ரெம்டெசிவிர் மருந்துக்கு உண்மையில் தட்டுப்பாடா?

politics

வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு கடுமையாக இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 33,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 19,449 பேர் ஆண்கள், 14,209 பேர் பெண்கள். சென்னையில் ஒரே நாளில் 6,640 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 303 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இப்படி தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளுக்காக மக்கள் அலைந்து கஷ்டப்படுகின்றனர்.

ரெம்டெசிவிர் என்ற மருந்து அனைவருக்கும் தேவையில்லை. நுரையீரலில் அதிக பாதிப்புள்ள நோயாளிகளுக்கு மட்டும்தான் தேவை என மருத்துவர்கள் கூறி வருகிற நிலையில், ஏன் சில தனியார் மருத்துவமனைகள் தேவையில்லாமல் ரெம்டெசிவிர் மருந்தைப் பரிந்துரை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் மக்கள் மலைபோல் குவிந்துள்ளனர். இங்கு நேற்று புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விற்பனையில் மருந்து கிடைக்காத விரக்தியில் மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி சிலர், அதிக விலையில் கள்ளசந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்கின்றனர்.

இதைத் தடுக்கும் வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கி, அதிக விலைக்கு விற்பவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரெம்டெசிவிர் மருந்தின் பயன் என்ன? உண்மையிலேயே மருந்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? எதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது? என்ற கேள்வி பரவலாக அனைவரிடம் எழுகிறது.

இதேகேள்வியை வைத்துதான் முகநூலில் ஒருவர் பதிவிட்டுள்ள கருத்தில், தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு செயற்கையாகவே உருவாக்கப்படுகிறது என்பது 100% உண்மை. ஏதோ ஒரு காரணத்துக்காக மக்கள் அலைகழிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் உறவினர்கள்.

மயிலாப்பூர் கோஷா மருத்துவமனையில் இருந்த என் உறவினருக்கும், அங்கிருக்கும் மற்ற நோயாளிகளுக்கும் இலவசமாகவே ரெம்டெசிவிர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது எனக்கு தெரியும். அதுபோன்று இன்னொரு உறவினர் மயிலாப்பூரில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ‘ரெம்டெசிவிர் மருந்து தேவை. வாங்கி வாருங்கள்’ என்று மருத்துவமனை சர்வசாதாரணமாக சொல்லிவிட்டது. இரண்டு நாட்கள் ராயப்பேட்டையில் நின்றும், முடியாமல் 6 vials Rs.1,20,000/- என்ற விலையில் வாங்கி வந்தார் என்னுடைய உறவினர்.

இது உயிர் காக்கும் மருந்து அல்ல.இதனால் எந்த குறிப்பிடத்தக்க பலனும் இல்லை என்றே மேல்நாட்டு மருத்துவர்களின் பேட்டிகள் உறுதியாக சொல்கின்றன. ஆனால், ஏன் அதை வாங்க இவ்வளவு அழுத்தம் தரப்படுகிறது என்றே புரியவில்லை. சரி, இருக்கட்டும். இதை எதற்கு இப்படி நேரில் சென்றுதான் வாங்கி வர வேண்டும் என்கிறார்கள்? தற்போது ஒரு நாளில் 300 பேருக்கு மட்டுமே மருந்து விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில், தேவைப்படுவோர் பதிவு செய்தால், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், அரசாங்கமே அவர்களிடம் கொண்டு சேர்த்தாலென்ன? வீடு வீடாக சென்று 2000 ரூபாய்க்கான டோக்கன் கொடுக்கப்படும்பொது, இதை தருவதில் அரசுக்கு என்ன கஷ்டம்? உண்மையில் மனம் வருத்தப்பட்டே இதை எழுதுகிறேன்” என தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *