மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

சட்டமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் - தேர்தல் சொல்லும் உண்மை!

சட்டமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் - தேர்தல் சொல்லும் உண்மை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பிரதிநிதித்துவம் எவ்வாறு உள்ளது என்பதை நேற்றைய கட்டுரையில் பார்த்தோம்.

இதேபோல தமிழக மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் முஸ்லிம் சமுதாயத்துக்கு, தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் எவ்வளவு பிரதிநிதித்துவம் என்று ஆய்வு செய்ய முற்பட்டபோது சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் 5.9 சதவிகிதம் உள்ளனர். மாநிலம் முழுவதும் 5.9 சதவிகிதம் பரவியிருந்தாலும் ராமநாதபுரம், கூடலூர் (நீலகிரி), வேலூர், அறந்தாங்கி, கடையநல்லூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதுபோல கடந்த இருபதாண்டுகளில் கணிசமான தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியாகவும் முஸ்லிம்களின் மக்கள்தொகை இருக்கிறது.

அதேநேரம் தமிழகச் சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகைக்கேற்ற பிரதிநிதித்துவம் இல்லை, அவர்கள் குறைந்த பிரதிநிதிகளையே பெற்றுவருகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

2021 சட்டமன்றத்தில் மொத்தம் ஏழு முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். திமுக சார்பில் மஸ்தான், ஆவடி நாசர், அப்துல் வஹாப், மமக சார்பில் ஜவாஹிருல்லா, அப்துல் சமது, விசிக சார்பில் ஆளூர் ஷா நவாஸ், காங்கிரஸ் சார்பில் ஹசன் மௌலானா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

1971 முதல் 2000 ஆண்டு வரை தமிழகச் சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் பங்கு 3 முதல் 4 சதவிகிதம் வரை இருந்த நிலையில், 2000 ஆண்டுக்குப் பிறகு 2 சதவிகிதமாகக் குறைந்தது. பிறகு 2016இல் மெல்ல கொஞ்சம் உயர்ந்து 2 சதவிகிதத்தைப் பிடித்தது.

1971 முதல் 2021 வரையிலான சட்டமன்றத் தேர்தலை ஆய்வு செய்யும்போது, ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் கணிசமாகப் போட்டியிடுகிறார்கள். தேர்தல் களத்தில், பிரச்சாரக் களத்தில் முஸ்லிம்களின் பங்கும், ஆற்றலும் குறிப்பிடத்தக்க அளவு தென்படுகின்றன. ஆனால் முஸ்லிம் வேட்பாளர்கள் எல்லாருமே எம்.எல்.ஏ. ஆவதில்லை.

ஏனென்றால் 1971 முதலான அனைத்து தேர்தல்களில் வெற்றிபெற வாய்ப்பில்லாத கட்சிகளின் வேட்பாளர்களாகவே அதிகபட்சம் முஸ்லிம்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் அவற்றின் கூட்டணியைப் பொறுத்து காங்கிரஸ் கட்சியும் இங்கே முக்கியக் கட்சியாக பார்க்கப்படுகின்றன என்றால்... இந்தக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை விட பிற சிறு சிறு கட்சிகள் சார்பாகவும், சுயேச்சையாகவுமே அதிக முஸ்லிம்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். எனவே மக்கள் மன்றத்தில் இயங்குவதைப் போல அவர்களால் மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்றத்தில் இயங்க முடிவதில்லை.

பிற கட்சிகளைவிட திமுக, அதிமுக கட்சிகளில் மிகக் குறைவாகவே முஸ்லிம்கள் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். அதைத் தாண்டி திமுகவையும், அதிமுகவையும் ஒப்பிட்டால் திமுகவில்தான் அதிக முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

திமுக காயிதே மில்லத் காலத்தில் இருந்தே முஸ்லிம் லீக்குடன் கூட்டணி வைத்திருக்கிறது. கடந்த தேர்தலில்கூட திமுக கூட்டணியில்தான் முஸ்லிம் லீக் போட்டியிட்டது. 1970களில் அதிமுகவின் உருவாக்கம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் ஏற்பட்ட பிளவு - பலவீனம் போன்ற காரணங்களால்... திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் தங்கள் கட்சி சார்பிலேயே முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்கத் தொடங்கின. பின் இரு கட்சிகளிலும் சிறுபான்மை அணி வலிமையாகக் கட்டமைக்கப்பட்டு முஸ்லிம் கட்சிகளைவிட வலிமையான அளவுக்கு இந்தக் கழகங்களின் சிறுபான்மை அணி பலப்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் இதுவரைக்கும் தமிழகத்தில் முஸ்லிம்களின் அதிகபட்ச சட்டமன்ற பிரதிநிதித்துவம் 5 சதவிகிதத்தைத் தாண்டியதே இல்லை என்பதுதான் புள்ளிவிவரம் சொல்லும் செய்தி.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பாகவோ அல்லது அந்த கட்சிகளின் தலைமையிலான கூட்டணியிலோதான் முஸ்லிம் வேட்பாளர்கள் வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் தமிழக தேர்தல் களத்தில் இருக்கின்றன. காங்கிரஸ் சில தொகுதிகளை முஸ்லிம்களுக்குக் கொடுத்து வந்தது. அண்மைக் காலமாக காங்கிரஸ் ஓரிரு இடங்களையே முஸ்லிம்களுக்குக் கொடுக்கிறது. 2006ஆம் ஆண்டு தேமுதிக சார்பில் ஒன்பது முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் அவர்களில் எவரும் வெற்றிபெறவில்லை.

தமிழகத் தேர்தல்களில் அடிக்கடி நடக்கும் இன்னொரு விஷயம், முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளில் முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெறும் இடங்களில் முஸ்லிம்கள் அடர்த்தியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

நாகப்பட்டினத்தில் ஆளூர் ஷா நவாஸ் பெற்ற வெற்றியும், மணப்பாறையில் அப்துல் சமது பெற்ற வெற்றியும், கடையநல்லூரில் அபு பக்கர் பெற்ற தோல்வியும் இதைத்தான் காட்டுகின்றன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளாக அறியப்பட்ட எஸ்டிபிஐ கட்சி ஆறு தொகுதிகள், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் மூன்று தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூன்று தொகுதிகள் என முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியும் அவர்கள் தோற்றுப் போனார்கள்.

இங்கே முஸ்லிம் வேட்பாளர்கள், முஸ்லிம் வாக்காளர்களைவிட கட்சிகளின் அமைப்பு பலம் முக்கியத்துவம் பெறுகிறது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

தரவுகள் நன்றி: ஸ்க்ரோல்

-கட்டுரையாளர்கள்:

கில்லெஸ் வெர்னியர்ஸ், கே.ஆர்.விக்னேஷ் கார்த்திக், மோகித் குமார், நீலேஷ் அகர்வால்

(நாளை தமிழகச் சட்டமன்றத்தில் பெண்கள் நிலை)

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

ஞாயிறு 16 மே 2021