக்கப்பட்டு விட்டது. மீதம் இருக்கிற, மருத்துவம்,முதியோர் பராமரித்தல், இறப்பு உள்ளிட்டவற்றிற்கு எந்த ஆவணத்தை சமர்ப்பிப்பது என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

இ-பதிவு முறையில் ஆவணங்களுடன் பூர்த்தி செய்தால் மட்டுமே, அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும் என்பதால், பலருக்கும் இது நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமாக இருந்த நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ்’ கட்டாயமாக்கப்பட்டது. இடைத்தரகர்கள் தலையீட்டால், ‘இ-பாஸ்’ நடைமுறை குளறுபடியானது. மேலும், இ-பாஸ் பெறுவதற்கு மக்கள் அதிகளவில் பணம் கொடுத்து வந்தனர். இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். அதனால், தற்போது ‘இ-பதிவு’ என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 17 மே 2021