மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

துளசி ஐயா வாண்டையார்: கல்விக் காவிரி ஓய்ந்தது!

துளசி ஐயா வாண்டையார்:  கல்விக் காவிரி ஓய்ந்தது!

மூத்த காங்கிரஸ் தலைவரும் டெல்டாவில் கல்வி வெள்ளத்தைப் பாய்ச்சிய காவிரியுமான துளசி ஐயா வாண்டையார் இன்று (மே 17) அதிகாலை காலமானார்.

கடந்த மே 11 ஆம் தேதி சித்திரை ரோகிணி நட்சத்திரத்தில் 93 வயது நிறைவுற்று, 94 ஆம் வயதில் அடியெடுத்து வைத்த துளசி ஐயா வாண்டையார் ஒரு வாரத்திலேயே காலமாகிவிட்டார்.

தஞ்சை அருகே உள்ள பூண்டி கிராமத்தில் 1956 இல் கலை, அறிவியல் கல்லூரியை வாண்டையார் குடும்பத்தினர் சார்பில் துவக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் துளசி ஐயா வாண்டையார். 65 ஆண்டுகளுக்கு முன்பே சமூகத்தின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்றநோக்கத்தோடு, கல்வியை எவ்வித டொனேஷனும் வாங்காமல் கொடுத்தவர் துளசி ஐயா வாண்டையார்.

காமராஜரோடு நெருங்கிப் பழகிய வாண்டையார், காந்தியின் எளிமையை காமராஜரோடு சேர்ந்து நடைமுறைப்படுத்தினார். அந்தக் காலத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் முதல் கண்ணுக்கு எட்டாத தூரம் வரை வாண்டையார் குடும்பத்தினரின் சொத்துகள் விரிந்து பரந்திருந்தன. அந்த நிலையிலும் மிக எளிமையாக வாழ்ந்தவர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் 1991 முதல் 96 வரை எம்பியாக இருந்தார். நாடாளுமன்றம் கூடிய நாட்களில் ஒரு நாள் கூட செல்லத் தவறாதவர்.

பூண்டி கல்லூரியில் கிராமப்புற மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சேர்த்துக்கொண்டவர். அதேபோல அவரை சீட்டுக்காக தேடிவரும் மாணவர்களிடம், ‘அப்பா என்ன பண்றாரு...’என்று முதலில் கேட்பார். அதன் பிறகுதான் பெயர், படிப்பு, கோர்ஸ் பற்றியெல்லாம் கேட்பார். அப்பா விவசாயி, தினக்கூலி என்றால் முன்னுரிமை கொடுத்து சீட் கொடுப்பார்.

துளசி ஐயா வாண்டையார் தனது 94 வயதிலும் திடகாத்திரமாக வாழ்ந்து வந்தார். தினமும் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வார். கடந்த ஒரு மாதம் முன்பு சென்னை சென்று அங்கிருந்து அந்தமானுக்கு சென்று ஓய்வெடுக்கத் திட்டமிட்டிருந்தார் துளசி ஐயா வாண்டையார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாலும், விமானப் போக்குவரத்து இல்லாததாலும் அவரால் அந்தமான் செல்ல முடியவில்லை. இந்நிலையில் சென்னையிலுள்ள வீட்டில் இன்று அதிகாலை 4 மணிக்கு முதுமை காரணமாக காலமானார்.

துளசிஐயா வாண்டையாரின் உடல் சென்னையில் இருந்து எடுத்து வரப்பட்டு இன்று மாலை பூண்டியை வந்து அடைகிறது.அங்கே பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

காவிரி டெல்டாவை கல்வி டெல்டாவாகவும் மாற்றிய பூண்டி வாண்டையாரின் புகழ் கல்வி உள்ளவரை நிலைத்திருக்கும்!

-ராகவேந்திரா ஆரா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

திங்கள் 17 மே 2021