மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

திடீர் தடை: கொதிக்கும் டீக்கடைக்காரர்கள்- பாழாகும் பால்!

திடீர் தடை: கொதிக்கும் டீக்கடைக்காரர்கள்-  பாழாகும் பால்!

இன்று (மே 15) முதல் தேனீர் கடைகள் இயங்காது என்று நேற்று (மே 14) இரவு தமிழக அரசு அறிவித்திருப்பது வர்த்தகர்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்பில்,

“தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை”என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு இந்த அறிவிப்பைப் பார்த்து டீ கடை காரர்களும், பால் முகவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி இதுகுறித்து கூறும்போது,

“ஊரடங்குக் கட்டுப்பாடுகளை வரவேற்கிறோம்.அதேநேரம் சனிக்கிழமை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு முன்னறிவிப்பு ஏதும் கொடுக்காமல் இரவோடு இரவாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பது என்பது ஏற்புடையதல்ல. இது சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களை கடுமையாக பாதிக்கும்.

ஏனெனில் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களில் பாலினை கொள்முதல் செய்து அதனை சில்லறை வணிக நிறுவனங்கள், தேனீர் கடைகள், உணவகங்களின் நாளைய தேவைக்கான பாலினை கொள்முதல் செய்வதற்கான ஆர்டரை பால் முகவர்கள் ஏற்கனவே கொடுத்து அவை சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களில் இருந்து பேக்கிங் செய்யப்பட்டு இரவு 8.00மணிக்குள் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு விநியோக கண்டெய்னர் லாரிகளில் வந்து சேர்ந்திருக்கும். அதனை டெம்போக்களில் பிரித்து பால் முகவர்களுக்கு விநியோகம் செய்வது மட்டும் தான் பாக்கி.

இந்நிலையில் சனிக்கிழமை தேனீர் கடைகள் இயங்க தடை, மளிகை கடைகள் 10மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளால் தேனீர் கடைகள் மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள் பால் முகவர்களிடம் பாலினை வேண்டாம் என கூறியுள்ளனர். இது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால் நாளை சனிக்கிழமை பால் முகவர்களிடம் பல லட்சம் லிட்டர் பால் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டு, பால் முகவர்கள் கடுமையான வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும். அதிக அளவு பாலும் விற்பனைக்குச் செல்ல முடியாமல் தேங்கி வீணாகும்”என்று குறிப்பிட்டுள்ளார்.

நம்மிடம் பேசிய சில டீ கடை உரிமையாளர்கள், “பொதுவாகவே முழு ஊரடங்கு என்பதால் முதல் நாள் மதியம் 12 மணிக்கு டீ கடையை மூடும்போதே அடுத்த நாளுக்கான பாலையும் வாங்கி ஃப்ரீசரில் வைத்துவிட்டு வந்துவிடுவோம். அதிகாலை கிடைக்கும் பாலையும் சேர்த்துக்கொள்வோம். அதன்படியே நேற்று மதியமே வாங்கி வைத்துவிட்ட பால் இன்று கடைகளில் அப்படியே கிடக்கிறது. அதை எடுக்கக் கூட கடைகளுக்குச் செல்ல முடியவில்லை”என்று குமுறுகிறார்கள்.

கட்டுப்பாடுகள் விதிக்கும் முன் அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை.

-வேந்தன்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

சனி 15 மே 2021