மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

தமிழ்நாடு சட்டமன்றத்தின் சாதிச் சித்திரம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் சாதிச் சித்திரம்!

தேர்தல் என்னும் தேரோட்ட விழாவின் அடிப்படை நிகழ்வுகளில் ஒன்று, கட்சிகள் நடத்தும் நேர்காணல். அதாவது ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளவர்களை நேரில் அழைத்து அவர்களிடம் கேள்விகள் கேட்டு பதில் பெற்று, அவர்களில் ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய நடப்பதுதான் நேர்காணல்.

இந்த நேர்காணலில் கேட்கப்படும் முக்கியமான முதன்மையான கேள்வி, ‘நீங்க என்ன சாதி?’என்பதுதான்.

தேர்தலில் பணம், வேட்பாளரின் நன்னடத்தை, புகழ் ஆகியவை வெற்றிக்கான காரணிகளாக இருந்தாலும், வெற்றி என்னும் வேதிவினையின் முக்கியக் காரண கர்த்தாவாக இருப்பது சாதி. தற்போதைய 2021 ஆம் ஆண்டு தேர்தலின் மூலம் அமைக்கப்பட்டுள்ள 16 ஆவது சட்டமன்றத் தேர்தலில் சாதி என்ன அளவுக்கு வினையாற்றியுள்ளது என்பதை, வெற்றிபெற்றவர்களின் சாதிய பிரதிநிதித்துவம் மூலமாக நாம் காண முடியும். அதேநேரம் தமிழ்நாட்டு தேர்தல் முறையில் திராவிட கட்சிகள் கோலோச்சியதில் இருந்து, அவரவர்க்கான உரிமை அந்தந்த சமுதாயத்தினருக்கான பிரநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம்

பொதுவாகப் பார்த்தால் தமிழக சட்டமன்றத்தில் பி.சி எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கையே அதிகம். திராவிடக் கட்சிகளின் தேர்தல் வெற்றி தொடங்கியதிலிருந்து, அவர்களின் ஆட்சி தமிழகத்தில் அமைந்ததில் இருந்து பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அதிகபட்ச பிரதிநிதித்துவம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருக்கிறது.

கடந்த ஐம்பதாண்டுகளாகவே தமிழக சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் சராசரி சதவிகிதம் 72 ஆக இருக்கிறது. அதாவது முக்கால்வாசி உறுப்பினர்கள் பிசி, ஒபிசி வகுப்பினர்தான்.

கொஞ்சம் உற்று நோக்கினால், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து அதாவது 2000 த்தின் துவக்கத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கோட்டையில் லேசான சில கோடுகள் கிழிக்கப்பட்டன. சென்னை, வேலூர், திருவள்ளூர், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து நாயுடு சமுதாய பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் சற்றே ஆதாயம் அடையத் தொடங்கினார்கள். என்றாலும் தமிழகத்தின் மக்கள் தொகையில் 76% இருக்கும் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவம் சட்டமன்றத்தில் குறைந்துவிடவில்லை.

ஓபிசி எனப்படும் அவர்களில் குறிப்பாக மூன்று அல்லது நான்கு சாதியினரே அரசியல் அதிகாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் யார்?

முக்குலத்தோர், கவுண்டர், வெள்ளாளர், வன்னியர் ஆகியோர்தான் அந்த நான்கு சமுதாயத்தினர். இந்த சமுதாயங்களில் பல உட்பிரிவுகள் இருந்தாலும் இவர்களே கடந்த ஐம்பதாண்டு தமிழ்நாட்டின் சமூக, அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். இவர்கள் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மாவட்டங்களிலும் விரவியிருக்கிறார்கள்.

வன்னியர்கள் இப்போதைய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வரை அடர்ந்தும் விரவியும் இருக்கிறார்கள்.

1971 ஆம் ஆண்டில் இருந்து 2006 வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வன்னியர்களே பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகளை வைத்திருந்தனர். ராமசாமிப் படையாச்சியாரின் உழவர் உழைப்பாளர் கட்சி, டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி என்று வன்னியர்களுக்கு பிரத்யேக அரசியல் வடிவங்கள் இருந்தாலும்...திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிலும் வட மாவட்டங்களில் பெரும்பாலும் வன்னியர்களே கோலோச்சினார்கள். அதன் எதிரொலியாகவே சட்டமன்றத்தில் வன்னியர்களின் இடம் அதிகமாக இருந்தது.

இவர்களுக்கு இடையே 2011 ஆம் ஆண்டு முதல் தேவர்கள் என அழைக்கப்படும் முக்குலத்தோரின் அரசியல் அதிகார பிரதிநிதித்துவம் படிப்படியாக அதிகரித்தது. 91 இல் அதிமுக ஆட்சிக்கு வந்த சில வருடங்களில் அதிமுகவுக்குள் முக்குலத்தோர் அடையாளமாக கருதப்படும் சசிகலா, நடராஜன் ஆகியோரின் செல்வாக்கு ஓங்கியது. கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பிலும், சட்டமன்றத்தின் கட்டமைப்பிலும் அவர்கள் தங்களது சமூகத்தினரை பெருமளவு வளர்த்துவிட்டனர். இவர்களுக்கு ஈடு கொடுப்பதற்காக ஆங்காங்கே திமுகவும் முக்குலத்தோரை வளர்த்தது. இந்த காரணங்களால் தமிழகத்தில் 2000 ஆண்டுக்குப் பிறகு முக்குலத்தோரின் அரசியல் வளர்ச்சி வேகம் எடுத்தது என்றே சொல்லலாம்.

இதே காலகட்டத்தில் கொங்கு கவுண்டர்கள் எனப்படும் கொங்கு வேளாளர்களின் அரசியல் எழுச்சியும் உயரத் தொடங்கியது. வெள்ளாளர்களும் 1996 இலிருந்து சட்டமன்றத்தில் எண்ணிக்கை அடிப்படையில் எழுச்சி பெறத் தொடங்கினார்கள்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எழுச்சி!

2016 முதல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சதவிகிதம் சட்டமன்றத்தில் 6% இல் இருந்து 13% ஆக மாறியது. இவர்களில் பல்வேறு சிறுசிறு சமுதாயக் குழுக்கள் அடங்குவர். ஆனால் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் இவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்திருக்கிறது.

அதாவது இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலும் வன்னியர், தேவர், கவுண்டர்கள் ஆகிய மூன்று சமுதாயங்கள் மட்டுமே கடந்த இருபது வருடங்களாக கோலோச்சி வருகின்றனர்.

இருபதாண்டுகளில் யார் யார் எவ்வளவு?

திமுக:

கடந்த இருபதாண்டு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் எந்த சமுதாயத்தினர் எவ்வளவு சதவிகிதம் பிரதிநிதித்துவம் பெற்றனர் என்பதை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வெற்றிபெற்றவர்கள் மூலமாகவே நாம் பார்க்க முடியும். இவ்விரு கட்சிகள்தான் இந்த இருபதாண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கின்றன.

2001 இல் இருந்து 2021 வரை நடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் திமுக மொத்தம் 372 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. இந்த காலகட்டத்தில் 2006-11 இல் மட்டுமே திமுக ஆட்சி செய்தது.

இந்த 372 சட்டமன்ற உறுப்பினர்களில் 50 பேர் வன்னியர்கள். முக்குலத்தோர் 41 பேர், வெள்ளாளர்கள் 33 பேர், கவுண்டர்கள் 28 பேர். நாயுடு சமுதாயத்தினர் 31 பேர். பட்டியல் இன சட்டமன்ற உறுப்பினர்கள் 59 பேர் (99.99 சதவிகிதம் ரிசர்வ் தொகுதிகளில் இருந்து), முஸ்லிம்கள் 14 பேர். உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இந்த இருபதாண்டுகளில் 7பேர் மட்டும்தான் திமுகவில் சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார்கள்.

இந்தக் கணக்கு போக மீதியுள்ளவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இருக்கும் சிறு சிறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள்.

அதிமுக:

இதே 2001-2021 காலகட்டத்தில் அதிமுக 2001, 2011, 2016 என மூன்று முறை ஆட்சியில் இருந்துள்ளது. எனவே இந்த இருபதாண்டுகளில் 543 சட்டமன்ற உறுப்பினர்களை அதிமுக பெற்றிருக்கிறது.

இவர்களில் பட்டியலின சமுதாயத்தினர் 108 பேர். (தனித் தொகுதிகளில் இருந்துதான்) இவர்கள் தவிர முக்குலத்தோர் 88 பேர், கவுண்டர்கள் 83 பேர், வன்னியர்கள் 77 பேர், நாடார்கள் 22 பேர், நாயுடுகள் 18 பேர்.

இவர்கள் தவிர முஸ்லிம்கள் 8 பேர், வெள்ளாளர்கள் 15 பேர், செட்டியார்கள் 11 பேர் மற்றும் உயர் வகுப்பினர் 9 பேர் என அதிமுக சார்பில் இந்த இருபதாண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியுள்ளனர்.

2021 சட்டமன்றத்தின் சாதிச் சித்திரம்!

இப்போது 2021 சட்டமன்றத்துக்கு வருவோம். இந்த சட்டமன்றத்தில் வன்னியர்கள், முக்குலத்தோர், கவுண்டர்கள் ஆகிய சமுதாயத்தினர் மட்டுமே 43% பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் போக மீதியிருக்கும் இடங்கள் பல்வேறு சமுதாயங்களால் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கின்றன.

அதிமுக, திமுக கூட்டணிகளின் சாதிப் பிரதிநிதித்துவம்!

2021 சட்டமன்றத்தில் அதிமுக அணியைப் பார்த்தோமென்றால் அதிமுகவின் 66 சட்டமன்ற உறுப்பினர்களில் 46 பேர் பட்டியலினம், கவுண்டர்கள், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதிமுக வட மாவட்டங்களில் பெரும்பாலும் வீழ்ந்ததால் 8 வன்னியர் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருக்கிறது. பாமகவின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் வன்னியர்களே. பாஜகவின் 4 உறுப்பினர்களில் கவுண்டர்கள் 2, தேவர் 1, நாடார் 1 என்ற அடிப்படையில் இருக்கிறார்கள்.

இவ்வாறு இந்த 75 உறுப்பினர்களும் 18 விதமான சமுதாயங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்.

2021 இல் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் அவர்கள் பெற்றுள்ள 159 இடங்களில் 37 விதமான சமுதாயங்கள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன. இது பன்மைத்துவ முகமாகத் தெரிகிறது.

உதயசூரியன் வெற்றி பெற்ற 133 சட்டமன்ற உறுப்பினர்களில் 48 பேர் வன்னியர், கவுண்டர், முக்குலத்தோர் சமுதாயத்தவர்.

காங்கிரஸ் பெற்ற 18 சட்டமன்ற உறுப்பினர்களில் 14 விதமான சமுதாயத்தினர் இருக்கிறார்கள்.

முப்பெரும் சமுதாயங்கள்!

முக்குலத்தோர், கவுண்டர், வன்னியர் ஆகிய சமுதாயங்கள்தான் தமிழகத்தை பரவலாக பிரநிதித்துவப் படுத்துகின்றன.

வன்னியர்கள் சேலம், தர்மபுரியில் ஆளுமையாக இருப்பதோடு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வரையில் செல்வாக்கு காட்டுகிறார்கள். திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் அவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

கவுண்டர்கள் மேற்கு தமிழகத்தில் கோட்டை கட்டியிருக்கிறார்கள். ஈரோடு, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அவர்களின் வெற்றி அடர்த்தியாக இருக்கிறது.

முக்குலத்தோர் மத்திய, தெற்கு தமிழகத்தில் பலமாக இருக்கிறார்கள். தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் செல்வாக்கு காட்டியுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடக்கு மண்டலத்தில் வெள்ளாளர்கள் (முதலியார்) செல்வாக்கு செலுத்தியுள்ளனர்.

திராவிடக் கட்சிகளும் சாதியும்!

கடந்த ஐம்பத்து சொச்சம் ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இரு விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

திராவிட அரசியல் சாதியை முழுமையாகப் புறக்கணிக்கவில்லை. அந்தந்த பகுதிகளில் பெரும்பான்மையான சாதியினரின் கையிலேயே அரசியல் பிரதிநிதித்துவமும் இருக்கிறது. ஆனால், இந்தி பேசும் மாநிலங்களைப் போல அல்லாமல், சாதி பெருமை பேசும் போக்கைக் கட்டுப்படுத்தி, ஆதிக்க உயர் சாதி எதிர்ப்பை வலிமையாகக் கட்டமைத்துள்ளது.

இன்னொரு முக்கியமான தரவு, கடந்த ஐம்பதாண்டு திராவிட அரசியல் கிட்டத்தட்ட அனைத்து சமுதாயங்களின் பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளது.

தமிழ்நாடு பெற்றுள்ள இன்னொரு முக்கியப் பெருமை கடந்த அறுபதாண்டு கால வரலாற்றில் (ஜெ. சிறையில் இருந்தபோது முதல்வர் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், மற்றும் எடப்பாடி பழனிசாமி) தமிழகத்தின் முதல்வர்கள் யாரும் ஆதிக்கம் செலுத்தும் அடர்த்தியான சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

ஆங்காங்கே சாதிச் செல்வாக்கை ஆதரித்தாலும் முழுமையான வடிவில் சாதி சமத்துவத்தையும், அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தையுமே தமிழ்நாடு கடந்த ஐம்பத்து சொச்சம் ஆண்டுகளாக பிரதிபலிக்கிறது. அதன் தற்போதைய பிம்பம்தான் 2021 ஆம் ஆண்டின் சட்டமன்றம்.

ஆந்திரா போன்ற தென் மாநிலங்களையும், வட மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழ்நாடு அனைவருக்குமான அரசியல் பிரநிதித்துவத்தில் பல படிகள் முன்னே நிற்கிறது. இதற்குக் காரணம் நீதிக் கட்சி காலம் தொட்டே இங்கே பலமாக ஒலித்து வரும் சமூக நீதிக்கான, அனைவருக்குமான பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற உரிமைக் குரல்தான்.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் சாதி பார்த்து வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள் என்பது விமர்சனமாகத் தோன்றும். ஆனால் உனக்கான உரிமையை நீ அடைந்தே தீருவாய் என்ற கொள்கையின் நடைமுறையாக்கம்தான் இது.

தரவுகள் நன்றி: ஸ்க்ரோல்

(நாளை சட்டமன்றம் பற்றிய இன்னொரு அலசல்)

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 15 மே 2021