மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

அரசு வழக்கறிஞர் பதவி: காத்திருக்கும் திமுகவினர்!

அரசு வழக்கறிஞர் பதவி: காத்திருக்கும் திமுகவினர்!

பொதுவாகவே மாநிலத்தில் ஆட்சி மாறும்போது, முந்தைய ஆட்சியால் நியமிக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள் மாற்றப்படுவார்கள். அதிலும் குறிப்பாக உயர் நீதிமன்றங்கள் முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞர்கள் உடனடியாக மாற்றப்படுவார்கள்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கடந்த மே 7 ஆம் தேதியன்று பதவியேற்றது. ஆட்சிக்கு வந்து ஏழு நாட்கள் ஆகியும், அரசு தலைமை வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) சண்முக சுந்தரம் நியமனம் தவிர மற்ற முக்கிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை.

புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படும் வரை ஏற்கனவே நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களே வழக்குகளை நடத்தலாம் என்று தலைமை நீதிபதி கூறிய நிலையில்... மே 13 ஆம் தேதி சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களுக்கான சில அரசு வழக்கறிஞர்கள் நியமனங்கள் பற்றிய ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிவில் வழக்குகளுக்கான வழக்கறிஞர்களாக பி. முத்துக்குமார், பி. நீலகண்டன், சி. ஹர்ஷராஜ், எஸ்.ஜான் ஜெ.ராஜாசிங், ஏ.ஷப்னம் பானு ஆகியோரும் குற்றவியல் அரசு வழக்கறிஞர்களாக ஏ.தாமோதரன், ஆர். முனியப்ப ராஜ், ஜே.சி. துரைராஜ், இ.ராஜ் திலக், எல்.பாஸ்கரன், ஏ.கோபிநாத் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கான தமிழக அரசின் சிவில் வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன், பி.திலக் குமார், ஆர்.பாஸ்கரன், ஏ.கே.மாணிக்கம் ஆகியோரும்...குற்றவியல் அரசு வழக்கறிஞர்களாக எஸ்.ரவி, எம்.முத்து மாணிக்கம் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிவில், கிரிமினல் பிரிவுகளுக்கான அரசு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 11 பேரும், மதுரை உயர் நீதிமன்றத்துக்கு 6 பேருமாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஆணையில் இருப்பவர்களின் விவரங்களை அறிந்து திமுக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் வருத்தம் வரவேற்பு, புலம்பல் என கலவையான எதிர்வினைகள் நிலவுகின்றன.

இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளிலேயே வழக்கறிஞர் அணியை முதலில் உருவாக்கியது திமுகதான். வழக்கறிஞர் அணியை உருவாக்கியதோடு மட்டுமல்ல, அதன் செயல்பாடுகளிலும் தீவிரம் காட்டியது திமுகதான். நீட் தேர்வு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளில் நீதிமன்றங்களில் பல்வேறு சட்டப் போராட்டங்களை திமுகவின் வழக்கறிஞர் பிரிவு நடத்தி வருகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை வரை திமுக வழக்கறிஞர்களின் செயல்பாட்டினை தேர்தல் ஆணையத்தினரே பார்த்து பாராட்டினார்கள். குறிப்பாக திமுக வழக்கறிஞர் பிரிவு தயாரித்துக் கொடுத்த, ‘ கையேடு 13’ என்ற வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புக்லெட்டில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பற்றியும் வாக்குப் பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை வரை எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து தேர்தல் அதிகாரிகளே பாராட்டினார்கள். இப்படிப்பட்ட திமுகவின் வழக்கறிஞர் அணியில் தேர்தல் பணியாற்றியவர்கள் மட்டுமே சுமார் 1500 பேர் இருக்கிறார்கள்.

ஆட்சி மாறி ஒரு வாரம் ஆகியும் சென்னை உயர் நீதிமன்றம் தொடங்கி தமிழகம் முழுதுள்ள மாவட்ட நீதிமன்றங்களின் அரசு வழக்கறிஞர் பணிகளை எதிர்பார்த்து திமுகவினர் காத்திருக்கிறார்கள்.

-வேந்தன்

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

வெள்ளி 14 மே 2021