மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

38 மாவட்டங்கள்-185 சித்த மருத்துவர்கள்: கொரோனாவுக்கு எதிராக திரளும் நம்பிக்கை!

38 மாவட்டங்கள்-185 சித்த மருத்துவர்கள்: கொரோனாவுக்கு எதிராக திரளும் நம்பிக்கை!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஆங்கில மருத்துவ சிகிச்சையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருத்துவப் படுக்கைத் தட்டுப்பாடு என்று பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக அரசு சித்த மருத்துவ மருத்துவமனைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த அவசர சுகாதார நிலையில் தமிழகம் முழுக்க 38 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவை வெல்வதற்காக ஒரு தன்னார்வக் குழுவை அமைத்திருக்கிறார்கள்.

சித்த மருத்துவர்கள் இணைந்து, “மக்களைக் காக்கும் சித்தமருத்துவம்” என்ற தொடர் நிகழ்ச்சியை கடந்த ஓராண்டாக நடத்திவருகிறார்கள். இத்தொடரில் 24-வது நிகழ்வாக தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் இக்கட்டான கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மாவட்ட அளவில் உள்ள சித்த மருத்துவர்கள் அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் கைகோர்த்து தன்னார்வலர்களாக, காணொளி வழியாக (Tele Medicine ) ஆயுஷ் அமைச்சகமும், தமிழ்நாடு அரசும் வகுத்துள்ள வழிகாட்டலின்படி ஆரம்பகட்ட நிலையில் உள்ள மக்களுக்கு உதவ நம்முன் உள்ள வாய்ப்புகளைக் குறித்து கலந்துரையாட வரும்படி தனியார் சித்தமருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் இதுவரை 185 மருத்துவர்கள் பதிவுசெய்திருந்தார்கள்

இந்நிலையில், நேற்று (மே 13) இரவு 9 மணிக்கு , அனைவரையும் அழைத்து இணைய வழியாக ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 38 மாவட்டங்களிலிருந்து பதிவுசெய்த சித்தமருத்துவர்கள் கலந்துகொண்டு, இன்று சந்திக்கும் சவால்கள், அவர்களின் கள அனுபவங்கள், இதற்கு நாம் எப்படி அரசுடன் கைகோர்த்து மக்களைக் காக்கும் பணியில் துணைநிற்பது என்று விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், மருத்துவர்கள் தன்னார்வலர்களாக இணைந்து கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க அரசுக்கு ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டெலிமெடிசின் என்று சொல்லப்படும் முறையில் அனைத்து சித்த மருத்துவர்களும், அவரவர் வீடு அல்லது மருத்துவமனையில் இருந்தவாறே மக்களுக்கு பணி செய்யும் உத்தியை செய்ய முன்வந்துள்ளனர்.

கொரோனா குறித்த சந்தேகங்கள், வருமுன் காப்பது, குறிகுணம் (அறிகுறி) இல்லாத கோவிட், குறைந்த குறிகுணம் உடைய கோவிட், மிதமான குறிகுணம் உள்ள கோவிட், கோவிட் குணமான பின் மருத்துவ முறை, வீட்டில் இருந்தே ஹோம் குவாரன்டைன் முறையில் நோயாளி தன்னை பராமரிப்பது, எந்த நிலையில் மருத்துவமனை செல்வது, உணவுப் பழக்கம், என அனைத்தையும் அரசின் வழிகாட்டுதல்களின் பேரில் மக்களுக்கு தொலைபேசி/வீடியோ வழியாக தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், மருத்துவ மனைகளில் குவியும் கூட்டத்தை ஒழுங்கு படுத்த முடியும். தேவையான நோயாளிகள் மட்டுமே மருத்துவமனை செல்லும் போது, மருத்துவ பணியாளர்களுக்கும் பணிச்சுமை குறையும். தேவையான நோயாளிகளிக்கு படுக்கையும் தயாராக இருக்கும். இத்திட்டம், தமிழக அரசுக்கு பக்க பலமாக இருக்கும் என்று முடிவுசெய்யப்பட்டது.

தேசிய சித்த மருத்துவ இயக்குநர் டாக்டர்.மீனாகுமாரி பேசும்போது, இந்த தன்னார்வக்குழுவின் முயற்சியைப் பாராட்டி, “இது அவசியமான சேவை. இதற்கு பக்கபலமாக இருப்போம்”என்று உறுதியளித்தார். மேலும், “ இந்த டெலிமெடிசின் திட்டத்தில் ஈடுபடும் சித்த மருத்துவர்களுக்கு உரிய பயிற்சியையும், அரசின் வழிகாட்டுதல்களையும் தனது குழு வழங்கும்” என்று தெரிவித்தார்.

தேசிய சித்த மருத்துவ நிறுவன பேராசிரியர் டாக்டர்.கிறிஸ்டியன் பேசுகையில், “ ஒருங்கிணைந்த மருத்துவ முறையில் நவீன மருத்துவத்துடன் சித்த மருந்துகளையும் இணைத்து செய்யும் போது, வேகமாக முன்னேற்றம் கிடைக்கிறது. இறப்பு விகிதம் வெகுவாக குறைகிறது” என்றும் தெரிவித்தார்.

மணிப்பால் பல்கலைகழகத்தின் சித்த மருத்துவப் பிரிவின் ஆராய்ச்சியாளர் டாக்டர். அருள் அமுதன், இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று விவரித்தார்.

“மாவட்டம் தோறும் 20 சித்த மருத்துவர்கள் தன்னார்வலர்களாக செயல்பட்டால், ஒருவர் தினமும் 10 நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கினால், தினமும் 200 நோயாளிகள் வீதம், ஒரு மாதத்தில் 6000 நோயாளிகள் ஒரு மாவட்டத்தில் பயன்பெறுவர். இப்படி 38 மாவட்டங்களிலும் சேர்த்து வெகுவாக பயன்பெறுவர். நோயாளிகளை நோய் தீரும்வரை தொடர்ந்து கண்காணித்து வருதல் மற்றும் அவர்களின் தகவல்கள் ஆராய்ச்சிக்காக அரசிடம் ஒப்படைத்தல் என இந்த திட்டத்தை ஆராய்ச்சிப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார் அருள் அமுதன்.

வேலுமயில் சித்தா மருத்துவகல்லூரி பேராசிரியர் டாக்டர்.செந்தில் குமார், “அனைத்து மக்களுக்கும் தேவையான சித்தா மருந்துகள் மற்றும் மூலிகை பொருட்கள் கிடைக்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும்”என்று பேசினார்.

சாய்ராம் சித்தா மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர்.அனிதா, “ எம்.பி.பி.எஸ். படித்த சித்த மருத்துவர்கள் மற்றும் சித்தமருத்துவம் மீது நம்பிக்கை உள்ள நவீன மருத்துவர்களையும் இணைத்து ஒருங்கிணைந்த சிகிச்சை முறைக்கான அடித்தளத்தை இந்த திட்டத்திலேயே செயல்படுத்தும் சாத்திய கூறுகள் இருக்கின்றன” என்று கூறினார்.

சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர். கீதசுதீர், இரண்டாம் கோவிட் அலையில், முதல் அலையை விடவும் வீரியம் மிகுந்த சித்த மருந்துகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவரின் அனுபவத்தையும் பகிர்ந்தார்.

ஆயுஷ்பதி சங்கத்தின் தலைவர் டாக்டர்.அலெக்ஸ், “இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செய்ய அனைத்து சித்த மருத்துவர்களும் இணைந்து மாவட்ட அளவில் அரசுடன் கைகோர்த்து செயல்படுவது அவசியம். இந்த திட்டத்தின் மூலம் மக்கள் அடையபோகும் நன்மையை முன்னிறுத்தி செயல்படுவோம்” என்றும் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில், மருந்துகள் குழு, தன்னார்வ அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு , அரசின் புதிய வழிகாட்டுதல்கள் குழு, மருத்துவர்களின் பயிற்சி குழு, திட்ட ஒருங்கிணைப்பு குழு, ஒருங்கிணைந்த மருத்துவர் குழு, அவசர மருத்துவர்கள் குழு, இணைய குழு, என பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். அனைத்து குழுவும் அரசின் வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த பணியை செய்து முடிப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப் பட்டது.

விரைவில் இந்த குழு தன் பணியை செவ்வனே தொடங்கி, தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க அரசுடன் இணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. தமிழக அரசின் கொரோனா வாடிக்கையாளர் சேவை எண்ணான 104 உடன் இந்த திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட அளவில் சித்த மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு, மருத்துவர்களுக்கான பயிற்சி , ஒருங்கிணைந்த இணையதளம், வாட்ஸப் உதவி எண் , மாவட்ட அளவில் இதில் இணைந்து கைகொடுக்க விரும்பும் தன்னார்வ அமைப்புகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல கோணங்களில் தன்னார்வக் குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சித்த மருத்துவர்கள் இவ்வாறு அமைப்பாய் திரண்டால், அதற்கு அரசும் ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா இரண்டாம் அலையை நாம் விரட்ட முடியும் என்ற நம்பிக்கை ஒளி ஏற்படுகிறது.

மக்களைக் காக்கும் சித்த மருத்துவக்குழுவைத் தொடர்புகொள்ள 9003080524, [email protected]

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 14 மே 2021