மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

தனியார் மருத்துவமனைகள் மூலமாக ரெம்டெசிவிர் விநியோகம்!

தனியார் மருத்துவமனைகள் மூலமாக ரெம்டெசிவிர் விநியோகம்!

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்த மருந்தை அரசு விநியோகம் செய்து வருகிறது. இரவு பகலாக வரிசையில் நின்று பொதுமக்கள் இந்த மருந்தை வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது.

இதனால் சென்னை மட்டுமின்றி மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய பகுதிகளிலும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு தலைமை மருத்துவமனைகளில் இம்மருந்து பொதுமக்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டது.

சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் ரெம்டெசிவிர் மருந்து வழங்குவதாக அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. நாளொன்றுக்கு 300 நபர்களுக்கு மருந்து வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்ததது. ஆனால் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் நேரு உள்விளையாட்டு அரங்கில் குவிந்தனர். சமூக இடைவெளியின்றி மக்கள் கவுண்டர்களில் முண்டியடித்துக்கொண்டு இருந்ததைக் காண முடிந்தது.

இந்நிலையில் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு இனி அந்தந்த மருத்துவமனைகள் மூலமாக ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையை மே 18ஆம் தேதி முதல் செயல்படுத்த உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “ நமது நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே இவ்வாறு நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினரிடம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இம்மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிக கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கமுடியாத சூழல் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால், அதனைத் தவிர்க்க வேண்டியுள்ளது. இங்கு மருந்துகளைப் பெறுவோர் சிலர், அவற்றைத் தவறான முறையில் அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது குறித்த புகார்களும் வந்துள்ளன. மேலும், ரெம்டெசிவிர் மருந்து ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிறிது பலன் தருவதாகவும், மற்ற நோயாளிகளுக்கு இதனால் பெரிய அளவில் பலன் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனமும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

மேற்கூறிய காரணங்களைக் கருத்தில்கொண்டும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்தை வழங்கிட வேண்டுமென்று முதல்வர் அறிவுறுத்தினார். மேலும் நோயாளிகளின் குடும்பத்தினருக்கு இந்த மருந்தை வாங்குவதற்கான சீட்டை அளித்து, அவர்களை வாங்கிடப் பணிக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இதன்படி, வருகிற 18-5-2021 முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச் சந்தையில் இவை விற்பனை செய்யப்படாதவாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். நோயாளிகளுக்குத் தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீதும், மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர் மீதும், சட்டப்படியான நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

ஞாயிறு 16 மே 2021