மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

ஸ்டாலின் - மோடி சந்திப்பு: காத்திருக்கும் சசிகலா

ஸ்டாலின் - மோடி சந்திப்பு: காத்திருக்கும் சசிகலா

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் சசிகலாவின் ரியாக்‌ஷன் என்ன என்ற கேள்வி முக்கியமானதாக எழுந்தது. திமுக ஆட்சியைப் பிடித்தாலும் அதிமுக 65 இடங்களைப் பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 11 அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினாலும் சேலம், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அதிமுக பெற்ற பெருவெற்றி, எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆக்கிவிட்டது.

இந்தத் தேர்தல் முடிவுகள், அதற்குப் பிறகான நிகழ்வுகளுக்கு சசிகலாவின் ரியாக்‌ஷன் என்ன?

அதிமுக பொதுச் செயலாளராகத் தான் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், 2017 செப்டம்பர் 12ஆம் தேதி பொதுக்குழுவில் சசிகலாவைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியும், தினகரனை துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியும் எடப்பாடியும் பன்னீரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். மேலும் பன்னீரை ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடியை இணை ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்துக் கொண்டனர்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தொடுத்த வழக்கு, அதன்பின் சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு (சென்னை சிட்டி சிவில் கோர்ட்) மாற்றப்பட்டு நடந்து வருகிறது. ஒரு கட்டத்தில் டிடிவி தினகரன் தான் தனிக்கட்சி தொடங்கிவிட்டதால் இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.

அதேநேரம் கடந்த மார்ச் 3ஆம் தேதி, ‘அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறேன்’ என்று அறிவித்த சசிகலா இந்த வழக்கை கைவிடவில்லை. தொடர்ந்து நடத்தி வருகிறார். சசிகலா தொடர்ந்த வழக்கை ரத்து செய்யும்படி பன்னீர், எடப்பாடி சார்பில் மனு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு நீதிபதி விடுப்பின் காரணமாக வரும் ஜூன் 18ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில்தான் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு, திமுக ஆட்சி அமைத்து அதிமுக தோல்வி அடைந்தது. அமமுக பெரிய அளவில் வாக்குகள் வாங்கவில்லை என்றாலும், அதிமுகவின் வெற்றியை பாதித்திருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் எதிர்க்கட்சித் தலைவர் தேர்விலும் எடப்பாடிக்கும், ஓ.பன்னீருக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

சென்னை சிட்டி சிவில் கோர்ட் வழக்கு, தேர்தல் ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கு என எல்லாமே சசிகலா அரசியலில் இன்னும் இருப்பதற்கான ஆதாரங்கள். மேலும் கடந்த தேர்தலில் தன்னை சந்தித்த அமமுக வேட்பாளர்களுக்கு ஆசி வழங்கினார் சசிகலா. இந்த நிலையில் சசிகலா தனக்கு நெருக்கமானவர்களைச் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சசிகலாவைச் சந்தித்த சிலரிடம் பேசினோம்.

“சசிகலாவைப் பொறுத்தவரைக்கும் அதிமுகவின் இந்தத் தோல்வி எதிர்பார்த்ததுதான். அதேநேரம் இன்னொன்றையும் அவர் எதிர்பார்த்தார். அதிமுக தோல்வி அடைந்ததும் ஒரு பகுதியினர் தன்னை சந்திக்க வருவார்கள் என்று நினைத்தார். ஆனால், உடனடியாக யாரும் சசிகலாவைச் சென்று சந்திக்கவில்லை. அதேநேரம் சிலர் தொடர்ந்து சசிகலா தரப்போடு பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பிடித்து முன்னேறிக் கொண்டிருப்பது போல ஒரு தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சசிகலா இப்போது காத்துக் கொண்டிருக்கிறார்.

‘பாஜகவுக்கு இனி எடப்பாடியின் தயவு தேவையில்லை. ராஜ்யசபாவிலும் அதிமுகவின் பிரதிநிதித்துவம் குறைந்துகொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் பதவியேற்ற திமுக அரசு ஏற்கனவே எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் புகார் பட்டியலை ஆளுநருக்குக் கொடுத்திருந்தது. இப்போது புதிய அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக கந்தசாமி ஐபிஎஸ் பதவியேற்றிருக்கிறார். சிபிஐ அதிகாரியாக மும்பையில் பணியாற்றியபோது அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவை, போலி என்கவுன்ட்டர் வழக்கில் விசாரித்தவர் இந்த கந்தசாமி. இதுபோல பல வழக்குகளில் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து அரசியல்வாதிகளை அலறவிட்டவர். எனவே அவரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமித்திருப்பது எடப்பாடிக்கு எதிரான ஸ்டாலினின் ஒரு வலிமையான நடவடிக்கைக்கு துவக்கப் புள்ளி' என்று கருதுகிறார் சசிகலா.

மேலும் புதிதாகப் பதவியேற்ற மாநில முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது வழக்கம். இப்போது கொரோனா காலமாக இருப்பதால் இதையெல்லாம் முடித்துவிட்டுத்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் செல்ல இருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணத்தை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார் சசிகலா. ஏனென்றால் ஏற்கனவே ஜெயலலிதா முதல்வரான பின் டெல்லி சென்று பிரதமரை சந்தித்துவிட்டு வந்த பிறகு, அவரது டிப்ளமேட்டிக் அணுகுமுறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்தவர் சசிகலா. அந்த வகையில் இப்போதும் புதிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி சந்திப்பை எதிர்பார்த்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது எடப்பாடி உள்ளிட்ட முன்னாள் ஊழல் அமைச்சர்கள் மீதான நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசுவார். இதில் பாஜகவின் தலையீடு வேண்டாம் என்றும் ஸ்டாலின் பிரதமரிடம் கேட்பார். ஸ்டாலினும் மோடியும் ஒன் டு ஒன் பேசும்போதுதான் இந்த விஷயத்தில் ஒரு முடிவு கிடைக்கும். நேற்று தனக்கும், தினகரனுக்கும் நடந்தது நாளை எடப்பாடிக்கும் நடக்கும். அப்போதுதான் அதிமுகவில் தான் எதிர்பார்த்தது நடக்கும் என்று கருதுகிறார் சசிகலா. எனவே ஸ்டாலினின் டெல்லி பயணத்துக்காகவும், அதன் பின் நடக்கும் அரசியல் மாற்றங்களுக்காகவும் தற்போது காத்திருக்கிறார் சசிகலா” என்கிறார்கள்.

அரசியல் என்பது சாத்தியக் கூறுகளின் சங்கிலித் தொடர்தானே... அதைத்தான் சசிகலா இப்போது செய்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

-ராகவேந்திரா ஆரா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 14 மே 2021