மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

இரவு நேரக் காவலாளியின் மனித நேயம்: பாராட்டிய முதல்வர்!

இரவு நேரக் காவலாளியின் மனித நேயம்: பாராட்டிய முதல்வர்!

தனியார் நிறுவனம் ஒன்றில் இரவு நேரக் காவலாளியாக பணியாற்றி வரும் தங்கதுரை என்பவர் தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார்.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா என்ற உயிர்க் கொல்லி வைரஸ் தற்போது இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் என்றால் வேலைக்குச் செல்ல முடியாமல் ஏழை எளிய மக்கள், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே கஷ்டப்படுகின்றனர்.

இந்த சூழலில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இரவு நேரக் காவலாளி ஒருவர் தனது ஒரு மாத ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார்.

ஒரு நாள் தூக்கம் கெட்டாலே, உடலளவிலும், மனதளவிலும் சோர்வை ஏற்படுத்தும். ஆனால் இரவு நேரக் காவலாளிகள் தங்களது குடும்பத்துக்காக மாத கணக்கில் தூங்காமல் வேலை செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ அதிகபட்சம் 15 ஆயிரத்துக்குள் தான் இருக்கும்.

இப்படிப்பட்ட நிலையிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த கொரோனா காலத்தில், முதல்வர் நிவாரண நிதிக்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த தங்கதுரை தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியிருக்கிறார்.

59 வயதான தங்கதுரை சென்னை சாலிகிராமம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் இரவு நேரக் காவலாளியாக உள்ளார். இவருக்கு மாத சம்பளம் ரூ.10,101 மட்டுமே. இந்த தொகையையும் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்திருக்கிறார். போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மிதிவண்டியில் சென்று முதல்வரைச் சந்தித்து நிதி வழங்க முயன்றிருக்கிறார்.

ஆனால் அலுவல் காரணமாக முதல்வரைச் சந்திக்க முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பிய தங்கதுரை அந்த பணத்தை அரசு கணக்கில் செலுத்தி தனது கடமையை ஆற்றியிருக்கிறார்.

இதனை அறிந்த முதல்வர் ஸ்டாலின் இன்று தங்கதுரையை நேரில் அழைத்து அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்ததுடன் திருக்குறள் புத்தகம் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசின் வழிமுறைகளை பின்பற்றி கொரோனா பரவல் குறைய நாமும் உதவி செய்வோம்” என்றார்.

முதல்வர் வழங்கிய திருக்குறள் புத்தகத்துடன் காவலாளி உடையில் தங்கதுரை நிற்கும் புகைப்படம் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. அதோடு அவருக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

-பிரியா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

வெள்ளி 14 மே 2021