மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

பயத்தைப் பரப்பாமல் விழிப்புணர்வை பரப்புங்கள்: ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!

பயத்தைப் பரப்பாமல் விழிப்புணர்வை பரப்புங்கள்: ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!

கொரோனா விவகாரத்தில் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தாமல் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சில நாட்களாகவே ஊடகங்களில் கொரோனா தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை அரசு மறைக்கிறதா போன்ற செய்திகளும் விவாதங்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று (மே 16) மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காட்சி ஊடக செய்தி ஆசிரியர்களுடனான ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில் ஊடகங்களுக்கு சில வேண்டுகோள்களையும் ஆலோசனைகளையும் முன் வைத்துள்ளார் முதல்வர்.

இந்நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

“ மக்களின் நன்மைக்காக மக்களின் உயிர் காக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை ஊடகங்கள் முழுமையாக வெளியிட வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். இது அரசியல் அல்ல... மக்களின் உயிர் காக்கும் விஷயம் என்பதால், கொரோனா குறித்த செய்திகளை மிகுந்த எச்சரிக்கையோடு வெளியிட வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

கொரோனா தொற்று விஷயத்தில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையோடு நடக்கிறது. எதையும் மறைக்கக் கூடாது என்று நான் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கிறேன். முழு உண்மைகள் இப்போதுதான் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

செய்தியை முந்தித் தருகிறோம் என்ற அவசரத்திலே தவறான தகவல்களை நீங்கள் வெளியிட்டுவிடக் கூடாது. தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் அதிகம் என்று புகார்கள் வந்ததால் அவற்றுக்கு கட்டணம் நிர்ணயம் செய்தோம். ஆனால் 108 ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயித்து விட்டதாக செய்தி பரப்புகிறார்கள்.

ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தோம். ஆறு ரூபாய்க்கு கூட்டிவிட்டு மூன்று ரூபாய்க்கு குறைத்ததாக செய்திகளை போடுகிறார்கள்,

மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டம் போனால் இ பதிவு முறையை அறிவித்தோம். பதிவு செய்துவிட்டு அனுமதிக்குக் காத்திராமல் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கிறோம். ஆனால் இ பாஸ் என்று செய்திகள் போடுகிறீர்கள். எனவே இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அரசாங்கத்துக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள். தேவைகளை எடுத்துச் சொல்லுங்கள். மக்களுக்கு வழிகாட்டுங்கள். மக்கள் உயிர் காக்க உறுதுணையாக இருங்கள். அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள். அதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேட்டு விளக்கம் பெற்று அதையும் வெளியிடுங்கள்

பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தமிழக அரசின் செய்தித் துறை வெளியிட்டிருக்கிறது. அதை நீங்கள் வெளியிட வேண்டும், பரப்பிட வேண்டும். நீங்கள் வெளியிடும் செய்திகள் பயத்தை அளிக்காமல் விழிப்புணர்வை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

-வேந்தன்.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

ஞாயிறு 16 மே 2021