மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

கிராமங்களில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்துங்கள்!

கிராமங்களில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்துங்கள்!

கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் ஆரம்பக்கட்டத்தில் நாளொன்றுக்கு 20 முதல் 40 ஆயிரம் வரையில் இருந்த பாதிப்பு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் 4 லட்சத்தை எட்டியது. தற்போது தினசரி பாதிப்பு 3.26 லட்சமாகவும், தினசரி உயிரிழப்பு 3,890 ஆகவும் உள்ளது.

நகர்ப்புறங்களில் அதிவிரைவாக பரவி வந்த கொரோனா தொற்று, தற்போது கிராமங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களின் கிராமப்புறங்களில் தொற்று தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. அதனால், கிராமப்புறங்களில் பரவும் தொற்றை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே 15) காலை 11 மணிக்கு டெல்லியில் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவின் கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதன் மூலம் ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். அத்தகைய உபகரணங்களின் செயல்பாட்டில் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்பட வேண்டும். மேலும் இதுபோன்ற மருத்துவ சாதனங்களின் சீரான செயல்பாட்டிற்கு மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு பரவிய கொரோனா முதல் அலை இந்தியாவின் கிராமப்புறங்களில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில், இரண்டாம் அலை கிராமங்களை கடுமையாக பாதித்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஆர்டிபிசிஆர் மற்றும் ரெபிட் டெஸ்ட் போன்றவை அதிகமாக எடுக்கப்பட வேண்டும். பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளை உடனடியாக தனிமைப்படுத்தப்படுத்த வேண்டும். இதற்காக அங்கன்வாடி ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசுகள் எந்தவிதமான அழுத்தமும் இன்றி, தினசரி பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். பல மாநிலங்கள் பாதிப்பு, உயிரிழப்பு குறித்து தவறான புள்ளிவிவரங்களையே தருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்திற்கும் மேல் இருந்தது. தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள், மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் முயற்சிகளின் விளைவாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 15 மே 2021