மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

கொரோனா உயிரிழப்பு : உண்மையான தகவலா?

கொரோனா உயிரிழப்பு : உண்மையான தகவலா?

கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு உண்மையான தகவலை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், “புகழுரையோ, பொய்யுரையோ எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. முழு உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து அனைவரும் இணைந்து தமிழகத்தை கொரோனாவின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே, தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் வட மாநிலங்கள் போன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருப்பது காண்போரின் நெஞ்சைப் பதறவைக்கிறது.

இவ்வாறு உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு உண்மையான தகவலை வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (மே 13) அவர் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழ்நாட்டில் நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று முன்நாள் 297 பேரும், 12ஆம் தேதி 293 பேரும் உயிரிழந்ததாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், அந்த நேரங்களில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டின் கள நிலவரத்தைப் பார்க்கும்போது இத்தகைய செய்திகளை ஒதுக்கித் தள்ளிவிட முடிவதில்லை. உதாரணமாக மதுரை மாவட்டத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் முறையே 7 பேர், 14 பேர், 14 பேர், 13 பேர், 7 பேர், 9 பேர், 11 பேர் உயிரிழந்ததாகக் கணக்குக் காட்டப்படுகிறது. ஆனால், மதுரையில் மாநகரில் உள்ள 10 சுடுகாடுகளுக்கு மட்டும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் வருவதாகவும், அவற்றில் 90%க்கும் கூடுதலான உடல்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி எரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை என்றும், அதற்காக 3 தகன மேடைகள் புதிதாக ஏற்படுத்தப்படுவதாகவும் மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கைக்கும், அரசு கணக்குக்கும் இடையிலான வேறுபாட்டை இது மிகத் துல்லியமாகக் காட்டுகிறது.

தருமபுரியில் கடந்த 8ஆம் தேதி மூவரும், 11-ஆம் தேதி ஒருவரும், 13-ஆம் தேதி மூவரும் மட்டுமே உயிரிழந்ததாகவும், 9, 10, 12, 14 ஆகிய நாட்களில் ஓர் உயிரிழப்பு கூட இல்லை என்றும் புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுடுகாடுகளில் உடல்களை எரிக்க முடியாத நிலை இருப்பதாகவும், பலரும் உடல்களை எரிப்பதற்காகக் காத்துக் கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 12ஆம் தேதி பிற்பகலுடன் முடிவடைந்த 36 மணி நேரத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகமே தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் அறிக்கையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் 11ஆம் தேதி மட்டுமே ஒருவர் உயிரிழந்தார், 12ஆம் தேதி எவரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதில் எந்தத் தகவலை உண்மை என எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்துக்கொண்டு சுடுகாடுகளைத் தேடிப் பலரும் அலைவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், தமிழக அரசுத் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காட்டப்படுகிறது. உயிரிழந்த மற்றவர்கள் வேறு காரணங்களால் இறந்ததாக அதிகாரிகள் கணக்குக் காட்டுகின்றனர். இது மிகவும் தவறாகும்.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது சென்னையில் 236 கரோனா உயிரிழப்புகள் கணக்கில் சேர்க்கப்படாதபோது அதற்கு எதிராக கடுமையான கொந்தளிப்புகள் ஏற்பட்டன. இப்போதும் அதுபோன்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.

தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஸ்டாலின் அவரது முதல் ஆய்வுக் கூட்டத்திலேயே தகவல்களை மறைக்க வேண்டாம்; உண்மையான தகவல்களைக் கூறுங்கள் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். அதன்பிறகும் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப் படுவது ஏன் என்பது தெரியவில்லை. கொரோனா இறப்புகளை அரசே மறைப்பது அறத்தை மீறிய செயலாகும்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

சனி 15 மே 2021