மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

சட்டமன்றத்தில் பெண்கள்: சரியும் தமிழ்நாடு!

சட்டமன்றத்தில் பெண்கள்:  சரியும் தமிழ்நாடு!

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில்... தமிழ்நாடு தேர்தல் அரசியலில், சட்டமன்றத்தில் கிட்டத்தட்ட அனைத்து சமுதாயங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைத்து வருகிறது என்ற திருப்தி ஓரளவு இருந்தாலும், இந்த ‘உரிமை’ பெண் சமுதாயத்துக்கு மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது என்பதுதான் தமிழகத்தின் தரவுகள் சொல்லும் கசப்பான உண்மை.

2021 தமிழகச் சட்டமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது 5%. கடந்த இருபது ஆண்டுகளில் மிகக் குறைவான பெண்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றம் என்ற ‘தலைகுனிவை’ சந்தித்திருக்கிறது இந்த 16ஆவது சட்டமன்றம்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் தேர்தல் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஒரு நேர்க்கோட்டில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லவில்லை. காலப்போக்கில் சில பெண்கள் சட்டமன்றத்துக்கு வந்து சென்றிருக்கிறார்கள் என்ற அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சாதனை ஜெயலலிதா

இந்தியாவிலேயே மிக இளம் வயதில் தனது 43ஆவது வயதில் தமிழக முதல்வர் ஆனார் ஜெயலலிதா. 1991 தேர்தலில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 14% ஆக இருந்தது. அப்போது 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 32 பேர் பெண்கள். அதிலும் அதிமுக மட்டுமே 27 பெண் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. தமிழகத்துக்கு முதன்முதலாகப் பெண் முதல்வர், அதுமட்டுமல்லாமல் சட்டமன்றத்தில் 32 பெண் உறுப்பினர்கள் என்று பெண்களுக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டமன்றமாக 1991 சட்டமன்றம் இருந்தது.

அதிமுகவைக் கைப்பற்றுவதற்கான அக்னி பரீட்சையில் இருந்தபோது 1989ஆம் ஆண்டு தேர்தலில் 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 1991இல் 27 பெண் வேட்பாளர்களை அதிமுகவில் நிறுத்தினார்கள். அவர்கள் அனைவரும் வென்றனர்.

1991க்குப் பிறகு அதே ஜெயலலிதா 2001, 2011, 2016 என்று மூன்று முறை வெற்றி பெற்றபோதும் அந்த அளவுக்குப் பெண்கள் சட்டமன்றத்துக்குள் நுழையவில்லை.

1996ஆம் அண்டு திமுக - தமாகா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றிய சட்டமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை சரி பாதிக்கும் கீழாகக் குறைந்தது. ஆம். 1991இல் 32 பெண்கள் இருந்த சட்டமன்றத்தில் 1996ஆம் ஆண்டு 12 பெண்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1996 ஆண்டுக்குப் பிறகு தமிழகச் சட்டமன்றத்தில் மீண்டும் குறைவான பெண்கள் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்றால் அது இந்த 2021 சட்டமன்றம்தான். இப்போது திமுகவில் 6, அதிமுகவில் 3, பாஜகவில் 2, காங்கிரஸில் 1 என மீண்டும் 12 என்ற எண்ணிக்கையில் இருக்கிறார்கள் பெண்கள்.

அதிமுகவைப் பொறுத்தவரையில் கட்சி ரீதியாக 1991, 2001 ஆகிய இரு தேர்தல்களில் கட்சி ரீதியாக வேட்பாளர்களாகட்டும், வெற்றிபெற்ற உறுப்பினர்களாகட்டும்... மற்ற கட்சிகளைவிட கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

1980 தேர்தலில் 5%க்கு மேல் பெண் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்த காங்கிரஸ், பின் குறைந்து, உயர்ந்து 1991 தேர்தலில் 8% பெண் உறுப்பினர்களை வைத்திருந்தது. 1996இல் மீண்டும் குறைந்து 2001இல் 10 சதவிகிதத்துக்கும் மேல் தொட்டது. ஆனால், அதற்குப் பின் காங்கிரஸ் தொடர்ந்து குறைவான அளவிலேயே பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

“தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு இணையான அல்லது கொஞ்சம் குறைவான வலிமையோடு இருந்தபோது பெண்களுக்கு ஓரளவு அதிக பிரதிநிதித்துவத்தைக் கொடுத்து வந்தது காங்கிரஸ். ஆனால், 2000க்குப் பிறகு கூட்டணியில் ஒரு சிறிய பங்குதாரர் என்று காங்கிரஸ் கட்சியின் அளவு சுருக்கப்பட்ட நிலையில், அதன் பெண்கள் பிரதிநிதித்துவமும் குறைந்துவிட்டது. ஏனெனில் தங்களுக்குக் கிடைக்கும் குறைந்த இடங்களில் ஆண்களே அதிக இடங்களை எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்.

என்னதான் பெண்ணுரிமை பேசினாலும் சட்டமன்றப் பெண் பிரதிநிதித்துவ செயல்பாடுகளில் திமுக தமிழகத்தில் பின்னால்தான் இருக்கிறது. 2001க்குப் பின் திமுகவின் சராசரி பெண் உறுப்பினர்கள் 6முதல் 13 ஆகவே இருக்கிறது. இது மிகவும் குறைவானதாகவே பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத்தில் பெண்கள்:

1977 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 162 பெண்களில் 95 பேர் அதிமுக சார்பில் வென்றவர்கள். இது 75% ஆகும். திமுக சார்பில் 29 பெண்கள்தான் வென்றுள்ளார்கள். இது 18%.

காங்கிரஸ் சார்பில் 20 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது மொத்தத்தில் 12% ஆகும்.

மீதமுள்ள 20 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக, காங்கிரஸ், திமுக அல்லாத கட்சிகளின் சார்பில் வெற்றிபெற்றவர்கள்.

2021 சட்டமன்றத்தில் பெண்கள்:

2021ஆம் ஆண்டு தேர்தலில் பெண்கள் விவகாரத்தில் அதிமுக கூட்டணி திமுக கூட்டணியைவிட சிறப்பாகச் செயல்பட்டது, அதிமுக சார்பில் 9% பெண் உறுப்பினர்களும், திமுக சார்பில் 5.6% பெண் உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.

பாஜகவின் நான்கு எம்.எல்.ஏ.க்களில் இருவர் பெண்கள். மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி, திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை தோற்கடித்தார். மறுபுறம், பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தாராபுரத்தில் கயல்விழி என்னும் திமுக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார்.

2021 சட்டமன்றத்தில் இருக்கும் பெண்களில் நான்கு பேர் மேற்கு மண்டலம், மூன்று பேர் வடக்கு மண்டலம், கிழக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் தலா ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

சிறிய கட்சிகளின் பெரிய விஷயம்!

ஆனால், சில சிறிய கட்சிகள் ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்படுகின்றன. 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் பெண்களை நிறுத்தியது. அக்கட்சி சார்பில் யாரும் வெற்றி பெறவில்லை என்றாலும், பெண்களுக்கு 50% கொடுக்கும் பாங்கு மகத்தானது. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி இதே நிலையைத்தான் மேற்கொண்டது.

பெரிய கட்சிகள் இந்த விஷயத்தில் பேச்சுக்கும் செயல்பாட்டுக்கும் வெகுதூரத்தில் இருக்க, நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் வேட்பாளர்களிலேயே சரி பாதி பெண்களை நிறுத்துவது என்பது தமிழ்நாட்டு அரசியலில் அற்புதமான தொடக்கம்தான்.

தரவுகள் நன்றி: ஸ்க்ரோல்

கட்டுரையாளர்கள்: கில்லெஸ் வெர்னியர்ஸ், கே.ஆர்.விக்னேஷ் கார்த்திக், மோகித் குமார், நீலேஷ் அகர்வால்

தமிழில்: ராகவேந்திரா ஆரா

முந்தைய பகுதிகள்

தமிழ்நாடு சட்டமன்றத்தின் சாதிச் சித்திரம்

சட்டமன்றத்தில் முஸ்லிம்கள்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

திங்கள் 17 மே 2021