மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

புதிய கல்விக்கொள்கை: மத்திய அரசுக்கு திமுக அரசின் முதல் எதிர்ப்பு!

புதிய கல்விக்கொள்கை: மத்திய அரசுக்கு திமுக அரசின் முதல் எதிர்ப்பு!

திமுக அரசு பதவியேற்ற பிறகு முதல் முறையாக மத்திய அரசுடன் கொள்கை ரீதியான மோதல் போக்கைத் தொடங்கியிருக்கிறது.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது பற்றி மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (மே 17) காலை 11 மணிக்கு அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த காணொளி வழிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

மத்திய கல்வித் துறையின் அறிவிப்பு மே 15 ஆம் தேதி வெளியான நிலையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அன்றே, மத்திய கல்வி அமைச்சர் பொக்ரியாலுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், “ 17/05/2021 அன்று இந்திய அரசின் கல்வியமைச்சர் மாநிலங்களின் கல்வித்துறைச் செயலாளர்களுடன் காணொளி கூட்டம் வாயிலாக கோவிட் நோய்த்தொற்று காலத்தில் கல்வி அமைப்பு மேலாண்மை, பள்ளிகளில் இணைய வழி கல்வி தொடர்வதற்கான வழிமுறைகள், புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துதலின் நிலை போன்றவை குறித்து கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல் கூட்டத்தை தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும். அக்கூட்டத்தில் மாநில அரசின் சார்பாக மிக முக்கியமான பொருண்மைகளான புதிய தேசிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்துதலின் நிலை போன்றவற்றின் மீதான கருத்துக்களையும், பரிந்துரைகளையும் தாம் தெரிவிக்க தயாராக உள்ளேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து ஏதும் பதில் வரவில்லை. மேலும் மாநில கல்வி அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் அழைக்கப்படாததால் தமிழக அரசு இந்த கூட்டத்தை இன்று புறக்கணித்துள்ளது. தமிழக அரசின் சார்பில் கல்வித்துறை அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பதில் வராததால் தமிழக அரசு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை”என்று குறிப்பிட்டுள்ளார்.

குலக் கல்வி முறையை மீண்டும் கொண்டுவரும் வகையிலும், மும்மொழிக் கொள்கையைக்கொண்டு வரும் வகையிலும் இருப்பதால் புதிய கல்விக்கொள்கையை திமுக ஏற்காது என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நிலையில், இக்கூட்டத்தில் தமிழக அரசு கலந்துகொள்ளவில்லை.

திமுக அரசு பதவியேற்றதில் இருந்து மத்திய அரசோடு கொள்கை ரீதியாக நேரடியாக மோதும் முதல் அம்சமாக இந்த கூட்டப் புறக்கணிப்பு கருதப்படுகிறது.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 17 மே 2021