மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா?

முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா?

இன்று (மே 16), ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேசமயத்தில் ஒரு சில இடங்களில் ஊரடங்கை மீறி இளைஞர்கள், பொதுமக்கள் வெளியே சுற்றுவதையும் காணமுடிகிறது.

கொரோனா பரவல் தமிழகத்தில்  தினசரி புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் நேற்று முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு 12 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அது காலை 10 மணியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் நாளை அதிகாலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.  இதன் காரணமாக 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கிறது. வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

முழு ஊரடங்கில் தடையை மீறி தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  சென்னையில் 10 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை

சென்னையில்  தனிநபர்கள் தன்னிச்சையாகச் சுற்றுவது, குடியிருப்புப் பகுதிகளில் தேவையில்லாமல் குழுவாக அமர்வது ஆகியவற்றை தடுக்க போலீசார் ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.  கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில்  உரிய ஆவணமின்றி வெளியே வந்தவர்களை போலீசார் அறிவுறுத்தி அனுப்புகின்றனர். அதோடு அத்தியாவசியமின்றி வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதித்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதோடு ஊரடங்கு விதிமுறைகளை மீறமாட்டோம் என கடிதம் எழுதிக் கொடுத்தால் தான் வாகனம் மீண்டும் கொடுக்கப்படும் என கூறி வருகின்றனர்.

 300க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர்

திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள குமரன் சாலை, பெருமாள் கோயில் வீதி, அவிநாசி சாலை, பி.என்.சாலை உள்ளிட்ட மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டது. மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சேலம்

சேலம் நகரப் பகுதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயத்தில் உள் பகுதிகளில், முழு ஊரடங்கை மீறி பலர் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை காண முடிகிறது. இதுகுறித்து தலைவாசல்- பெரம்பலூர் நெடுஞ்சாலை பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கூறுகையில், இருசக்கர வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தாமல் முழு ஊரடங்கை அமல்படுத்த முடியாது” என்கின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூரில்  80க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதோடு இரு சக்கர வாகனங்களில் வருபவர்களிடம் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அனுப்புகின்றனர். இல்லை என்றால் அவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருச்சி

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்று கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான இடங்களில் ஊரடங்கிற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

ஞாயிறு 16 மே 2021