மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

பண்ணையாருக்குக் கொடுக்கப்பட்ட பலே அசைன்மென்ட்!

பண்ணையாருக்குக் கொடுக்கப்பட்ட பலே அசைன்மென்ட்!

தமிழக பாஜகவின் சட்டமன்றத் தலைவராக திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். உட்கட்சி ரீதியாக இதில் பற்பல விமர்சனங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்த நியமனத்தின் பின்னணியில், அடுத்த சில வருடங்களில் தமிழ்நாட்டு அரசியலில் புயலைக் கிளப்பும் வியூகம் உள்ளது என்கிறார்கள் தமிழக பாஜக பற்றி அறிந்த டெல்லி புள்ளிகள்.

தமிழக பாஜகவுக்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருக்கிறார்கள். திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, கோவை தெற்கு வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி சரஸ்வதி ஆகிய நான்கு பேர் பாஜக சார்பில் வெற்றிபெற்றனர்.

இந்நிலையில், கடந்த மே 9 ஆம் தேதி கமலாலயத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் டாக்டர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொறுப்பாளர்களான மத்திய இணையமைச்சர் ‌கிஷன்ரெட்டி, தேசிய பொதுச்செயலாளர் C.T.ரவி, சுதாகர் ரெட்டி மற்றும் பாஜக சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்க சட்டமன்ற உறுப்பினர்களான காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவரான நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை விட டெல்லியால் நியமிக்கப்பட்டார்.

“பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பேரில் கட்சியின் மிக சீனியர் என்றால் அது காந்திதான். பாஜகவில் மட்டுமல்ல; ஆர்எஸ்எஸ்ஸிலும் சீனியர் காந்திதான். திமுகவின் வலிமையான சுரேஷ் ராஜனைத் தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆகியிருக்கிறார். அவரை அடுத்த சீனியர் என்றால் வானதி சீனிவாசன்தான். தேசிய மகளிரணி பொதுச் செயலாளராக இருக்கிறார். நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். ஆனால், இந்த இரு சீனியர்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு... அதிமுகவில் இருந்து வந்த நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாநிலத் தலைவர் முருகனின் அரசியல் விளையாட்டுதான் காரணம்” என்று மாநில அளவில் பாஜகவுக்குள் விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து வானதியை ஒதுக்கி நயினாரை செலக்ட் செய்த முருகன் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில்தான் நயினார் நாகேந்திரன் நியமனத்தில் நடந்திருக்கும் இன்னொரு புயல் பின்னணி டெல்லியில் இருந்து கிடைத்துள்ளது.

“தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டது. அதிமுக 170 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜகவோ 20 தொகுதிகளில்தான் போட்டியிட்டது. ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அவரது கூட்டணிக் கட்சியினர் எல்லாமே, ‘தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டால் அது பாஜகவுக்கு ஓட்டு போட்ட மாதிரிதான்’என்று பிரச்சாரம் செய்தனர். இன்னும் ஒரு படிமேலே போய் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ‘அதிமுகவை பாஜக விழுங்கிவிடும். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஜெயித்தார்கள் என்றால் அவர்களை பாஜக மிரட்டி தன் பக்கம் சேர்த்துவிடும்’ என்றெல்லாம் பேசினார்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி அதிமுக 66 இடங்களில் ஜெயித்தது. புதுச்சேரியில் கூட்டணி வைத்து ஜெயித்த முதல்வர் ரங்கசாமிக்கு எப்படி பாஜக உடனே குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளதோ அதேபோல, தமிழகத்திலும் சற்று அவகாசம் எடுத்துக்கொண்டு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அதாவது அதிமுக இப்போது ஜெயித்திருக்கும் 66 எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் ஒரு பகுதியினரை பாஜக பக்கம் இழுப்பதுதான் அக்கட்சியின் திட்டம். இது உடனே செய்யப்படாது. இரண்டு சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் முடிந்த பிறகுதான் இதை பாஜக செய்யத் தொடங்கும். அதற்குத் தோதாகத்தான் அதிமுகவில் இருந்து வந்த நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியை அளித்துள்ளது பாஜக மேலிடம். தேசியக் கட்சியில் மாநிலத் தலைவருக்கு உரிய மரியாதை, சட்டமன்ற கட்சித் தலைவருக்கும் அளிக்கப்படும்.

நயினாருக்கு ஏற்கனவே டெல்லி தொடர்புகள் வலிமையாக உள்ளன. அவருக்கு ஏற்னவே அதிமுகவிலும் பலர் நண்பர்களாக இருக்கிறார்கள். தற்போது எம்.எல்.ஏ.க்களாக ஆகியிருப்பவர்களில் பலரும் நயினாரின் நண்பர்கள்தான். அந்த அடிப்படையில் அவசரப்படாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினரை பாஜக பக்கம் கொண்டுவரும் அசைன் மென்ட் டெல்லியில் இருந்து நயினாரிடம் தரப்பட்டிருக்கிறது. அதற்கான பணம், பவர், பலம் உள்ளவர் என்ற அடிப்படையில்தான் பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி எம்.ஆர். காந்தி, வானதி சீனிவாசன் ஆகியோரைத் தாண்டி நயினாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நயினாருக்கு நெல்லையில் பண்ணையார் என்ற பெயர் உண்டு. அரசியல் வட்டாரம் தாண்டியும் அவர் பண்ணையார் என்றே அழைக்கப்படுகிறார். பண்ணையாரிடம் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் அடிப்படையில் அவர் இப்போதே செயல்படத் தொடங்கிவிட்டார்" என்கிறார்கள்.

-ராகவேந்திரா ஆரா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வெள்ளி 14 மே 2021