புரட்டி எடுக்கும் டவ் தே புயல்!


கிழக்கு மத்திய அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயல் டவ் தே, இன்று காலை 5.30 மணியளவில் கிழக்கு மத்திய அரபிக் கடலில் பஞ்சிம் கோவுக்கு மேற்கு -தென்மேற்கு திசையில் 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்றும் மே 18ஆம் தேதி குஜராத்தில் கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதி தீவிர சூறாவளி புயலாக மாறியிருப்பதாகக் கூறியுள்ளது.
கேரளா
இந்த புயலின் எதிரொலியாகக் கடந்த இரண்டு நாட்களாகக் கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கடலோர பகுதிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான வலியத்ராவில் பல வீடுகள் புயலால் இடிந்து விழுந்து சேதமடைந்திருக்கின்றன.
#WATCH: Rough sea and high tidal waves damage/destroy several houses in Valiyathura, a coastal village in Thiruvananthapuram, #Kerala#CycloneTauktae pic.twitter.com/fyoyAJZ4Nx
— TOI Kochi (@TOIKochiNews) May 16, 2021
கொச்சியில் இருக்கும் செல்லனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடல் அலை கொந்தளிப்பு காரணமாகக் கடல் நீர் உட்புகுந்துள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் இந்த புயலுக்கு இதுவரை 2 பேர் வரை உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் கோட்டயம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
கர்நாடகா
புயல் காரணமாகக் கர்நாடகாவிலும் கன மழை பெய்து வருகிறது. மே 16 ஆம் தேதி காலை 9 மணி நிலவரப்படி, உடுப்பி, உத்தரா கன்னடம், சிவமோகா, மற்றும் சிக்கமகளூரு மாவட்டங்களிலிருந்து தலா ஒருவர் என 4 பேர் புயலால் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. இந்த பகுதிகளில் மொத்தம் 112 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும், 73 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகம்
புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மேற்கு தமிழகம், கன்னியாகுமரியில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருவர் பலி
நேற்று முன்தினம் குமரி மாவட்டம் ராமன் துறை மீனவ கிராமத்தில் ஏற்பட்ட சூறாவளிக் காற்றில் கடற்கரை பகுதியில் உள்ள டயானா பெக்மீர் என்பவரது வீட்டின் மேற்கூரை நள்ளிரவு இடிந்து விழுந்ததில் அவரது 2 வயதுக் குழந்தை உயிரிழந்திருக்கிறது.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்களை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பேரிடர் நிவாரண நிதித்தொகை ருபாய் 4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
அதுபோன்று குமரி மாவட்டம் அருமனை அருகே சுவர் இடிந்து விழுந்து யூஜின் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மீனவர்கள் மாயம்
தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், தமிழக மீனவர்கள் கொச்சி துறைமுகத்தில் தங்கி மீன் பிடிக்கச் சென்று வந்திருக்கின்றனர். நாகை மாவட்டம், சாமந்தான் பேட்டையைச் சேர்ந்த இடும்பன், என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்கள் கடலுக்குள் சென்றிருக்கின்றனர். நேற்று அரபிக் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது புயல் காரணமாகப் படகு மூழ்கி 9 மீனவர்களும் மாயமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மாயமான மீனவர்களை மீட்டு தர வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் மீன்வளத் துறை இணை இயக்குநரிடம் மனு கொடுத்துள்ளனர். இவர்களை போர்க்கால வேகத்தில் மீட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
டவ் தே புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் விளைநிலங்கள் மூழ்கியுள்ளன.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான குமரி கடலோர கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டிருக்கிறது.
-பிரியா