மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

தமிழகத்தில் டாக்டர்கள், நர்ஸுகள் பற்றாக்குறை: ஸ்கேன் ரிப்போர்ட்!

தமிழகத்தில் டாக்டர்கள், நர்ஸுகள் பற்றாக்குறை: ஸ்கேன் ரிப்போர்ட்!

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலையில் அதிகளவில் பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டுவருகிறது.

சில நாட்களுக்குமுன் வட மாநிலங்களில் கண்ட காட்சிகளை தமிழ்நாட்டிலே சென்னை, மதுரை, சேலம் என்று நம்மூரிலேயே கண்டு அதிர்ச்சி அடைந்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இறப்புக் கணக்கில் மர்மம் உள்ளதென்று எதிர்க்கட்சிகள் சொல்லும் நிலையில்...இவற்றையெல்லாம் எதிர்கொள்ள நம்மிடம் போதுமான மருத்துவர்களும், மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களும் இருக்கிறார்களா?

இந்தக் கேள்விக்கான பதிலில்தான், இரண்டாம் அலையை நாம் எதிர்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் அடங்கியிருக்கின்றன. அந்த பதிலை தெரிந்துகொள்வதற்கு முன் சில புள்ளி விவரங்களைத் தெரிந்துகொள்வோம்.

மே 11 ஆம் தேதி தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 29,272 பேர், இறந்தவர்கள் 298 பேர். 12ஆம் தேதி, பாசிட்டிவ் 30,355, இறந்தவர்கள் 293. மே 13ஆம் தேதி, பாசிட்டிவ் 30,621, இறந்தவர்கள் 297. மே 14 ஆம் தேதி, பாசிட்டிவ் 31,892, இறந்தவர்கள் 288 பேர். மே 15ஆம் தேதி, பாசிட்டிவ் எண்ணிக்கை 33,658 , இறந்தவர்கள் 303 பேர்...

நேற்று மே 15ந் தேதி நிலவரப்படி மட்டும் 1லட்சத்து 95 ஆயிரத்து 339 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டில் சிகிச்சையெடுத்து வருபவர்களைச் சேர்த்தால் மொத்தம் 2லட்சத்து 77ஆயிரத்து 789 நோயாளிகள்.

இதுவரை கொரோனா தொற்று வந்தவர்கள் 15 லட்சத்து 65 ஆயிரத்து 35 பேர், 298 டெஸ்டிங் மையங்கள் மூலமாக டெஸ்ட் எடுத்தவர்கள் 2 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்து 403 பேர்.

இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை 17,359 பேர்.

தமிழகத்தில் ஆக்சிஜனுடன் கூடிய பெட்டுகள் 33,272, ஆக்சிஜன் வசதி இல்லாத பெட்டுகள் 26,536, ஐசியூ வார்டில் உள்ள பெட்டுகள் 8325 என மொத்தம் 68ஆயிரத்து 133 பெட்டுகள் இருப்பதாகத் தெரிகிறது.

சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கையோ 1லட்சத்து 95ஆயிரத்து 339 பேர். அதாவது மூன்றில் ஒரு பங்குதான் படுக்கைகள் உள்ளது.

படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெமிடிசிவர் மருந்து பற்றாக்குறை இருக்கும் நிலையில் மருத்துவர்களும் செவிலியர்கள் போதுமானதாக இருக்கிறார்களா?

அரசு மருத்துவமனை செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் சக்திவேலிடம் மின்னம்பலம் சார்பாகப் பேசினோம்.

“ நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது, மருத்துவமனைகளைத் தேடி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்றாற்போல் டாக்டர்களையும் செவிலியர்களையும் அதிகரிக்க முடியவில்லை. எங்கள் நிலையைப் பார்த்த தற்போதுள்ள தமிழக அரசு அவரவர் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்றது போல் செவிலியர்களை தினக்கூலியாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று வாய்வழி உத்தரவு போட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பு, கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் பொன்முடி, ‘ உங்களுக்கு என்ன தேவை’ என்று கேட்டார். ’198 செவிலியர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 79 செவிலியர்கள்தான் இருக்கிறார்கள். தற்போது தேவை 119 செவிலியர்கள்’ என்றோம், சரி அவர்களைத் தற்காலிகமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். .

தமிழகம் முழுவதும் தொகுப்பு ஊதிய செவிலியர்கள் 16ஆயிரம் பேர், நிரந்தரமான செவிலியர்கள் 15ஆயிரம் பேர் இருக்கிறோம். தற்காலிகமாக எடுக்கக்கூடிய செவிலியர்களுக்கு 14ஆயிரம் ரூபாய் ஊதியம் என்று அவசரத்தில் ஆள் எடுக்கமுடியாது, அவர்கள் தகுதியும் தெரியாது, அதனால் 2019 ஜூன் மாதத்தில் எம்ஆர்பி தேர்வு எழுதியவர்கள் சுமார் 25ஆயிரம் செவிலியர் மாணவிகள்.

அதில் 4900 பேர் ஏற்கனவே செவிலியர் பணிக்கு எடுக்கப்பட்டார்கள். மீதமுள்ளவர்களில் தற்போது விருப்பம் உள்ளவர்களை செவிலியர் பணிக்கு எடுத்தால் அவசரத்திலும் தகுதியான செவிலியர்களை பணியமர்த்தியதாக இருக்கும்”என்று செவிலியர்களின் எண்ணிக்கை பற்றி கூறியவர் மேலும்,

“இது சுகாதார அவசர நிலை. ஒரு வாரம் கொரோனா வார்டில் டூட்டி பார்ப்பவர்கள் அடுத்த ஒரு வாரம் ஓய்வில் இருந்துவிட்டு பின் ஸ்வெப் டெஸ்ட் எடுக்கவேண்டும்.

ஒருவேளை அவர்களுக்கு பாசிட்டிவ் என்று வந்துவிட்டால் செவிலியரே நோயாளியாக மாறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அடுத்த அதிகபட்சம் ஒரு மாதம் அவர்களால் செவிலியர் பணி செய்ய முடியாது. இப்படிப்பட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேதான் வேலைப்பளுக்கு இடையேதான் செவிலியர்கள் செயல்பட்டு வருகிறார்கள். தொற்று ஏற்பட்டு சில செவிலியர்களை இழந்து வருகிறோம்” என்றார் தேம்பிய குரலில்.

செவிலியர்களின் நிலை இப்படியென்றால், மருத்துவர்களின் நிலை என்ன? அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்திலைத் தொடர்புகொண்டு கேட்டோம்.

“தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட, வட்ட, ஆரம்ப சுகாதாரம் நிலையம் என 20 ஆயிரம் மருத்துவர்கள் பணிசெய்து வருகிறோம், கொரோனா தொற்றால் அதிகமான நோயாளிகள் வருகிறார்கள் என்பதற்காக மருத்துவர்களை அதிகரித்துக்கொண்டே போகமுடியுமா என்ன? கொரோனாவை கட்டுப்படுத்தும் வேலையில்தான் தீவிரம் காட்டவேண்டும்.

மருத்துவர்களை அதிகரித்தும் மருத்துவமனைகளை அதிகரித்துவிட்டு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாமல் விட்டால் சரியாக இருக்குமா! முதலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும், கொரோனா பரவலைத் தடுக்க போலீஸுக்கு முழு சுதந்திரம் கொடுக்கவேண்டும், ஊரடங்கைத் தீவிரப்படுத்தவேண்டும், மருத்துவர்களும் மனிதர்கள்தான்.

இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டிய தேவையிருக்கிறது. அதற்காகத் தற்காலிக மருத்துவர்களை பணிக்கு எடுப்பதற்கான ஆலோசனைகள் செய்கிறது அரசு, மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது நியாயம் என்றாலும், அதை விட செவிலியர்கள்தான் அதிகமாக வேண்டும். அவர்கள்தான் அதிகப்படியான வேலைகளைச் செய்துவருகிறார்கள். குறைந்தது ஒரு டாக்டருக்கு இரண்டு செவிலியர்களாவது வேண்டும்.

மேலும் துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. அதனால் பெரும் சிரமமாக உள்ளது”என்றவரிடம் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எண்ணிக்கை பற்றி விசாரித்தோம்.

“தமிழகத்தில் 1500க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சுமார் 60 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சைதான் செய்துவருகிறார்கள்.

மின்னம்பலம்.காம் டிஜிட்டல் இதழ் மூலமாகக் கேட்டுக் கொள்கிறேன்... மக்கள் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் கொரோனா வைரஸ் கொடூரமானது, வெளியில் தேவையின்றி போகவேண்டாம், மாஸ்க் போடுங்கள், கையை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள், தொற்று பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு கொடுங்கள் கொரோனாவை விரட்டுவோம், மக்களைப் பாதுகாப்போம்” என்று கூறினார் டாக்டர் செந்தில்.

-வணங்காமுடி

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

ஞாயிறு 16 மே 2021